ஶ்ரீ:
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீளவும் எனது கடந்த சென்ற நினைவுகளில் இருந்து என்னை திரட்டிக் கொள்ள நான் துவங்கிய பதிவுகளை தொடர நினைக்கின்றேன் . இது ஒரு வித அவதனிப்பின் வேறொரு வடிவமாக இருக்கலாம் . சொல் திரளாத காரணத்தினால் இந்த இடைவெளி என நினைக்கிறேன் .பிறிதொன்று வெண்முரசு முடிவுறும் காலத்தில் இருந்தது . மிக விசையுடன் எழுதப்பட்ட நேரம் கண்ணனின் மறைவு பெரும் நிலையழிதலை கொடுத்தது . எந்த காரணத்திற்காக நான் வெண்முரசிற்குள் வந்ததேனோ அது நிகழும் அருகில் வேறு ஒன்றை என்னால் யோசிக்க இயலவில்லை .எனது மெய்மைக்கான சொல்லை அடைந்திருந்தேன் . தேடல்கள் அங்கிருந்து வேறொரு வடிவம் கொள்ள துவங்கி இருந்தது . அதனால் இதை மறுபடியும் எழுதி பார்ப்பது என முடிவு செய்தேன் .
கிருபநிதி அரிகிருஷ்ணன்
அடையாளமாதல் - 526
பதிவு : 526 / 718 / தேதி 20 ஆகஸ்ட் 2020
* மாறாத கோட்பாடு *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 01 .
1996 ல் பொது செயளாலராக பொறுப்பேற்ற பிறகும் பல வித தடைகளை தாண்டி எனது திட்டப்படி அமைப்பை கொண்டு செல்ல நான்கு வருடம் பிடித்தது .முதற் காரணம் பழைய நிர்வாகிகளை உள்ளே கொண்டுவரும் முயற்சியில் தோல்வி அடைந்திருந்தேன் .இரண்டாவது புதியவர்களை கட்சி நிர்வாகத்திற்கு பழக்கி எடுப்பது சாத்தியமில்லை என தெளிவாக புரிந்திருந்திருந்தேன் . ஆனால் வாய்ப்புகளின் கதவு திறந்து கிடக்கும் போது அதை புறந்தள்ளிச் செல்வது சரியல்ல என்பதே எனது எண்ணமாக அப்போது இருந்தது . புதியவர்களை கொண்டு முயற்சித்து பார்ப்பது என்று அவர்களை முறைப்படுத்தும் திட்டங்களை உருவாக்க துவங்கினேன் .
அரசியல் நுண்ணிய மனங்களின் விளையாட்டு அதை ஒருவருக்கு கற்றுத் தருவது என்பதை போல மடமை பிறிதில்லை .என்னுடன் நியமிக்கப்பட்ட பிற நிர்வாகிகளின் செயல்படாமை எனக்கு சூழ்நிலையை சாதகப்படுத்திக் கொடுத்ததிருந்தது . எனது எதிரணியினர் என்னை முடக்க வல்சராஜை பயன்படுத்தினர் .இப்போது அவர் ஒதுங்கிக் கொள்ள எதிர் நண்பர்களுக்கு சண்முகத்தை அனுக துணிச்சலில்லை . இருப்பினும் என்னுடன் நியமிக்கப்பட்ட ஐந்து பொது செயலாளர்களில் ஒருவரான வையத்தரசு மட்டும் சண்முகத்திடம் என்னை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தார் .
வையத்தரசின் குற்றச்சாட்டுகளை சண்முகம் தனது வழமையான பாணியில் எதிர்கொண்டார் , அது என்னை அனைத்தையும் கடந்து செயல்படும் அடங்காமையாக பிறரால் பார்கப்பட்டிருக்க வேண்டும் .மாநில இளைஞர் காங்கிரஸில் தலைவராக வல்சராஜ் அமைப்பில் ஐந்து பொது செயளாலர்களில் ஒருவனாக இருக்கையில் எனக்கென தனித்த அதிகாரங்கள் என எதுவும் இல்லை . ஆனால் எனக்கிருந்த “சண்முகத்துடனான அனுக்கம்” என்கிற உரிய இடம் என்கிற பிறரின் புரிதல் !!! அப்போது நன்றாக வேலை செய்யத் துவங்கி இருக்க வேண்டும் .
அரசியலில் ஒருவர் பின்னால் அணித்திரளும் எளிய மக்கள் பற்றிய ஆச்சர்யம் எனக்கு எப்போதும் இருப்பது .அரசியலில் மூன்றாம் இடத்தை வகிக்கும் அவர்களே வெற்றிபெறும் நபரை கணிக்கின்றனர் . அவர்களின் கணிப்பு 90 சதவிகிதம் பொய்ப்பதில்லை . அவர்கள் யாரை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறார்களோ , அதை உணரும் இரண்டாம் நிலை தலைவர்கள் அவர்களை முறைப்படுத்த தங்கள் இடம் நோக்கி நகர்கிறார்கள் .அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . இந்த செயல்முறை தொடங்கிய பிறகு வெற்றி பெருபவராக கணிக்கப்பட்டவர் வெற்றியை நெருங்குகிறார் .இது என்றும் மாறாத இயற்கையின் விந்தையான வதி .
இவை அனைத்தையும் கடந்து தனது செயல்பாட்டை சரியாக வகுப்பவருக்கு முயற்சி அவரின் உச்ச கட்ட வெற்றியை தொடுகிறது .வெண்முரசின் களிற்றுயானை நிறையில் “எளிய மக்கள், தங்கள் வாழ்வில் வெற்றி என ஒன்றை உணராதவர்கள். வெற்றியின் பொருட்டே அவர்கள் வெல்பவர்களை வழிபடுகிறார்கள், அவ்வெற்றி தங்கள் வெற்றியென கொண்டாடுகையில் வாழ்வை பொருட்செறிவு கொண்டதாக ஆக்கிக்கொள்கிறார்கள். அதன் பொருட்டு அத்தலைவர்களின் கொடுமைகளைக்கூட பொறுத்துக்கொள்கிறார்கள். தங்கள் தலைவர்களின் தோல்வியில் உளம் சோர்கிறார்கள். ஆனால் மிக விரைவிலேயே தோற்றவர்களை விட்டு விலகிவிடுகிறார்கள். அவர்களை தங்களிலிருந்து இயல்பாக அகற்றிக்கொள்கிறார்கள் எச்சமின்றி மறக்கவும் அவர்களால் முடியும் என்பது சாமாண்யர்களின் உளவிவியல். வெண்முரசு அதை மிக செறிவாக முன்வைப்பது பிரமிப்பளிப்பது .
அமைப்பிற்கு புதிதாக வரும் சிலரை கொண்டே அதை நிரப்ப வேண்டிய கட்டாயம் எனக்கு . அது மிகுந்த வெறுப்பையும் , ஆயாசத்தையும் கொடுத்த காலம் . நீண்ட யோசனைக்கு பிறகு தொகுதி நிர்வாக கமிட்டியை நியமனம் செய்வது என முடிவுசெய்தேன் . அது மாநில கட்சி அமைப்பை கொந்தளிக்க செய்வது அதை விட தலைவரிடம் அதற்கான அனுமதியை பெறுவது மேலும் சிக்கலானது .ஏறாக்குறைய நடவாதது .பலர் பலமுறை தோற்றது ஆனால் அதை முயற்சித்து பார்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை .
சண்முகம் எனது முயற்சிகளுக்கு எதிரானவராக நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அரசியல் நிகழ்தல் என்பது பலவித முரணியக்கம் வழியாக நிலைகொள்வது . சில சாதகமற்ற நிலைகளை தலைவர்கள் மாற்ற ஒரு போதும் முயன்றதில்லை காரணம் அது நிலவும் சமன்பாட்டை எங்கோ ஒரு புள்ளியில் குலைத்து விடுவதற்கான வாய்பபை அஞ்சுகிறார்கள் .
இதன் அரசியல் யதாரத்தம் புரிந்திருந்ததால் சரியான தருணத்திற்கு காத்திருந்த போதுதான் தில்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டு அழைப்பு கிடைத்தது அதை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன் .சண்முகத்துடன் அது ஒரு விபரீத விளையாட்டு என்றாலும் அதை செய்து பார்க்க முடிவெடுத்ததற்கு முக்கிய காரணம் சண்முகம் அனுமதிக்கும் செறிவான உரையாடலும் அதற்கு பின் உள்ள அரசியல் யதரத்தத்தையும், அதை முன்வைக்கும் திறனையும் சரியாக செய்ய இயலுமானால் அவரால் அதை புறக்கணிக்க இயலாது என்பது நான் நன்கு அறிந்தது அதை இம்முறை உபயோகப் படுத்திப் பார்க்க முடிவெடுத்தேன். .
வல்சராஜ் தலைவராக நியமிக்கப்பட்ட போது , பழைய அமைப்பில் இருந்த சுய மரியாதையும் செல்வாக்குமுள்ள இரண்டாம் நிலை தலைவர்களில் பலர் ஒதுங்கிக் கொள்ள பதவியில் இருப்பதனால் கிடைக்கும் அங்கீகாரத்தை விழையும் சிலர் மட்டும் வல்சராஜை சூழ அமர்ந்து கொண்டனர் .அவர்களும் ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்து வெளியேறியதும் உருவான வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு தானாக வாய்த்தது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக