https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 9 மே, 2019

* தேடலில் 1 *

ஶ்ரீ:



பதிவு : 616 / தேதி 09 மே 2019

* தேடலில்


வாழ்வியல் தருணங்கள்  ” - 01
வெண்முரசு 21/இருட்கனி  -30




அவன் செவிகள் மூடியிருக்கின்றன. தன்னை வெறுப்பவனும் தன்னை வழிபடுபவனும் செவிகளை மூடிக்கொள்கிறான்” என்றது தூமவர்ணி. பிற குரங்குகள் அதைச் சுற்றி அமர்ந்தன. அவன் பெருந்துயர் நோக்கி செல்கிறான்” என்று தூமவர்ணி சொன்னது.

 இறப்பா? சிறுமையா?” என்றது சௌவர்ணன். மீள முடியாத உண்மையைப்போல் பெருந்துயர் அளிப்பது வேறு ஏது?” என்று தூமவர்ணி சொன்னது. அது அவனை சிறைப்படுத்துமா?” என்றது பீதகர்ணி. இல்லை, எல்லா உண்மைகளும் விடுதலை அளிப்பவையே” என்று அன்னை சொன்னது. எனில் அதை அவன் அறிந்துகொள்வதல்லவா நன்று?” என்றது சௌவர்ணன்.

தூமவர்ணி சீற்றத்துடன் பற்களைக் காட்டி எந்த அன்னையாவது தன் மைந்தன் பட்டு உலகறிந்து முதிரவேண்டுமென்று எண்ணுவாளா? தன் மைந்தனின் அலைக்கழிப்பும் துயரும் வாழ்வை அறியாததனால் அமைவதே என்று அறிந்தாலும் மைந்தர் முதிர்ந்து வாழ்வறிய வேண்டுமென்று பெற்றோர் விரும்புவார்களா?” என்றது

பீதகர்ணி ஆம், என்றும் உலகறியா சிறுமைந்தராக அவர்கள் இருக்கவேண்டும், இவ்வுலகே குவிந்து அவர்களை காக்கவேண்டும் என்றுதான் இவ்வுலகெங்கும் அன்னையர் எண்ணுகிறார்கள்” என்றது.

ஏன்?” என்றது அப்பால் வந்து கிளையில் அமர்ந்த சிறுகுரங்கான மூர்த்தன். தூமவர்ணி சலிப்புடன் தலையசைத்து அறியேன். மானுடர் எவ்வண்ணம் உணர்கிறார்கள் என்பதை அவர்கள்தான் கூறவேண்டும். மைந்தர் முதிர்கையில் தந்தையர் தங்கள் இறப்பை உணர்கிறார்கள். அன்னையர் பொருளின்மையை சென்றடைகிறார்கள். அதனாலாக இருக்கலாம். அன்றி முதிர்வென்பதே இறப்பை நோக்கிய செலவு என்று உணர்ந்ததனாலாக இருக்கலாம்” என்றது.

அனைத்துக் குரங்குகளுக்கும் பின்னால் மூச்சிரைக்க வந்த மிக முதிர்ந்த பெருங்குரங்கான கும்போதரன் கிளைக்கவரில் அமர்ந்து வாலை தொங்கவிட்டு சாய்ந்துகொண்டு அவ்வாறல்ல. இளமையில் அறியாமையே களிப்பும் துயரும். வளர்தல் என்பது அறிதல். பின்னர் அறிதலே களிப்பும் துயரும். அறியாமையும் அறிவும் அறிபவனுடன் விளையாடுகின்றன. அறிதலும், அறியாமையை கண்டடைதலும், மீண்டும் அறிதலும், அறிதொறும் அறியாமை காண்டலும் என நிகழும் அந்த விளையாட்டே வாழ்வின் கொண்டாட்டம். வலியும் துயரும் கொண்டாட்டமே என்று அறிக! ஊசல் பின்னகராவிடில் முன்னெழ இயலாது” என்றது. இளம்குரங்குகள் அதை நோக்கின

கும்போதரன் முதிர்ந்தபின் அறிபவை அனைத்தும் மலைகளைப்போல் மாறாது நிலைகொள்ளும் மெய்மைகள். பெருமெய்மைகள் அனைத்தும் அறிபவனுக்கு வெறுமையை மட்டும் அளிக்கின்றன” என்றது. ஏன்?” என்று சிறுவனாகிய புஷ்பகர்ணி அதை நோக்கி தாவிச் சென்று அருகே நின்று தலைசரித்து இமைமூடி விழிமின்னி கேட்டது. ஏனெனில் இங்கு மகிழ்ச்சியென்று நாம் அறிவது அனைத்தும் ஆணவத்தின் பிறிதொரு வடிவையே. வெல்வது, நுகர்வது, ஈவது என நாம் இங்கு கொண்டாடும் அனைத்தும் ஆணவத்தின் தோற்றங்களைத்தான். மெய்யறிவு ஆணவத்தை அளிக்கிறது. மகிழ்வை மறைத்துவிடுகிறது” என்று கும்போதரன் சொன்னது.

ஆணவ அழிவு என்பது பேருவகை என்றல்லவா கேட்டிருக்கிறேன்?” என்று மரங்களுக்கிடையிலிருந்து ஒரு பெண்குரங்கு சொன்னது. கும்போதரன் திரும்பி அந்த இளம் பெண்குரங்கை சற்று நேரம் பார்த்தது. அதுவரை பேசிய அனைத்தையும் மறந்து அரைத்துயிலில் ஆழ்ந்தது. புஷ்பகர்ணி பாய்ந்து அதன் அருகே வந்து அதன் காலைப்பற்றி அசைத்து சொல்லுங்கள், தாதையே” என்றது. சற்றே இழுபட்ட வாயிலிருந்து எச்சில் கோழை வழிய அதை கையால் துடைத்துக்கொண்டு என்ன? என்ன?” என்றது கும்போதரன். சற்று முன் சொல்லிக்கொண்டிருந்தீர்களே என்றது இன்னொரு இளமைந்தனாகிய மூர்த்தன். என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” என்றது கும்போதரன்.

புஷ்பகர்ணி கிளைபற்றி மேலேறி அதன் தலையருகே வந்து சிறு கிளையில் அமர்ந்து மெய்மையை அறிவது துயரென்றீர்கள். அது மகிழ்வென்றல்லவா சொல்லப்பட்டுள்ளது என்று அவர் கேட்டார்” என்றது. ஆம், மெய்யறிந்து அதை சென்றடைந்தவர்கள் கூறிய சொற்கள் அவை. அது மகிழ்வென்றே உரைக்கின்றன நம் உடலில் எழும் மூதாதையர் குரல்களும். மானுடரின் நூல்களில் பதிந்துள்ள சொற்களும் மற்றொன்று கூறவில்லை. ஆயினும் நாம் அறியும் மெய்மையின் கணத்தோற்றங்கள் அனைத்தும் நாம் கொண்டுள்ள அனைத்தையும் பொருளற்றவையாக்கி சோர்வையும் சலிப்பையும் வெறுமையையும் மட்டுமே அளிக்கின்றன” என்றது கும்போதரன்.

சற்று நேரங்கழிந்து பீதகர்ணி ஆம், நான் இவ்வாழ்வில் பொருட்படுத்தக்கூடிய எதையேனும் அறிந்திருக்கிறேன் என்றால் அதன்பின் நெடுநாட்கள் வெறுமையை மட்டுமே உணர்ந்திருக்கிறேன். அவ்வெறுமையிலிருந்து என்னை பிடுங்கி அகற்றிக்கொண்டு பொருளற்றவை என்று நன்கறிந்த சிறு செயல்களில் ஈடுபட்டு, சிறு பூசல்களில் ஊடாடி, சிறு விழைவுகளை துரத்திச்சென்று, அவ்வெறுமையிலிருந்து மீண்டு வந்தேன். இங்கு நான் வைத்திருப்பவை அனைத்தும் அதன் பின்னர் நான் திரட்டி என் மேல் அணிந்துகொண்டிருப்பவைதான்” என்றது.மற்ற குரங்குகள் ஒன்றும் சொல்லவில்லை. சில குரங்குகள் எண்ணம்கூர சலிப்புற்றவை என தலையை சொறிந்துகொண்டன

பீதகர்ணி தொடர்ந்தது அவ்வப்போது தனிமையில் அவ்வெறுமையை சென்று தொடுகையில் என் உள்ளம் திடுக்கிட்டு குளிர்ந்து உறைகிறது. அக்கணமே அதை உதறி மீண்டு வந்து இவற்றில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன்” என்றது. சௌவர்ணன் ஏன் நீ அறிந்தவற்றில் சென்று நிலைகொள்ள முடியவில்லை?” என்றது. அங்கு செல்ல நான் இங்கிருக்கும் அனைத்தையும் விட்டுவிடவேண்டும். நான் அறிந்து திளைத்து அறிதல்களாகவும் நினைவுகளாகவும் சேர்த்துக்கொண்டுள்ள ஒவ்வொன்றையும். எண்ணவே அச்சம் கொள்கிறேன்” என்றது பீதகர்ணி.

ஒவ்வொரு அறிதலும் ஒரு சிறு இறப்பு” என்றது கும்போதரன் எங்கிருந்தோ என. அக்குரல் அதன் வாயிலிருந்துதான் எழுந்ததா என்னும் ஐயம் பிற குரங்குகளுக்கு ஏற்பட அவை மெய்ப்பு கொண்டன. ஆனால் மெய்மை விடுதலை செய்கிறது என்கிறார்கள். நீ இப்போது கையில் வைத்திருக்கும் ஒவ்வொன்றும் உன்னை இங்கு கட்டிப்போடுவன. இவை உன்னால் தாள முடியாத துயரை எப்போதுமே அளிக்குமெனில் அக்கணமே அவற்றை உதறிவிட்டு நீ உள்ளே வைத்திருக்கும் அந்த மெய்மையை சென்று தொட்டுவிடுவாய். அதை பற்றிக்கொண்டு இவையனைத்தையும் துறக்க முயல்வாய்” என்றது தூமவர்ணி.

கும்போதரன் மெய்மை விடுதலை செய்கிறது” என்று தானிருந்த மாற்றுலகிலிருந்து தனக்கே என சொன்னது. விடுதலை என்பது இழப்பும் கூடத்தான். இழப்பவற்றின் ஏக்கம் விடுதலை கொண்ட எவருக்கும் சற்று நாள் இருக்கும். பெருநோய் கொண்டு வலி சூடித் துடிப்பவர்கள்கூட அதிலிருந்து விடுதலை கொண்டதும் அவ்வலியை நினைத்து சற்று ஏங்குவதை பார்த்திருக்கிறேன். தன்னிடம் இருந்த நன்றோ தீதோ விலகிச்சென்றால் மானுடன் ஏக்கம் கொள்கிறான். ஏனெனில் அதை தன்னுடையதென்றே அவன் உணர்கிறான். எதுவாயினும் அது தன் ஆணவத்தின் ஒரு பகுதியே என ஆழத்தில் அறிந்திருக்கிறான்.

அந்த ஏக்கத்தையும் கடந்துவிட்டால்தான் மெய்மை அளிக்கும் விடுதலை உவகையை அளிக்கத்தொடங்கும். அது பிறிதொன்றால் மறுநிகர் செய்யப்படாத உவகை என்பதனால் கணந்தோறும் பெருகும். பெருகுந்தோறும் பெறுபவனையும் பெருகவைப்பதனால் திகட்டுவதில்லை. மூதாதையர் சொல்லைக்கொண்டு நோக்கினால் பெறுபவன் பெறுபொருளாகவே மாறுவதனால் பெறுவதென்பதே நிகழாமலாகி பெருவெளியென்று விரிந்து இருப்பும் இன்மையும் அகன்று பரம் என நின்றிருக்கும் நிலை அது.
சீற்றத்துடன் பெண்குரங்கான விருக்ஷநந்தினி கேட்டது பிரம்மம் மானுடனுடன் ஏன் அவ்வாறு விளையாட வேண்டும்?” பீதகர்ணி எனக்கு புரியவில்லை. என்ன விளையாட்டு?” என்று கேட்டது. இங்கு இத்தனை இனிய காட்டை, இன்கனிகளை, அழகிய சுனைகளை, காற்றை, ஒளியைப் படைத்து நம்மை சூழ வைத்திருக்கிறது. நாம் அதில் ஆடிக் களிக்கிறோம். உடன் நோயையும் இறப்பையும் பின்னி அனைத்தையும் மறுநிகர் செய்திருக்கிறது. மகிழ்கையில் துயரையும் நலம்கொள்கையில் நோயையும் வாழ்வில் சாவையும் எண்ணி எண்ணி நாம் நிலையழிகிறோம்.

அதன் குரல் ஓங்கியது. இவையனைத்திற்கும் அப்பால் இவையனைத்தும் பொருளற்றவை என்று காட்டும் ஒன்றை நிறுவி அதன் ஒரு துளி சுவை அனைவருக்கும் ஒருகணமேனும் அமையும்படி வகுத்துள்ளது. இங்கிருக்கும் நன்மை தீமைகளில் ஊசலாடி எங்கோ இருக்கும் இவைகடந்த ஒன்றை சற்றே அறிந்து முழுதடைய ஏங்கி எத்திசையும் தேடி இங்கிருந்து அங்கென முடிவிலா ஊசலாட்டத்தை அடைந்து ஒருகணமும் நிலைபெறாமல் அழியும் பொருட்டே உலகிலுள்ள உயிர்களனைத்தும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவென்பது பிரம்மம் அளித்துள்ள ஒரு கொடை. அதனூடாக அறிவுகொண்டோர் தன்னை வந்தடையவேண்டுமென்று அது எண்ணுகிறது” என்றது கும்போதரன்

நீ அறியமாட்டாய், இங்குள உயிர்கள் ஒவ்வொன்றும் முற்பிறவியில் நன்மை செய்தவை. நலம் பேணி, வீரம் விளைவித்து, அறம் நின்று, தவமியற்றி, மேலும் மேலும் பிறவியெடுத்து அறிவடைந்து அகம் கூர்கொண்டு மெய்மையை சென்றடைகின்றன. பிரம்மம் பல்லாயிரம்கோடித் துளிகளாக தன்னை சிதறடித்து ஒவ்வொரு துளியையும் தன்னை நோக்கி ஈர்த்து தானென இணைத்து முடிவிலாது தன்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இச்சொற்கள் இங்கு நின்றுவிடுவதே நல்லது. இவற்றை நாம் மீளமீளப் பேசுவதனால் பொருளொன்றுமில்லை. முதியோர் எப்போதும் இவற்றை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இளையோர் அவற்றை முற்றறியக் கூடுவதுமில்லை. எங்கேனும் ஒரு தலைமுறையில் முதியோர் இவற்றைக் கூறுவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றால் நம்மைப்போன்ற மரமானுடர்களும் அவர்களைப் போன்ற நிலமானுடர்களும் விடுதலைபெறுவோம்” என்றது பீதகர்ணி.

கும்போதரன் ஆம், நானும் அதை எண்ணுவதுண்டு. துள்ளித் திரியும் என் சிறார்களிடம் ஒருபோதும் இவற்றை கூறலாகாதென்று. ஆயினும் இங்கிருக்கும் ஒவ்வொன்றும் நான் உணர்ந்த ஒன்றுக்கு சான்று கூறுவனவாக தன்னை மாற்றிகொள்கையில், ஒவ்வொரு நிகழ்விலும் கூறுவதற்கு ஒன்று என்னிடம் எழுந்து நாகொண்டு துடிக்கையில் உளம் அடக்கி அமர்வது அத்தனை எளிதாக இல்லை” என்றது. நீள்மூச்சுடன் நன்று. கூடுமானவரை கூறிவிட்டோம். இங்கு நிறுத்திகொள்வோம்” என்று சொல்லி விழிகளை மூடிக்கொண்டது.

எப்போதும் அச்சொற்கள் அவ்வண்ணம் திசைமுடிவில் முட்டி அறுபட்டு நிலைகொள்வதை அறிந்திருந்த குரங்குகள் ஆங்காங்கே சென்று அமர்ந்தன. சிறிய குரங்குகள் ஒன்றையொன்று துரத்தி கிளைகளில் தாவி விளையாடத் தொடங்கின. முலையருந்தும் மகவுகளை வயிற்றுடன் அணைத்தபடி அன்னைக் குரங்குகள் கவர்கிளையில் அமர்ந்து விழி மூடின. பெண்குரங்குகள் ஒன்றையொன்று பேன் துழாவத்தொடங்க நான்கைந்து முதிய ஆண் குரங்குகள் அப்பால் சென்று ஒரு கிளையில் அமர்ந்து விசைகொண்ட கையசைவுகளுடனும் உறுமல்களுடனும் தங்களுக்குள் பேசிக்கொண்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 73 அழைப்பிதழ்