https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

அடையாளமாதல் * எண்ணிக்கையும் தொடர்பும் *

                                                              ஶ்ரீ:



பதிவு : 564  / 754 / தேதி 12 பிப்ரவரி  2021


* எண்ணிக்கையும் தொடர்பும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 42.





இளைஞர் அமைப்பை சண்முகம் நோக்கி கொண்டு செல்ல எனக்கு சில தனிப்பட்ட நோக்கங்கள் இருந்தாலும் , பிற அரசியல் தலைவர்களில் அவர் மாறுபட்டவராக இருந்தது அடிப்படை காரணம் . அவர் காமராஜரை ஆதர்சமாக , காந்திய சிந்தனை கொண்டவராக தன்னை முன்வைத்தார் . அந்த அடையாளத்துடன் இறுதி கணம் வரை முயற்சித்தபடி இருந்தார் . 60 வருடங்களுக்கு மேலாக ஒரே கட்சியில், அதிகாரத்தில் இருந்தும் தனது வழிமுறைகளை, விழுமியங்களை மாற்றிக் கொள்ளவில்லை அதுவே ஒரு சாகசம் என நினைக்கிறேன். அறம் காலத்தினால் மாற்றமடைவது. முன்வைத்த கொள்கைகளை தொடர்வதால் நிகழும் ஏமாற்றமும் சலிப்பும் சமரசங்களும் அவரில் நிகழிவில்லை  . இன்று விழுமியங்கள் மாற்றமடைய யுக நேரங்கள்  தேவையாவதில்லை . மூன்று முதல் ஐந்து வருடமே நமது நடைமுறைகளை அவற்றை நோக்கி கேள்விகளை முன்வைக்கக் கூடியவை . இன்றைய சமூக அறமும் விழுமியமும் முரணியக்க விதிகளின் படி புதிய கோட்பாடுகளை உருவாக்கி கொண்டே நகர்ந்து வருவதை கண் கொண்டு பார்க்க இயலுகிறது . எனது தந்தையின் காலத்தில் இருந்து நான் வாழும் காலத்தில் அவை அடைந்திருக்கும் மாற்றம் திகைக்க வைப்பவை . என்றோ ஒரு காலத்தில் அது போல நிகழலாம் என சொல்லிக் கொண்டவைகள் திடுமென எதிரில் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது . அந்நிலையில் சண்முகம் போன்றவர்கள் தங்கள் விழுமியங்களை அழுத்தமாக எப்போதும் எளிமை அரசியல் என்கிற கருத்தியல் கொண்டதாக , தன்னை எதிர்ப்பவர்களிடமும்  உரையாட தயக்கமில்லாதவராக , தன்னை நோக்கி குற்றம் சொல்லுபவர்கள் அதை தனது முகத்துக்கு நேராக சொல்லும் இடத்தில் தன்னை வைத்துக் கொண்டார் என்பது மிக அரிதான ஒன்று . “காந்தி தன்னை வெறுக்கும் தரப்பிடம் ஓயாது உரையாடியபடி இருந்தார்என்பதை நான் இங்கிருந்து புரிந்து கொள்ள முயல்கிறேன் . அந்த மனநிலையை அவர்கள்  எங்கிருந்து பெருகிறார்கள்?, தாங்கள் அவமதிக்கப்படும் கணங்களை கடக்கிறார்கள்? . பிற தலைவர்களிடம் நான் கணாத ஒன்று . அவரை தொடர்ந்து சில தலைவர்கள் அதை செய்து பார்க்க முயன்று முன்னிலும் வன்மம் கொண்டவர்காளாவதை பார்த்திருக்கிறேன்.  


தனது முதன்மை சீடராக முன்னிறுத்திய நாராயணசாமி தன்னை நேரடியாக எதிர்க்க துவங்கிய போது அவர் திகைத்திருக்க வேண்டும் அல்லது ஆழத்தில் எங்கோ அதை ஊகித்தருக்க வேண்டும் . ஆனால் அப்படி அல்ல என்பது போல , அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பது போல நடந்து கொண்டார்தன்னால் வளர்த்தெடுக்கப்பட்டவர்  எதிர்கிறார் என்பதை பொது வெளியில் ஏற்க அவருக்கு கூச்சமாக அல்லது பலவீனமாக இருந்திருக்க வேண்டும் . சண்முகம் நாராயணசாமி உறவின் விரிசல் சண்முகத்தை பலம்குறைந்து போனவராக காட்டியது . எப்போதும் வரலாறு அப்படித்தான் நிகழ்கிறது . உரிய தகுதியில்லாதவர்களை அரசியலின் பொருட்டு எடுத்து மேலே வைக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வீழ்ச்சியை அங்கிருந்தே துவங்குகிறார்கள் என்பது ஒரு எளிய உண்மை .நான் மாநில அமைப்பை புதிதாக நிறுவத் துவங்கிபோது , நிரபப்படாத ஒரு இடத்திற்கு அந்த பட்டியலை இறுதி செய்ய வேண்டிய அவசரத்தில். தகுதியில் மிகவும் பின்தங்கிய பொருத்தமில்லாத ஒருவரை அணுக்க நண்பர் சிபாரிசு செய்தார் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை நியமித்தேன். நாராயணசாமியை மையப்படுத்தி எனக்கெதிரான தடை கிளம்பியபோது என் அணியில் இருந்து வெளியேறிய முதல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அவர். அந்த பாடம்  வலி மிகுந்தது .


நாராயணசாமி  சண்முகத்திற்கு மாற்றாக தன்னை முன்வைக்க துவங்கிபோது கட்சியின் உயர் நிலையை சேர்ந்த அனைவராலும் அது தங்களுக்கான பிறிதொரு அரசியல் லாபமாகப் பார்க்கப்பட்டது . சண்முகத்தின் அனுக்கர்களுக்குள்ளும் எதிர்மனநிலை கொண்டவர்கள் இருந்தனர் . இயற்கையின் எண்ணிடலடங்கா விதிகளில் ஒன்று. உலகை இயக்கும் விசை. அவர்கள் அதை தங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதுடன் , இருத்தரப்பினருடனும்  பேரம் பேசும் இடத்தை உருவாக்கித் தரும் என உணர்ந்திருந்தனர். சண்முகத்தின் மௌனம் அதை நிராகரித்தது . நாராயணசாமி அனைத்து வாசலையும் திறந்து வைத்திருந்தார் . ஆனால் அதற்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பது விந்தை . ஒரு பக்கத்தில் மட்டும் செல்லுபடியாவது ஏதும் இல்லை . கதவை மூடியவர் தன் தரப்பை மட்டுமல்ல எதிர் தரப்பையும் மூடிவைத்தார் என்பது கற்றலுக்கு உரிய அரசியல் .பேரத்திற்கு காத்திருந்தவர்கள் ஊசல் மனநிலை உள்ளவர்கள் . ஒருகாலமும் எவருடைய நம்பிக்கைக்கும் உரியவராக மாறாதவர்கள் ,ஆனால் அவர்களின் பேச்சும் செயல்பாடுகளின் ஊடாக மட்டுமே அரசியல் நகர்கிறதுஅவை தலைவர்களை பலமுள்ளவர்களாக , செல்வாக்கிழந்தவர்களாக காட்சி படுத்துகிறது . வேறு சிலர் இருவரின் உரசலை இளிவரலாக்கினர் . அவை அனைத்தும் நான் உருவாக்க நினைப்பவற்றை சிதைக்கக் கூடியது. கண்ணன், பாலன் காலத்திலிருந்து இளைஞர் காங்கிரஸில் உருவாகி வந்த மாநிலத் தலைமைக்கு எதிரான அரசியல் போக்கை விலக்கி அதனுடன் இணக்கமாக செல்லுவது, மாநில அரசியலின் மையப்போக்குடன் பயணப்படுவது, அதன் வழியாக எதிர்கால இடத்தை உருவாக்கி கொள்வது போன்ற சாத்தியங்கள் கலைந்து போகலாம்எனது நிலைப்பாடுகள் வெளிப்படையானவைகள் . ஆதரவும் , எதிர்ப்புமான அரசியல்போக்கே எனக்கானது . மறைமுக அரசியல் ஒரு சூது .அதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை . அது மட்டுமின்றி அது எனக்கு கட்டுபடியாகாது


எனக்கான களம் , மாநில அரசியல் எங்களுக்கு என தனித்த ஒரு இடம் அதுவரை இளைஞர் காங்கிரஸார் கனவுகளை உருவாக்கி வந்தவைசண்முகம் தலைமையில் உள்ள நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெறுவது பற்றி தலைவர்களுக்கே அந்த கனவு இருந்தது . சண்முகம் மாநில நிர்வாக உறுப்பினர்களை அப்படி உருக்கி செதுக்கி செய்திருந்தார் . ஆட்சி , கட்சி இரண்டையும் சமன் செய்யும் வித்தை அது. முதல்வர்களாக , அமைச்சர்கள் என ஆட்சியை புதியவர் யாருக்கு வேண்டுமானலும் எந்த பதவிகளையும் எடுத்து கொடுப்பவர் கட்சி நிர்வாகிகளை  நியமிப்பது தனது நம்பிக்கைக்கு உரிய விசுவாசுகளுக்கு மட்டுமே . கட்சியின் தலைவர்கள் பலமுறை வெளியேறிய போது கட்சி பிளவுண்டது போன்ற தோற்றம் உருவாகவே இல்லை . பல சந்தர்ப்பங்களில் சென்றவர் திரும்பி வந்தனர் . நிர்வாகிகள் வெளியேறுவது ஒருபோதும் நிகழவில்லை.


தலைமைகளுக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற புரிதல்களின் வழியாக இளைஞர் காங்கிரஸில் புதிதாக இணைந்தவர்களுக்கு தங்கள் நிலைகளை எடுக்க  வேண்டும் என விழைந்தேன் .ஆனால் அமைதியாக இருப்பது என்கிற சண்முகம் தன் வழமை மூலம் தனது அறைகூவலை கடந்து செல்லத் துவங்கியது எனது இடத்தை சிக்கல் மிகுந்ததாக உருவாக்கி இருந்தது .நாராயணசாமி சண்முகத்திற்கு எதிராக தனது முரணை வெளிப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நாராயணசாமியை நம்பத் தகாதவராகவே என் ஆழ்மனம் உருவகித்திருந்தது . பல வருடங்களுக்கு முன்பு நான் பாலனுடன் நாராயணசாமியை முதல் முறை சந்தித்த போது தனது தலைவர் என கூறிகொண்ட சண்முகம் குறித்து நாராயணசாமி முன்வைத்த விமரசனம் எனக்கு அவரைப் பற்றிய ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. இவரை எப்படி சண்முகம் நம்புகிறார் என கேட்டுக் கொண்டேன்அன்று உயர்நிலை அரசியலாளர்கள் எனக்கு அதிகம் அறிமுகமில்லாததால் மேல்நிலை அரசியலில் அதுவும் ஒரு  வழமை போல என எண்ணிக் கொண்டேன்.ஆனால் அது அப்படி அல்ல எக்காலத்திற்குமாக சில பொது நியதிகள் உண்டு என மெல்ல மெல்ல வந்து சேர்ந்த போது புரியவந்தது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்