https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 2 ஜூன், 2018

அடையாளமழித்தல் - 12 விளைநிலம்

ஶ்ரீ:


பதிவு : 525 / தேதி :- 02 ஜூன்  2018



விளைநிலம்





விஷ்ணுபுரத்தில்  பிங்கலனிடம் ஆசிரியர் கேட்பார். “வாழ்வும் அழிவும் நன்மையும் தீமையும் எல்லாம் விஷ்ணுவே என்றால் மிச்சமின்றி உன் உள்ளம் அதை ஏற்குமா?” அவன் “ஏற்காது, ஆனால்…” என ஆரம்பிப்பான்.  “அவ்வளவுதான், உன் பாதை பக்தியால் ஆனது அல்ல. அது ஞானத்தின் பாதை. அவ்வழியில் எத்தனை இடர் இருந்தாலும் உன்னுடையது அதுதான். கிளம்பு” என கிளப்பிவிட்டுவிடுவார். அவன் ஞானத்தின் பாதையில் தத்தளித்து அஞ்சி மீண்டும் பக்திக்கே வருவான். ஆனால் ஞானத்தின் துளி எஞ்சும்வரை திரும்பி வரவே முடியாது என உணர்வான், என்கிறார் ஜெயமோகன் .

எனது தந்தை தான் அடைந்த மெய்மையை நுண்மையாக எனக்கு கையளிக்க முயன்ற போது , அது கருத்தாக எனது சிந்தையில் அமராது விதைபோல எங்கோ விழுந்தது. அது தான் வளரவேண்டிய காலத்திற்கு காத்திருந்தது போலும் . அவர் என்ன விதைத்தாரோ அதுவாகவே அது முளைக்கத் துவங்கியது. நான் என் வாழ்வியலில் உளக்கொந்தளிப்புகளின் வழியாக அடைந்த புரிதல் என்கிற நீரை மட்டுமே அதற்கு வார்தேன் போலும் . என்னுடைய மெய்மைத் தேடலில் தந்தையுடன்  இயந்தும் ஊடியும் நான் கிளை பரப்பி இருந்தேன் . ஆனால் அதில் அவர்தான் எப்போதும் அமர்ந்திருந்தார். 

புரிதல் என்கிற ஊற்றை எனக்கு காட்டிக் கொடுத்தது இரண்டு பெண்கள், ஒருவர் எனது தாய் பிறிதொருவர் எனது மனைவி. அவர்களின் வழியாக என்னுடன் வினையாற்றிய பிற எல்லா மாநுடர்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அம்மா எனக்கு உயிரளித்தபோது தன்னை வலியால் உணர்ந்தவர் , என் மெய்மைக்கு தேடலுக்கும் அதன் புரிதலுக்கு  தன்னை முற்றழித்துக் கொண்டார் என்பதை எனது ஆற்றாமையாக உணர்கிறேன் . மனைவியிடம் பிறிதொரு மெய்மையை என் வயோதிகத்தில் பெறலாம் . யாருமற்ற தனிமையை என் வீட்டில் எதிர்கொள்ளும் தயாரிப்புகளும் அவசியமாகிறது. பாதுகாப்புணர்வு. சிலர் தனியாக இருப்பதைப் பார்த்தபோது ஓர் ஆசை எழுந்தது. வயதான காலத்தில் தனியாக இருக்கவேண்டும் என. எவரிடமும் கருணையையோ உதவியையோ நாடக்கூடாது. அதிலும் எக்காரணத்தாலும் பெண்களிடம் உதவி கோரக்கூடாது. பெண்கள் ஒரு வயதுக்குமேல் ஆண்களை வெற்றுச்சுமைகளாக உணர்வார்கள். சரியாக அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் இருப்பார்கள். கம்பீரம் ,தோரணை எல்லாம் போய் ‘பேச்சுகேட்க’ ஆரம்பிக்கும் காலம் அது . என்கிறார் ஜெயமோகன் 

என் மெய்மைத் தேடலுக்கு அம்மா விளைநிலமானார், அது நான் மகிழ்ந்திருக்க நிகழவில்லை . எனக்குள் நிகழ்ந்ததை பிறிதெவரும் வெளியிலிருந்து என்னுள் அவற்றை நிகழ்த்தியிருக்க முடியாது என உணர்கிறேன். எதையும் கடந்து வந்த எனக்கு ஊழ் அம்மாவை மையப்படுத்தி எனக்கான புரிதலை கொடுத்தது போதும்  என் ஆன்மா மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் நிலைகுலைந்து போனேன். அதைவிட அம்மா ஆன்மா அழிந்தது போலானார். என் ஊழை முனிகிறேன் , காலம் இதற்கு என் தாயை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்

தாயை கைவிடும் மகனினும் கீழோன் பிறிதொருவரில்லை . அதற்கு நிகரியான ஊழின் கணத்தில் பிறிதொன்று, தாயால் கைவிடப்படும் மகனின் நிலை . மரபார்ந்தவர்களின் பொது வெளியில் இது திடுக்கிடலை உணர்த்தலாம் . ஆனால் நவீன சமூகத்தின் அற விழுமியங்களின் வீழ்ச்சியால் சிதைந்த பல பண்பாடு நிலைகளில் இதுவும் ஒன்று . அதை நான் மெல்ல அடையும் புரிதலின் வழியாக எந்தவித நோய் தொற்றும் இல்லாது என்னை மீட்டெடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன்.

பண்பாட்டு வீழ்ச்சியை ஒரு பொருளியல் தற்சார்பு என்கிற விசை இயக்குகிறது போலும் . அது நிலைபெற்ற ஒருவரை அவர் யாரையும் சார்ந்திருக்க செய்வதில்லை . புதிய விடுதலையை அனுபவிக்கும் முதல் தலைமுறை பெண்கள் அனைத்துவித்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்  விழைவின் விளைவுகளால் குடும்பத்துள் நிகழும் வளச்சிதை மாற்றத்தின் நுட்பம் உணர்வதில்லை . தருக்களும் பிறரை சீண்டுதலில் வழியாக அடையும் முக்கியத்துவத்திற்காக எதையும் செய்யும் மனோபாவம், பலரை வாழ்வியல் நரகில் அழுத்துவதை அவர்கள் அறிவதில்லை . அறிந்தபின் அதன் எதிர் நிகழ்விற்கு  பொறுப்பேற்காது விலகி நிற்பதால் சிக்கல் மேலும் சீரழிவை நோக்கி செல்கிறது . 

பிறிதொருவருக்கு மாற்றென தன்னை முன்னிறுத்துவதை இங்கு குற்றமாகாது எனினும் , முன்னிறுப்பது ஒற்றைப்படையானதில்லை . அது கோரும் இடங்கள் யாவற்றிலும் அவற்றை நிகர் செய்தாக வேண்டும் . அனுபவமும் , பொறுப்பும் அறியாத ஒருவரால் அது நிகழ இயலாது . அது அடைகாக்கும் பொறுப்பை கோழியிடமிருந்து எடுத்து பாதியில் கைவிடுபவரின் மனநிலையை ஒத்தது. 

இளமையில் நான் வீட்டில் என்னவாக இருந்தேன் என இப்போது நினைத்துப்பார்க்கிறேன் , எனக்கென அடையாளம் என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை . ஆனால் சுபாவம் என ஒன்றிருந்ததை இப்போது உணர்கிறேன் . அப்பா அக்கைகளிடம் ஒரு மாதிரியும் தங்கைகளிடம் வேறு மாதிரி இருந்தார் . ஆனால் அவை நிகழ்ந்தது வெவ்வேறு காலகட்டத்தில் .

கடும் கண்டிப்பாய் எனக்கு முன்பிறந்தாரிடமும் , மிக எளிமையான தந்தையாக என் தங்கைகளிடமும் நான் அவரை பார்க்க நேர்ந்தது . அது ஒரு மாறுபட்ட பார்வையை எனக்குள் விதைத்திருக்கலாம் . என்னிடம் அவரது அணுகுமுறை வேறுமாதிரியானது . என்மேல் அவருக்கு ஆழ்ந்த விலக்கிக்கொள்ள முடியாத சந்தேகங்கள் எப்போதும் கவிந்திருந்தது . நான் அப்படிதான் இருந்தேன் . பிள்ளைகளுக்குள் ஆண் பெண் பேதமில்லாது போயிருக்கலாம் . அல்லது அவரது பின் பகுதி மிகவும் கனிந்திருந்ததும் ஒரு காரணியாக இருந்திருக்கும் . இவை இரண்டிற்கும் மத்தியில் நான் அவரை அடையாளப்படுத்திக்கொள்ள தெரியாமல் திண்டாடிய காலம் . அக்கைகளின் திருமணம் புதுவீடு கட்டி இடம் பெயர்ந்தது . போன்றவை வீட்டிலிருந்து விலகி இருந்த அப்பாவை பெரும்பாலும் வீட்டில் கட்டிப்போட்டது . அதுவே அவர் கனிவதற்கு பெரும்பங்கு வகித்தது.

வெள்ளி, 1 ஜூன், 2018

அடையாளமழித்தல் - 11 இயல்பு தனித்திறனல்ல .

ஶ்ரீ:


பதிவு : 524 / தேதி :- 01 ஜூன்   2018




இயல்பு தனித்திறனல்ல .





செயலாற்றுவது மனிதனின் அடிப்படை இயல்பு. எது தன்னுடைய இயல்புக்கு ஏற்றதோ, எதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியுமோ அதில் முழுமூச்சாகச் செயலாற்றுவதே ஒருவனின் கடமை. அவனுடைய நிறைவும் மகிழ்வும் அங்குமட்டுமே உள்ளது. அதையே கீதை தன்னறம் என்கிறது

அந்தத் தன்னறத்தை ஆற்றக்கூடியவன் முதல்கட்டத்தில் உலகியல்சார்ந்த நன்மைகளை அடைகிறான். இன்பம் புகழ் செல்வம் அனைத்தையும். அதை கீதை சாங்கிய யோகம் என்கிறது. அந்தச் செயலில் அவன் மூழ்கிச்சென்றான் என்றால் அச்செயல் அளிக்கும் நிறைவே அவனுக்குப்போதுமானதாக இருக்கிறது.அதை கீதை கர்மயோகம் என்கிறது. அச்செயல்வழியாகவே அவன் இப்பிரபஞ்சத்தை அறியமுடியும். அதுவே ஞானயோகம். அது அவனை முழுமையாகவே விடுவிக்கும். என கீதை விளக்கிச்சொல்கிறது

கீதை ஒரு தருணத்திலும் செயலாற்றாமலிருப்பதை முன்வைக்கவில்லை. மாறாக செயலாற்று செயலாற்று என்று மீண்டும் மீண்டும் அறைகூவுகிறது. மிகச்சிறந்த செயலை ஆற்றுவதெப்படி என்று மட்டுமே அது பேசுகிறது என்கிறார் ஜெயமோகன் .

தியானத்தை தைலதாரை என எண்ணை ஒழுக்கைப்போல சொல்லுவது  மனநிலையை அதே போல் சொல்லுகிறது, ஆனால் லௌகீக வாழ்கையில் ஒவ்வொரு கணமும் அதில் நின்றிருக்க முடியுமா? எனத் தெரியவில்லை . ஆனால் இன்றைய லௌகீக உலகில் அத்தகைய நிலை சில நிமிடங்கள் நீடித்தாலே அது புடவியின் நியதி அவனுக்கு தனது பெரும் கருணையை வழங்கி விட்டது என்றே நினைக்கிறேன். வேத வியாசர் அழைக்கையில் அதை செவி கொள்ளாது தன்னிலை மறந்து சென்ற சுகப்பிரம்மத்தை பற்றி பேசும் ஶ்ரீமத் பாகவதம் , ஶ்ரீமத் பாகவதத்தை அவர் பரிக்ஷித்திற்கு சொல்லிவைக்கையில் அவரை வார்த்தைக்கு வார்த்தை ராஜன்னு , ராஜன்னு என விளிப்பதை பார்க்க முடிகிறது . எனவே மனதை ஒருமுகப்படுத்தல் லௌகீகனுக்கு க்ஷண நேரம் நீடித்தால் அதுவே போதுமானது என நினைக்கிறேன் . அந்த அனுபவம் அனைத்திலிருந்தும் விலக்கத்தை ஏற்படுத்தி ஒரு ஒழுக்குற்கு தன்னை ஒப்பு கொடுத்தவனை அந்த ஒழுக்கே பயணிக்க வைப்பதுவிடுகிறது . வாழ்கையை மட்டுமின்றி மரணத்தையும் இனிதாக்குகிறது

வாழ்க்கை என்கிற நிகழ்வின் இடையே தொங்குகிற திரைக்கு அப்பால்ஒன்றுஉள்ளதாக ஏற்றும் , மறுத்தும் அறிஞர்களால் எழுதி மாளவில்லை . ஆனால் அதற்கு சில இமைக்கணம் முன்பு அது நிகழ்கையில், வாழ்வியல் இனிது என எதைக்கொண்டு அவன் நிறைவடைகிறான். அந்த கணத்தை முழுமை செய்வதே வாழ்ந்து முடிப்பது போலும். ஜெயமோகன் சொல்லும் விடுதலை அளிக்கும் ஞானயோகம் இன்றைய நவீன உலகில் இப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.நான் மகிழ்ந்திருப்பது என்னுள் நிறைந்தநீர்மை கொண்ட பசுமை பச்சையை” . அதை நோக்கியே எனது அனைத்து பயணங்களும் முழுவதும் திட்டமிடப்பட்டவைகளாகவே இத்தனை காலமும் இருந்தது

பயணத்தின் அறிதலை வேடிக்கையை நான் முழுமையாக உணர இயலாமல் போனதற்கு அதுவும் முக்கிய காரணமாக இருக்கலாம் . இப்பொழுதும்  என்னால் ஒரு முழு திட்டமில்லா பயணம் பற்றி யோசிக்க முடியவில்லை , நான் என்னை களைந்து கொள்ளும் முயற்சியைஅடையாளமழித்தல்என துவங்கி பதிவு செய்தபடி இருந்தேன் . அடையாளமாதலும் , இதுவும் இரண்டும் இணைகோடுகள் போல ஒன்றின் பிறிதொன்றாக இருந்தது . “அடையாளமாதல்முடியும் பொது இதை முழுவதுமாக தொகுத்துக்களோள்ளலாம் என்றிருந்தேன். செல்வராணியின் லடாக் பயணம் ஒரு சலனத்தை உருவாக்கி விட்டது. என்னுடையஅறிய நிகழ்வும் வெறுமையும்பதிவு கூடஅடையாளமழித்தலின்தொடர்ச்சியேஒரு குறிப்பிட்ட விஷயத்தை தொகுக்க அதை தனியாக பதிந்தேன்

வாழ்க்கையில் நிகழ்ந்ததை ஒரு கருத்து என்கிற நிலையை அடைகிற போது , அதை  முதலிலிருந்து மீளவும் துவக்குவது போல ஒன்று நிகழ்ந்து விடுகிறது . பலருக்கும் அது  ஒரு தவிர்க்க இயலாத கணத்தில் ஏற்பட்டுகிறது , ஆனால் எனன்னுடைய வாழ்வியல் அனுபவங்கள் வழியாக எனக்கு அது வெவ்வேறு விதமான துவங்குதலை தொடர்ந்து ஏற்படுத்தி இருந்தது. சில தொடக்கங்களுக்கு விலகி நான் முற்றும் முரண்பட்டு எதிர்நிலை எடுத்த போதும் கூடயாராவது அதை தொடங்கி வைத்து பிறகு என்னிடம் கொண்டு வந்து விட்ட நிகழ்வினை இப்போது நினைத்துப் பார்ககிறேன் . ஒன்றை மறுபடியும் முதலில்  இருந்து துவங்குவது , என்பது  மறு வாய்ப்பாக பார்க்கின்ற போது, அது ஒரு வரம் போல தோன்றினாலும் அது அப்படித்தானா என்கிற கேள்வியும்  எழுகிறது .  
வாழ்க்கை முறையை முற்றாக மாற்றிக்கொள்ள நேரிடும் ஒரு காலம் எழுந்தபோது அதை எப்படி பகுத்துக்கொள்வது என்கிற புரியாமையும் சேர்ந்தே எழுந்தது  .

தன்னை பகுத்துக் கொள்வது ஓர் அரிய திறன் அல்ல. நாம் அனைவருமே செய்வதுதான். இதைச் செய்ய பழகிக்கொள்ளவேண்டும், அவ்வளவே. எண்ணிப்பாருங்கள் எந்தப் பெருஞ்சோகத்திலும் மனிதர்கள் உண்கிறார்கள், நீர் அருந்துகிறார்கள், தெரிந்தவரை வரவேற்கிறார்கள், அன்றாடம் என ஒன்றை பகுத்துக்கொண்டுதான் அனைவரும் வாழ்கிறார்கள். அப்பாலிருப்பதையும் அவ்வாறே பகுத்துக்கொள்ள முடியும்என்கிறார் ஜெயமோகன்.

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 96 அழைப்பிதழ்