https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

* ஆழ்மனக் கட்டுமானங்கள் *

ஶ்ரீ:

பதிவு : 603 / தேதி 03 பிப்ரவரி 2019

அஞ்சலி -4

* ஆழ்மனக் கட்டுமானங்கள்  * 
இந்தப் பதிவுகள் நம்பியின் மறைவுக்கான இரங்கல் மட்டுமல்ல , அதை கடந்து பிறிதொரு காரணமும் இதற்கு உண்டு என்பதால் அவற்றை விரிவாக பதிய விழைகிறேன் . வாழ்வியல் புரிதல்கள் , மெய்மை தேடலுக்கான விடைகள் போன்றவை ஆழ்மனப் படிமத்தில் உறைவது . புறவயமான சகலத்துடன்  அது எப்போதும் தொடர்பில் இருப்பது . எல்லவத்திற்குமான பதில்கள் அதில் உறைகிறது . அதை அகவயமாக சென்று தொடும் முயற்சிகளாகவே எனது பதிவுகளை  கண்டடைகிறேன். ஆழ்மனப்படிமம் என்கிற கருதுகோளின்  பலம் , அதன் இயங்குமுறை குறித்த புரிதல்களை , நான் ஜெயமோகனின் எழுத்துக்களின் வழியாக அறிமுகம் செய்து கொண்டேன் . அரசியலில் ஈடுபட்டிருந்த காலத்தில் நான் அதை  அறிந்திருக்கவில்லை .

அப்போதெல்லாம் நம்பியுடன் எனது உரையாடல்கள் பெரும் பகுதி ஆழ்மனம் குறித்து இருந்ததை இன்று வியப்புடன் நினைக்கிறேன். பல துணிச்சலான முடிவுகளை எட்டும் போது, ஏமாற்றம் அடைகிறபோது , துரோகங்களை அறிய நேர்கிற போது , பிறரால் கைவிடப் படுகிற போது , கொந்தளிப்பு அடைவதை விடுத்து , அகவயமாக சிந்திப்பதின் வழியாக என்னை மீட்க ஏதாவதொரு கருதுகோளை அடைவேன் , அது குறித்து இன்னும் ஆழமாக தொகுத்துக் கொள்ள எனக்கு உரையாடல்கள் மட்டுமே மிக சிறந்த வழியாக இருந்திருக்கின்றன . நாங்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திப்பது தவறுவதில்லை.

அந்த வாரம் முழுவதுமாக என்னை அலைக்கழித்தவைகளை உதறி ,நான் என் சிந்தனை வழியாக அடைந்த மீட்டுப்பற்றி நம்பியுடன் பகிர்ந்து கொள்வதை வழமையாக கொண்டிருந்தேன். நம்பியிடம் உரையடுவது எனக்கு மிக இனிமையாக இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன் . நான் உரையாடுகிற போது அவன் தேவையில்லாமல் குறுக்கிடுவதில்லை. அதில் ஆச்சர்யம் அது அவனது இயல்பல்ல என்பதுதான்

என் நண்பர்களின் வட்டத்தில் அனைவரும்  உரையாட அஞ்சும் ஒரு ஆளுமையாக தன்னை எப்போதும் வைத்துக் கொள்வான். பலர் அவனிடம் கத்திமேல் நடக்கும் லாவகத்துடன் பழகுவதை பார்த்திருக்கிறேன்  . பல சமயம் என்னிடமும்  கூரிய சொல் எடுக்கத் தயங்காதவனாக அவன் இருந்திருக்கிறான்.  அதே பணியில் நான் அவனிடம் பேசினாலும் , மிக விரைவில் நாங்கள் இருவரும் அதிலிருந்து வெளிவந்து விடுவோம் . அனைத்தையும் கடந்து அவன் என்மீது கொண்டிருந்த நட்பை மாற்றிக்கொண்டதில்லை என்பது ஆச்சரயமளிப்பது . பலமுறை அவனால் தாக்குதலுள்ளாகி நான் விலகி நின்றிருக்கிறேன் . அவன் அதை வளரவிட்டதில்லை
ஆழமனச் செயல்பாடுகள்  குறித்த அறிதல் இல்லாமையாலும் அதன் உச்சங்களை பற்றிய புரிதல்  போதாமையாலும்அவற்றை என்னால் வார்த்களில் கொண்டுவர முடியாமல் எப்போதும்  திகைத்திருக்கிறேன் . அப்போதெல்லாம் நான் எனக்குள் உரையாடவது போலவே அவனிடம் பேசியிருக்கிறேன் . நம்பி எப்போதும் அமைதியான பார்வையாளனாக அனைத்தும் உள்வாங்குபவனாக இருந்திருக்கிறான். பல சமயம் தனது கூரிய கருத்துக்களால் என்னை ஆழமாக சிந்திக்க செய்திருக்கிறான் .  அகவயமாக நான் உந்தப்படுகிற போதும் , புறவயங்களின் நுட்பங்களை ஆழ்மனம் நமக்குள் கடத்துவது குறித்து உரையாடலில் இருந்தோம் . அப்போதெல்லாம் அதை எனது உள்ளுணர்வின் வழிகாட்டல் என புரிந்திருந்தேன். இரண்டும் ஏறக்குறைய ஒன்றுபோல தோன்றினாலும் , ஆழ்மனப் படிமம் என்கிற கருதுகோளை அறிமுகம் செய்து கொண்ட போது அதன் ஒரு சில பரிமாணங்களே பிரமிப்பைத் தருவதாக இருந்தது.

வாழ்வியல் யதார்த்தங்கள் அதன் பொருளின்மை வெளிப்படுத்துகிற போது ஏற்படும் கசப்புகளை உள்ளத்தில் குவித்துக் கொள்ளாது அதை கடந்து செல்வது பற்றிய சிந்தனை என்னை , அனைத்து சிக்கல்களில் இருந்தும் விடுவித்திருக்கிறது . ஒவ்வொரு முறை ஒரு சிக்கலை எதிர்கொள்கிற போது , ஏதாவதொரு கருத்தை அடைந்து அவற்றை கடந்து விடுவதை வழமையாக கொண்டிருந்தேன் .

சிந்தனை மூலம் ஓயாது சப்தமிடும் பலவித மன ஓட்டங்களிலில் இருந்து தற்காத்துக்கொள்ள , உரையாடல் பெரிதும் உதவுவது. நம்மை புரிந்த நண்பனிடம் உரையாடுகிற போதும் , அவனது சலிப்புறாத போக்கு என்னை ஆற்றுப்படுத்துவது. உரையாடல் ஒரே சிந்தனை அலைவரிசை உள்ளவர்களுடன் நிகழும் போது , ஆழ்மனப் படிபத்திலிருந்து எழுவதை தொகுக்க முடியும் அற்புதம் நிகழ்ந்து விடுகிறது . நான் நம்பியுடன் நிகழ்த்திய அனைத்து உரையாடல்களும் என்னை அங்குதான் கொண்டு சென்று இருக்கின்றன .

இன்று எனது ஒவ்வொரு பதிவும் அதை நோக்கிய பயணம் மட்டுமே . ஆனால் எழுதுவதன் மூலம் அதை செய்ய இயலும் என்பதை மிக தாமதமாகவே தெரிந்து கொண்டேன்உரையாடல்களில் மிகுந்த ஈடுபாடு இருந்தபோது , நம்பி எனக்கு உகந்த வடிகாலாக இருந்தான்

நம்பி மிக வித்தியாசமான நண்பன் , சிறு சிறு விஷயங்களில் பொறுமை இழந்துவிடுபவன் . சில சமயம் சந்திக்க இயலாத சூழல் எழுகிற போது . அதன பின் சந்திக்கும் முதல் பத்து நிமிடம் அவனை பொறுத்துக்கொண்டால் , பின்னர் அவனின் பிறிதொரு முகம் எழுந்து வருவதை பார்க்கலாம் , அதுவே அனைவருக்கும் அனுக்கமானது . ஆனால் பெரும்பாலான நண்பர்கள் அந்த முதல் பத்து நிமிடங்களை பொறுத்துக்கொள்ள முடியாது தெறித்து  விலகிவிடுபவர்களே. அவனது இந்தப் போக்கை கடுமையாக நான் விமர்சிக்கும் போது தனக்கே உரிய அட்டகாச சிரிப்பால் அதை கடந்து விடுவான். நான் கண்ட நம்பியை நண்பர்கள் சிலர் அறிய முடிந்ததில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஒரு கனவு

  அன்பிற்கினிய ஜெ, வணக்கம் நலம். உங்கள் நலனை விழைகிறேன். கனவுகள் எனக்கு எப்போதும் நினைவில் நிற்பதில்லை. பல முறை உங்களை நாகர்கோவிலி்ல் சந்திப...