ஶ்ரீ:
பதிவு : 577 / 767 / தேதி 09 ஜூன் 2021
* ஒற்றைச் சொல் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 55.
1992 களி்ல் புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது தவறுகளில் இருந்து அரசியல் என்பதே தலைவர்களுக்கு இடையேயான ஆளுமை சிக்கல் , அதன் மைய இயங்கு விசை என்ன எனப் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கையில் சண்முகத்தின் கவனம் மரைக்காயர் மீது முழுவதும் பதிந்திருந்தது . தனது தேர்தல் தோல்விக்கு அடிப்படைக் காரணமாக அவரை புரிந்திருந்தார். அப்போது நரசிம்மராவின் அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவியில் இருந்தார் மரைக்காயர் . மந்திரிசபையில் இருந்து அவரை கழற்றும் முயற்சியில் வெற்றிபெறும் இறுதிக்கணத்தில் சண்முகம் இருந்தார். சண்முகம் மரைக்காயரை மத்திய அமைச்சரவையில் இருந்து கழற்றி மீண்டும் மாநில அரசிலுக்குள் தனது கவனத்தை திருப்பிய போது ,மரைக்காயர் மாநில அரசியலில் வேறுவித நகர்வுகளை செய்து முடித்திருந்தார். எனக்கு அது அரசியலின் கற்றலைக் கொடுக்கத் துவங்கிய பரவசமான காலம். பதவியை இழந்து புதுவைக்கு திரும்பும் மரைக்காயருக்கு அவர் விட்டு சென்ற அனைத்தும் அப்படி அதனதன் இடத்தில் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் காட்ட நினைத்தனர் . அது ஒரு அசட்டுத்தனம் என அனைவருக்கும் தெரியும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுவைக்கு வரும் வழியில் அவருக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடாகியிருந்தது . வைத்திலிங்கம் மரைக்காயர் கோஷ்டியாக அறியப்பட்டதால் பாலன் முதல்வருக்கும் மரைக்காயருக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருந்தார். ஆகவே அந்த வரவேற்பில் கலந்து கொள்ள எங்களுக்கும் அழைப்பிருந்தது . நான் பாலனுடன் ஜிப்மர் அருகே காத்திருந்த போது அங்கு வந்து சேர்ந்த “வெள்ளாழத்தெரு” கிருஷ்ணமூர்த்தி என்னையும் ஏம்பலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தெய்வநாயகத்தையும் அங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த விஜிபி நகர் என்கிற பகுதிக்கு அழைத்துச் சென்றார். இது பாலனை சீண்டுவது, பாலன் அமைதியாக இருக்க நான் அவருடன் சென்றேன் . திண்டிவனம் புதுவை சாலையின் அந்த பகுதி வளைவுகளற்று நேராக இருந்ததால் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் வண்டியைக் பார்க்க இயலும் . அங்கு காத்திருந்தோம் . சற்று நேரத்தில் மரைக்காயரின் பெனஸ் வண்டியை பார்த்தும் அனைவரும் பரப்பரப்பாயினர். ஏறக்குறைய நடு ரோட்டில் அவர் கார் மறிக்கப்பட்டு, எங்களை நோக்கி இறங்கி வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி “யாரெல்லாம் ஓடிப்போனார்கள்” என்று . மாநில முதன்மை ஆளுமையின் அந்த நேரடித்தன்மை என்னை துணுக்குற வைத்தது. பதில் சொல்லாமல் புன்னகையுடன் மரைக்காயருக்கு தெய்வநாயகம் சால்வை அணிவித்தார் அது எதற்காக என்று திகைப்படைந்தேன். தான் இன்னும் அவருடன்தான் இருப்பதாக அவருக்கு சொல்ல நினைத்திருக்கலாம் . அனைவரும் புதுவையை நோக்கி புறப்பட்டதும் கிருஷ்ணமூர்த்தி மரைக்காயர் காரில் ஏறுக்கொள்ள நானும் தெய்வநாயகமும் என் காரில் தொடர்ந்தோம் . மரைக்காயர் தன்னை நோக்கி கேட்டதை மறுமுறை சொல்லி தெய்வநாயகம் வெடித்துச் சிரித்தார் . தலைவர்கள் வேறு மாதிரியானவர்கள் அவர்கள் பேச்சிலும் நடத்தையிலும் அந்த வித்தியாசம் தெரியும் என ஒரு மாதிரி புரிந்து வைத்திருந்தேன் . அது ஒரு அசட்டுத்தனம் முதிரா இளைஞனின் கற்பனை . ஒரு சிக்கலில் அனைவரும் ஒரே போலத்தான் சிந்திக்கிறார்கள் தலைவர்கள் தொண்டர்கள் என்கிற வேறுபாடு அதில் இல்லைப் போல என நினைத்துக் கொண்டேன். அது ஒரு சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது.
இளைஞர் காங்கிரஸ் என்னும் சிறிய வட்டத்தை விட்டு நான் மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தேன் . அதைத் துவக்கி வைத்தது பாலன். 1991 தேர்தல் தோல்விக்கு பிறகு பாலன் அனைத்தின் மீதும் தனது நம்பிக்கை இழந்திருந்த நேரம். மரைக்காயர் மற்றும் வைத்திலிங்கம் என இருவருடனும் பாலன் இனக்கமாக இருந்தார். அரசியலை நம்பி அவரை அதுவரைப் பின் தொடர்ந்து கூட்டத்திற்கு அவர் ஏதாவது உதவிட இயலும் என்கிற எண்ணமும் ஆட்சி அமர்ந்து இரண்டு வருடமாகிய பின்னரும் அனைத்தும் கல் போல ஒரே இடத்தில் எப்பக்கமும் நகராமல் இருந்து கொண்டிருந்தது . பாலன் மீது வருத்தமும் கோபமும் இருந்தாலும் எல்லோரும் அமைதி காத்தனர். நிலைமை சரியில்லை என புரிந்து கொண்ட பாலன் தன்னை தக்கவைத்துக் கொள்ள கூட்டிய கூடுகையில் முதல் நிலைத் தலைவர்கள் அவர் மீது தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி பேசினர் . அவர்களுக்கு அதைச் செய்யும் நிர்பந்தம் இருந்தது. மூத்த துணைத் தலவரான பூங்காவனத்தால் அந்த நிலையை எளிதில் கடந்து செல்ல முடியவில்லை அவரை போன்றவர்கள் 45 அகவையை கடந்தவர்கள். தங்களுக்கான எதிர்காலம் என ஒன்றில்லை என்கிற ஆதங்கம் அவரது பேச்சில் வெளிப்பட்டது ஏறக்குறைய அது குமுறளின் எல்லையில் அழுகையாக வெளிப்பட்ட போது அனைவரும் அவரது உணரச்சிகரத்தால் அடித்துச் செல்லப்பட்டதை பார்க்க முடிந்தது . பூங்காவனம் தனது கோரிக்கையை பிறர் பொருட்டு முன்வைத்தார்,அதை கோரிக்கை என்பதை விட அது ஒரு மன்றாட்டு . முழு கூட்டமும் உணர்ச்சி கொந்தளிப்பின் விளிம்பில் இருந்தது . கையறு நிலையில் ஒரு அரசியல் இயக்கம் நின்று கொண்டிருந்ததை நான் முதலும் கடைசியுமாக அங்குதான் பார்த்தேன். அந்த நோடி அந்த இயக்கத்தின் மரணம் .இறுதியில் பேசிய பாலன் அவரை கண்டித்து பேசிய சில வார்த்தைகள் எனக்கு அவர் மீது ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது . அரசியலின் உண்மையான களத்திற்கு வெளியே இவர்கள் இவ்வளவு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எந்த எதிர் காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள் . அப்படி ஒன்று அவர்களுக்கு இருக்கிறதா? அப்படி ஒன்று இருந்தால் அங்கு அவர்களுக்கு என்ன உறுதி யாரால் அளிக்கப்படும் என்கிற கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. பாலன் சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை மாநில அரசியலின் மைத்திற்கு அழைத்து செல்வார் என நினைத்துக் கொண்டருந்தவர்கள் மத்தியில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் . ஆனால் அவர் அங்கு என்னை அழைத்துச் செல்வார் என நான் நம்பிக்கையை இழந்துவிட்டருந்தேன். இருப்பினும் அவர் சட்டமன்றத்திற்கு செல்வதனூடாக திறக்கும் கதவுகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி் தரும் என்றுத,பின் அது அங்கிருந்து வெளியே செல்லும் சுதந்திரத்தை எனக்கு திறந்து வைக்கும் என உறுதியாக நினைத்திருந்தேன் .
பூங்காவனத்தின் மன்றாட்டிற்கு ஆறுதலாக எதாவது சொல்லுவார் என எதிர்பார்த்த எனக்கு அவருக்கு கண்டனம் போல ஒன்றை பாலன் முன் வைத்த போது என்னால் அதை ஏற்க இயலவில்லை. அது யாருக்கும் முக்கியமில்லாத ஒரு தருணம் யாரைப்பற்றியும் யாருக்கும் எந்த அக்கரையும் அற்ற அந்த புள்ளி அதிலிருந்து நான் வெளியேற நினைத்துக் கொண்டிருந்தேன். எப்படி எங்கு எந்த கேள்விக்கும் அப்போது என்னிடம் பதிலில்லை .அரசிலில் ஈடுபடுவது என்கிற எண்ணம் தோன்றியதும் இளைஞர் காங்கிரஸ் எனது தேர்வாக இருந்தது . அதன் தலைவராக இருந்த பாலனை ஏற்பது மட்டுமே எனக்கான வழி. அதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை . இன்றுவரை அந்த முடிவு தவறானதாக நான் நினைக்கவில்லை. பின்னர் அது நான் நினைத்த உச்சத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . அதன் செயல்பாடுகளிலும் பின்னர் நான் தனிப்பட்டு முன்னெடுத்த அனைத்து விஷயங்களுக்குமே இளைஞர் காங்கிரஸ் களம் எனக்கு சொல்லிக் கொடுத்ததே. அதனால் தான் நான் பாலனை விட்டு வெளியேற நினைக்காமல் அங்கிருந்து எனக்கான உயரத்தை நோக்கிய பயணம் பற்றிய கனவிலிருந்தேன். எங்கோ ஒரு கதவு திறக்கும் என்கிற என் ஆழ்மன நம்பிக்கையை எப்போதும் போல அப்போதும் நான் கைவிடவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக