ஶ்ரீ:
பதிவு : 600 / 790 / தேதி 29 டிசம்பர் 2021
* எண்ணத்திலிருந்து உரு *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 72.
அரசியலில் எனக்கான “புதிய” இடமொன்றை கண்டடைவதற்கு ஒருவகையில் சண்முகம் காரணம் . புதியவற்றை ஏற்காத பழமைவாதி . அங்கு வளர்தல் நிகழ்வதற்கான சாத்தியக்கூறு அனேகமாக இல்லை . கட்சி அமைப்பில் சிலருடைய இறப்பினால் உருவான வெற்றிடங்கள்கூட அப்படியே விடப்பட்டு நீண்ட காலம் ஒட்டடை பிடித்து இருந்தது . ஒரு வகையில் யாருக்கும் எந்த அதிகாரமும் பிரித்தளிக்கபடாமல் போனாலும் நிர்வாக சிக்கல்கள் எழுந்ததில்லை என்பது அடிப்படைக் காரணமாக இருக்கலாம் . கட்சி அரசியலில் அனைத்தும் தலைவரை சார்ந்து இயங்குவது . பொதுச் செயலாளர் பதவி இங்கு அலங்காரம் . அவரைப் பற்றிய புரிதல்கள் அனைத்தும் பழைய காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்தியில் மட்டும் உலவிக் கொண்டிருந்தது . அங்கிருந்து புதிய தலைமுறையினர் அவற்றை பெற்றுக் கொண்டார்கள் . கண்ணன் அன்று நவீனத்தின் முகமாக அறியப்பட்டார் . இயல்பில் அது ஒரு தலைமுறை இடைவெளி . அவர் வாழ்ந்த வீடும் கட்சி அலுவலகம் கூட புராதன அடையாளம் போல . அதில் நான் தூரத்தில் இருந்து பார்த்த சண்முகம் கடந்த காலத்தின் முகம் . அவருடைய செயல்கள் அனைத்தும் காலத்தில் பின்னோக்கி எங்கோவென இருப்பவை . அதுதான் அவரை பிற சராசரிகளிடமருந்து பிரித்து நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவுகிறது போல . சுடச்சுட புது செய்திகள் வந்தணைந்து கொண்டே இருந்தாலும் யார் எப்போது அந்த பழைய செய்தியை சொன்னாலும் புதுசு போல ஆர்வமாய் கேட்பார் . அப்படியா ? என்பார் பார்க்கப் பற்றிக் கொண்டு வரும் . அவரை நன்கு அறிந்தவர்கள் அது ஒன்றுமில்லை என நடந்து விலகிக் கொள்வார்கள் . ஆரம்பத்தில் அவை திக்பிரமையைக் கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் அனைவரையும் போல எனக்கும் பழகிப் போனது என நினைக்கிறேன். நவீன காலத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ளுதல் தேவையும் தேவையற்றுதுமான இரட்டை நிலை. எங்கே அதை வரையறை செய்யும் கோடு கிழிக்கப்பட வேண்டும் என ஆழ்மனம் முடிவு செய்கிறது . நிலை மற்றும் மாற்றமுறு சக்திக்கான இடைவெளியை சரியாக நிர்வகிக்க தெரியாமல் அதை “இருப்பிடமாக” கொள்ளும் அனைவரும் உலகியலின் அன்றாடங்களுக்கு பலியாகிறார்கள் . ஆனால் இவை அத்தனையையும் கடந்து சண்முகத்திற்கு நவீன முகமும் உண்டு . புதிதாக தெரிந்து கொள்ள ஆசைபடுவார் அதை ஒரு எல்லைக்குள் நிறுத்திக் கொள்வதை பார்த்திருக்கிறேன். நவீனத்தின் அவசியம் ஏற்படும்போது அதை மறுப்பவரல்ல என்பது எனது புதிய புரிதலாக இருந்தது . இன்றைய அரசியலை விரும்புபவர்களுக்கு மத்தியில் அவருக்கான இடம் என்ன? . மரபில் இருந்து நவீனமாக ஒன்றை பற்றி நகரும் போது பிற சழக்குகளுடன் கலக்காமல் வெளிவர கற்றுத்தரும் , நம்பிக்கை அளிக்கும் ஒரு ஆளுமை . கட்சியில் அந்த இரண்டுக்குமான பாதையை சீரமைக்க, சண்முகத்தை முன்றிறுத்திய முயற்சி எனக்கான இடத்தை உருவாக்கிக் கொடுக்கும் என உறுதியாக நம்பினேன் என நிலைப்பாடுகள் அனைத்தும் அதை சார்ந்தே இருந்தன . அதற்கான சந்தர்ப்பம் வழக்கமான சிக்கலுடன் வந்தது .
காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற இருப்பதாக தகவல் வந்தது , தில்லி சென்றேன். அதில் பயிற்சி முகாம் நடத்துவது பற்றிய குறிப்புகள் போன்றவை மூன்று நாட்களுக்கு பேசப்படும் என நினைத்திருந்தேன் . அது வழக்கம் போல முதுகை சொறியும் நிகழ்வு என நினைத்தேன் . வரவேற்புரையில் பேசியவர் வழிந்ததில் இருந்து தெரிந்தது. தலைமை நிலையத்தில் இருந்து பொதுச் செயலாளர்கள் ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி போன்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். முதல்நாள் பங்கு ஓரளவு திட்டமிட்டபடி நிகழ்வுகள் நடந்தன . அந்த கூட்டம் ஒரு சம்பிரதாயமானதாக இருந்தது . ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி போன்றவர்கள் நிர்வாகத்தில் கடுமை முகங்கள் . பிரதமர் நரசிம்மராவிற்கு அனுக்கர்கள் என்பதால் அவர்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்களை குஷிப்படுத்த முயன்றது நல்லபடியாக அவர்களை சென்று சேர்ந்ததாகத் தெரிவில்லை. எந்த இளிப்புமல்லாமல் மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்கள் . இருவரும் ஆங்கிலத்தில் உரையாடியதால் முதல் நாள் நிகழ்வு சட்டென முடிந்தது போல இருந்தது, அவர்கள் இருவரின் உரையும் மூத்தவர் இளையவர்களுக்கு அறிவுரை சொல்லும் தொணி இருந்தது . இருவரும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸில் இருந்து தலைமைக்கு சென்றவர்கள் என்பதால் அந்த “கறார்” இருந்திருக்கலாம்.
மூன்று நாள் நிகழ்வு . மற்ற முழு நாளும் இந்தியில் பேசியே கொன்றார்கள் .எத்தனை நாட்களுக்குள் நடத்த வேண்டும் முக்கிய பேசு பொருள் என்ன என்பதை பற்றிய மேலோட்டமான குறிப்புகளாகவே அவை இருந்தன. ஆஸ்கார் பெர்னான்டஸ் மற்றும் PR.தாஸ் முன்ஷி மீத நாட்களுக்கும் வந்திருக்கலாம் போல என தோனழறியது . இரண்டு நாள் நிகழ்வுகள் மிகுந்த ஏமாற்றமளிப்பவை. இதற்கு இவ்வளவு தூரம் வந்திருக்க வேண்டாம் எனத் தோன்றியது . மூன்று நாள் பயிற்சி முகாம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தனது தலைமைக்கு கணக்கு காட்ட கூட்டிய கூட்டம் போல நடந்து முடிந்தது . அன்றிரவே வெறுப்பாக சென்னைக்கு ரயிலில் புறப்பட்டேன் . முதல் நாள் இரவு சரியான தூக்கமில்லை இரவு முழுவதும் கண் விழித்தபடி கடந்தது போல இருந்தது . இன்னும் ஒன்னறை நாள் பயணம் எப்படி இருக்க போகின்றது என்கிற அழுத்தம் உணர்ந்தேன். இடையில் எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை விடியற்காலையில் கண்விழிக்கும் போது நன்றாக தூங்கிய நிறை உணர்வு . அதிசயமாக ரயில் பயணங்களில் அது போல ஒரு ஆழ்ந்த உறக்கம் சில மணி நேரத்தில் கிடைத்து விடும். மூளை முழு ஓய்வாக இருந்தது . சட்டென செய்ய வேண்டிய பற்றிய முழுத் திட்டம் எழுந்தது . ஒரு மணி தேரத்திற்குள் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என இயல்பாக நிகழ்வுகளை மூளை அடுக்கத் துவங்கி இருந்தது . சென்னை மறுநாள் காலை வந்திருங்கும் போது முழு உற்சாகத்தில் இருந்தேன்.
அதுவரை மாநிலம்முழுவதும் தேர்ந்தெடுத்து வைத்திருந்த தொகுதி தலைவர்களை களம் இறக்க இதைவிட சிறந்த சந்தர்பம் கிடைக்காது . கட்சி முடிவு என்பதால் சண்முக்கத்தை ஒத்துக் கொள்ள வைப்பதில் சிக்கல் இல்லை . அடுத்தது வல்சராஜ், அவர் மாதத்தில் பாதிநாளுக்கு மேல் புதுவையில் இருப்பதில்லை என்பதால் அந்த தேதிகளை முடிவு செய்யலாம். மாநில நிர்வாகிகளுக்கு உரிய இடம் நிகழ்வு நடக்கும் போது உருவாகும் என்பதால் அது நிகழும்வரை அதைப்பற்றி சலம்பிக் கொண்டிருப்பார்கள் . இது பயிற்சி முகாம் இல்லை அதை எப்படி நிகழ்த்துவது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் என தெளிவாக அறிவித்துவிட வேண்டும். அவர்களிடம் கலந்து ஆலோசிக்கபட இருக்கிறது என்பது அவர்களுக்கு போதுமானது குட்டையை குழப்ப . யாரெல்லாம் பங்கு பெற போகிறார்கள் என்பது மட்டும் ரகசியம். தங்களுக்கு இணையாக யாரை வைத்தாலும் கலகம் செய்வார்கள் என்பதால் அந்த மந்தனம் . சிறப்பு அழைப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்த தொகுதித் தலைவர்களை அழைப்பது கடைசி ஒரு நாள் வேலை. அனுக்கர்களிடம் கூட அது பற்றி விரிவாக தெரிவிக்கவில்லை. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என வல்சராஜிடம் சொன்னபோது முகம் சுழித்து வழக்கம் போல தனது ஆர்வமின்மையை சொன்னார். எதிர்பார்த்தது . எங்கு நிகழ்த்த திட்டம் என்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. அனைவரும் கட்சித் தலைமை அலுவலகத்தில் நிகழவிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள் . முதல் நிலையில் அதை நிகத்துவது குறித்து சண்முகத்திடம் சொன்ன போது “ஏற்பாடு செய்” “சூர்யநாராயணை உடன் வைத்துக் கொள்” என்றார். அடுத்த கட்டம் அழைப்பிதழ் . ஒரு வாரத்திற்கு முன்பாக என்னுடைய அலுவலக கடிதத்தில் தட்டச்சு செய்யப்பட்டு நகல் எடுத்து முதலில் நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்டது . எனது அனுக்கன் விஜயகுமாரிடம் அனைவருக்கும் கடித்த்தை கொண்டு சேர்க்கும் பொறுப்பு . அவனே அதில் “குட்டிக் குழப்பம்” செய்பவன் . யாரும் எதிர்பார்க்காத ஒன்றை உருவாக்கி எடுத்து வந்து கொடுத்து அனைவரையும் திடுக்கிடச் செய்பவன் . அதே சமயம் கொடுக்கப்பட்ட வேலையை செய்வான் பத்தாதற்கு மேலதிகமாக ஏதாவது செய்து தொலைப்பான் .அழைப்பிதழை பெற்றுக் கொண்டதற்கான கையெழத்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் தேதியும் இடமும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது . இடம் ஹோட்டல் சற்குருவின் சிறய அரங்கு அதற்கென ஒருங்கி இருந்தது . அனைத்தும் சென்று சேர்ந்தது என இரவு 9:00 மணிக்கு அவன் அலைபேசியில் சொன்ன பிறகு அடுத்த நாளை சற்று பதட்டத்துடன் எதிர்பார்த்தேன்.