24.04.2021
அன்பிற்கினிய ஜெ, வணக்கம்
நலம் ,உங்கள் நலத்தை விழைகிறேன் .
மீண்டும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தொடர்ந்து சிறு சிறு குடும்ப நிகழ்வுகளினால் அடித்து செல்லப்பட்டு இரண்டு நாள் உங்கள் தளத்தை திறக்கவில்லை . புதுவை வெண்முரசு கூடுகைக்கான வாட்ஸப்பில் நண்பர் தண்டபானி துரைவேல் “குமரித்துறைவி” பற்றி சிறு குறிப்பு எழுதி இருந்தார் . அதன் பின்னரே உங்கள் அறுபது துவக்கம் பற்றிய பதிவும் பின்னர் “குமரித்திறைவி” குறுநாவலையும் கண்டேன் . 150 பக்கம் என பயமுறுத்தி இருந்ததால் சற்று தயக்கத்துடன் துவங்கினேன், ஆனால் எதிர்பாரமல் அது சட்டென உள்ளிழுத்துக் கொண்டது.
நீண்ட நாட்களுக்கு பிறகு மதியம் தொடங்கி நள்ளிரவு முடிக்கையில் எழுந்த உணர்வுகள் கட்டுக்கடங்காமல் கொந்தளித்த படி இருந்தது . ஒருபக்கம் வாசித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக சற்றும் அறுபடாத வேறொரு பல தளத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன் . மனம் பலவாறு பிளவுபட்டு அடுக்கடுக்கான தளங்களில் அறுபடாது பயணப்பட்டபடி இருந்த ஒன்றை நான் இதுவரை அனுபவித்ததில்லை. வாசித்து முடியும் வரை கண்களில் நீர் வழிந்து கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை.
ஒரு புள்ளியில் என்னை “உதயன் செண்பகராமனாக” மனம் பிரமிக்க துவங்கியதும்,ஒரே சமயத்தில் மனம் இறந்தகால நினைவுகளில் பாய்ந்து அலைக்கழிந்தும் எதிர்காலத்தில் நுழைந்து திளைத்தும் கொண்டிருந்தது . இவை அத்தனையையும் பார்த்தபடி நான் தனித்து வாசித்துக்கொண்டு இருப்பதாக பட்டது . மேலே சொன்ன அத்தனை உணர்வுகளையும் பார்ப்பவனாக அதில் எதிலும் நிலை கொள்ளாத மனநிலையில் இருந்தது , இப்போது நினைத்துப் பார்க்கும் போது விசித்திரமாக இருக்கிறது.வாசிப்பு என்பது அதன் அழகியலை அள்ளி அள்ளி உள்ளே நிரப்புவதற்காக , பசி தாகம் போல
வாழ்நாள் முழுவதும் பிறர் துணியாத செயல்களை தேடி அதில் ஈடுபட்டிருக்கிறேன் , எந்த ஒரு எதிர்பார்பும், பலனுமின்றி. ஆனால் அதன் விளை பொருளை சிறிது காலம் கழித்து உணரும் போது , அவற்றினால் உருவான பல புள்ளிகளை இணைத்து ஒரு இறுதிக் கருத்தை உருவாக்கி கொள்வதும்,அதிலேயே நீடிக்க விரும்பியும், பின்னர் காலத்தால் அதிலிருந்து நழுவி விலகும்படி ஆகும் போது குழம்பிப் போவதுமாக எனது கடந்த காலம் இருந்திருக்கிறது.
செயல்களினால் மட்டுமே நான் எல்லோராலும் அறியப்பட்டிருக்கிறேன். ஈடுபட்ட துறைகளில் அதன் உச்சத்தில் இருந்திருக்கிறேன்.ஆனால் ஊழ் என்னை அங்கே நிரந்தரமாக தங்க விட்டதில்லை.அது பற்றி தாளாத வருத்தம் இருந்தது.ஆனால் இப்போது இல்லை.அவற்றிலிருந்து விலகி நின்று பார்கையில் ஒவ்வொன்றிலிருந்தும் வேறொரு அனுபவத்தின் நிமித்தமாகவே அவை நிகழ்ந்தன , அதலிருந்து நிறைவும் அடைந்ததை இப்போது நினைவுகூறுகிறேன்.ஆனால் அந்த அரிய அனுபவத்தால் ஆவது என்ன என புரியவில்லை . வாழ்கையை மிக எளிதாக வாழ அவ்வளவு வலியும, விலகலும் தேவை போலும்.
கடந்த காலத்தில் அரசியல்,வியாபாரம்,ஆண்மீகமென என தொடர்ச்சியாக பல துறைகளில் முன்னெடுத்த பெரிய முயற்ச்சிகளில் விளைந்த சாதக பாதகங்க அனுபவங்கள் தேங்கி மறந்து போனவை நாவலை வாசித்த கணங்களிலுல் மீளவும் முளைத்துக் கொண்டிருப்பதை தலைமுழுவதுமாக நிறைந்துக் கொண்டிருப்பதை ‘பார்த்துக்’ கொண்டிருந்தேன்.
இன்று,இங்கிருந்து பார்க்கையில் அவற்றில் வென்றதே அதிகம் என நினைக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு வெற்றிக்கு பிறகு தருக்கலும் தளும்பலும் பின்னர் ஒரு சிறிய உருத்தலும்,அவமதிப்புமாக அவை நிகழ்ந்ததை நான் மட்டுமாக அறிந்திருக்கிறேன்.அடைந்த வெற்றி பிறரின் மதிப்பும் செல்வாக்கும் என்னை அசைக்காத்தற்கு அந்த வெற்றிக்குபின் இருந்த எனக்கு மட்டுமே தெறிந்த அவமதிப்பு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.அதனால் முயற்சி பலனை கொடுக்கும் இறுதி கணத்தில் அதிலிருந்து முற்றும் விலகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.நாவலில் நான் தனித்து பெற்ற அனுபவங்களை தொட்டுக்காட்டிய இடங்களில் திடுக்கிடுதலை உணர்ந்தேன்.
“இரணியசிங்கநல்லூரின் தாழ்ந்த கூரைகொண்ட வீடுகளும் ஓராளுயர மண்கோட்டையும் தெரியலாயின. நான் சாய்வெயில் விரிந்த மாலையில் என் கோட்டைக்குள் நுழைந்தேன். கோட்டைக்கு வாசலுண்டு, ஆனால் கதவுகள் இல்லை. நூறாண்டுகளுக்கும் மேலாக காவலுமில்லை”
என்கிற வரி மனத்தில் கரையாமல் நின்று கொண்டிருக்கிறது.இந்த எளிமையை கட்டற்ற தன்மையை உருவாக்கவே இவ்வளவு செயல்கள் தேவையாகிறது போலும் .
வாசிக்கையில் உங்களின் 2022 திட்டம் குறித்து பலவித கற்பனை எண்ணங்கள் ஏன் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என புரியவில்லை. ஆனால் “அறுபதும் அன்னையும்” பதிவையும் இணைத்து இன்னதென புரியாத அவிழாத பொதிகளை போல ஆழ்மனதில் அடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.அவை அவழும் கணம் அதற்கு விடை கிடைக்கலாம்.இவ்வளவு எழுதி குவித்த பிறகும் தேடலின் வலி குன்றாது இருப்பதை பார்க்கும் போது வாழ்கை அப்படிபட்டதே என்கிற சமாதனம் அடைகிறேன்
ஆழந்த நட்புடன்
கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக