https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

மணிவிழா - 73. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-3 *

 


ஶ்ரீ:



மணிவிழா - 73


03.04.2026






* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-3 *




ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப்பிடுகிறது. ஒருவர் பிறிதொருவரை அப்படித்தான் புரிந்து கொள்கிறார். அவை உலகலாவியவை என்கிற எண்ணம் உருவாகிவிடுகிறது. மீள மீள அதை உறுதிபடுத்தும் செய்திகளை வாரி அதன்மீது குவித்துக் கொண்டே இருக்கிறார். உண்மையில் அவை எண்ணிக்கையில் மிக பிரம்மாண்டமானவை என்பதால் நவீன உள்ளம் மயக்கமடைகிறது. தனது லாபம் கருதி அதை மேலும் மேலும் அணுகி இன்னும் உறுதியுடன் நம்புகிறது. பொரும்பான்மை என்பது எல்லாவற்றின் குறியீடாக பார்ப்பது சரியல்ல அந்த முறை அறக் கோட்பாடுகளுக்கு அணுக்கமானதுமல்ல. “வல்லவன் வகுத்தே வாய்க்கால்என்பதை உலகியல் நியாயமாக பார்பதற்கு பதில் அதில் உள்ளபகடியைதான் என்னால் ஊகிக்க முடிகிறது.  


புறவய உலகில் அரசியல் சரிநிலைகள் என மனதை சந்தை பொருளாதாரம் மயக்கச் செய்யும் இது போன்ற பகடி சொற்கள் பல்லாயிரம் அதன் உண்மை பொருளை உணராது நியாயப்படுத்துதல் அல்லது குறைத்தல் வாதத்தில் உள்ள உண்மை நிலை உணராமல் சமூக பயன்பாட்டின் பொருளை மட்டும் உறுதியாக நம்பி குடும்ப உறவுகளில் அவர்கள் உருவாக்கும் கடும் சீரழிவுகள் எளிதில் கடந்து செல்ல இயலாதவைகள் மட்டுமல்ல அப்படி சென்னவர்கள் நல்லூழின் வழியாக ஒருகால் மாற்றமடைந்து திரும்பி வர நினைத்தாலும் மீள இயலாதபடி அவை பாதைகள் அற்றவைகளாக தூர்ந்து போயிருப்பது துரஷ்டவசமானது


ஆழ்மனம் ஒருபோதும் ஞானிகள் அல்லாது பிறரால் கட்டுப்படுத்த இயலாது. ஞானிகளே கூட பல சந்தர்பங்களில் அதிலிருந்து நழுவி விழுவதை புராணங்கள் எங்கும் சொல்லப்பட்டிருக்கின்றன . ஆழ்மனம் பேரிருப்பின் வல்லமையால் இயங்குவது. அது அறம் மற்றும் விழுமியங்களால் மிக நெருக்கமாக பயணிக்க முயலலாம். அறக்கோட்பாடுகளை விழுமியங்கள் உருவாக்கி அளிக்கும் கருவியான ஆழ்மனதின் மேலடுக்கை சமாதனப்படுத்தி விட இயலலாம் என்பது கூட ஒரு பாவனை மட்டுமே அதன் அடியில் உறையும் பிறிதொன்று எதனாலும் அடங்குவதில்லை


இந்திய தொல்மரபு ஞானேந்தியங்களானகண், காது, மூக்கு, நாக்கு என்கிற நிரையில்தொகுஎன்கிற தோலை இறுதியில் வைக்கிறது. தோல் எப்படி ஞானேந்திரியமாக இருக்க முடியும். தோல் நேரடியாக மனதுடன் தொடர்புடையாது அதன் மயிர்கால்கள் பிறிதொரு உள்வாக்கும் மற்றும் வெளிபடுத்தும் கருவியாக செயல்படுகிறது. பல்லாயிரம் கோடி கண்களுக்கு புலனாகாத சரடுகளால் இணைக்கப்பட்டு புறவய உலகை மானுட உடல் எல்லையை கடந்த தொடர்புறுத்துகிறது . மனம் நேரடியாக தோலுடன் தொடர்புடையது என்பதால் மனுட இன்பங்களில் பலவற்றை அது அந்த தோலின் வழியாக அடைகிறது. உடல் மொழி என்பதும் உணர்வு நிலைகளை மிக துல்லியமாக வெளிப்படுத்தும் கண்களை கடந்து ஒருவரை ஆழ்மனம் புரிந்து கொள்ள உதவுவது அவரது உடலின் வெளிப்பாடு. அது நமது அவதானிப்பை புறந்தள்ளி நமக்குள் பிறிதொரு உணர்வை கடத்திவிடுகிறது. எல்லோருரையும் அந்த நுண் செய்தி தொந்தரவு செய்கிறது ஆனால் மிக சிலரே அது சொல்லும் செய்திகள உய்த்துணர்கிறார்கள் தங்கள் நிலைபாடுகளில் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்கிறார்கள். தங்கள் செயல்பாடுகளை அதிலிருந்து மறுவரையறை செய்து கொள்கிறார்கள்.


நவீன இளைஞர்களின் மனம் உலகியல் நியாயங்களை எடுத்துக் கொள்ள அவர்களின் சிந்தனையில் அறம் உருவாக்கி அளிக்கும் விழுமியங்களை மறுதளிக்கின்றன.

நவீன தலைமுறை தங்களுக்கு கையளிக்கப்பட்ட அல்லது இன்னதென அறியாத ஆழ்மனம் தெரிவு செய்து அளித்து அதுவரை கொண்டிருந்த விழுமியங்களை கூட வெறும் பொருளியல் நோக்கின் அடிப்படையில் கைவிட நேரும் போது உருவாகும் அறக் குழப்பம் அவர்களை மனப்பிளவிற்கு இட்டுச் செல்கிறதா? என்றால் என்னால் அதை அறுதியிட்டு சொல்ல இயலவில்லை. ஆனால் அனைவரையும் அது மிக நுண்மையாக பாதிக்கிறதா? என்றால் பதில் ஆம் என்றே நினைக்கிறேன்


யாரை நோக்கி இது பேசப்படுகிறது? என்பது அடுத்த கேள்வி. மனம் கட்டுக்குள் அடங்காமல் மனப்பிளவை நோக்கி செல்லும் சிலரை பற்றி அவதானிக்க ஒட்டு மொத்த கலாச்சாரத்தையும் அதன் பின்புலத்தையும் அவதானிக்க தோன்றுகிறது. அதற்கு இலக்கியம் ஆகச் சிறந்த கருவி. அங்கு மட்டுமே சமூகம் வழியாக ஆழ்மனம் வெளிப்படுகிறது. வரலாற்றில் பொதிகிறது பின் எல்லோருக்குமானதாக எக்காலத்திற்குமானதாக உருவெடுக்கிறது


வாழ்வியல் முறைகளில் விழுமிய கோட்பாடுகளை கொண்ட ஒருவர் சட்டென உணர்வு பெருக்கால் தன்னறம் நோக்கி மிக ஆழமான கேள்வியை உருவாக்கிக் கொள்ளும் போது அப்படி நிகழு வாய்பிருப்பதாக நினைக்கிறேன். தன்னை ஏமாளியாக உருவகிக்கும் மனப்பான்மை மிக எளிதில் அந்த உலையின் அருகில் கொண்டு சென்று விடுகிறது. அதுவரை உருவாக்கி வைத்திருந்த விழுமியங்களை் அனைத்தின் மீதும் உருவாகும் நம்பிக்கை இழப்பு ஒருவித விசை போல அனைத்தையும் புரட்டி விடுகிறது. மன ஊஞ்சலின் பிறிதொரு முனை தன்னிறக்கத்தின் பக்கம் சாய்ந்து விட்டபின் உருவாகும் வெடிப்பு அனைத்தையும் துவக்கி வைக்கிறது


ஏறக்குறைய அதன் அருகில் இருந்த எனக்கு அந்த உச்ச நிலை ஏன் ஏற்படவில்லை என்பதை இப்போது கேள்வியாக எழுப்பிக் கொள்கிறேன். முக்கியமான காரணியாக நான் நினைப்பது மனத்தின் செயல்பாட்டை ஒரு புள்ளியில் முற்றாக கைவிடுதலில் இருந்து அது துவங்குவதாக இருக்கலாம் . தர்க்க மற்றும் தத்துவங்களை அப்போது மனம் முழுமையாக நிராகரிக்கரிக்கிறது. எனது நல்லூழின் காரணமாக என்மனம் ஆழ்மனதின் பிறிதொரு அலகால் அழகியல் உணர்வை நோக்கி செலுத்தப்பட்டேன்


அதுவரை மதம் சார்ந்த தர்க்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த எனக்கு அந்த உளக் கொந்தளிப்பு சூழலில் அதன் அருகில் கூட செல்ல முடியாது விரட்டப்பட்டேன். கிருஷ்ண பிரமி எனது ஆச்சாரியனின் குரு என்கிற முறையில் அவர் எனக்கும் குருவிற்கு சமானமானவர். பலர் எனக்கு அவரின் உபன்யாசம் குறித்து சொன்ன போதெல்லாம் நான் அவரை முழுமையாக நிராகரித்தேன். ஆழ்மனத்தில் எங்கோ அவரிடம் எனக்கிருந்து ஈர்ப்பு என்னை முழுமையாக அவரை நோக்கி செலுத்தக்கூடும் என்கிற அச்சம் இருந்தது. அன்று அத்வைத கோட்பாடுகள் மீது எனக்கு வெறுப்பில்லை என்றாலும் அது மனதை குழுப்புவது என ஊகித்திருந்தேன் என்பதால் அது எனது அடிப்படை நிலைப்பாட்டிற்கு எதிரானது என உறுதியாக நினைத்தேன். பற்றி இருக்கும் சரணாகதி தத்துவத்திற்கு எதிரான எதை நோக்கியும் ஒருவித பாராமுகம்


உளக் கொந்தளிப்பின் உச்ச தருணத்தில் சிந்தனை செயல்பாடுகள் கடும் தொந்தரவை கொடுத்த சூழலில் அதிலிருந்து விடுபட மனத்தின் ஒழுக்கிற்குள் பயணபட முடிவெடுத்த போதுதான். நீங்கள் ஒருவருடன் காரில் பயணத்த போது கிருஷ்ணபிரேமியின் உபன்யாசம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அது ஒரு கீதா முகூர்த்தம்

வியாழன், 2 ஏப்ரல், 2026

மணிவிழா - 72. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-2 *

 ஶ்ரீ:



மணிவிழா - 72


02.04.2026






* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-2 *





பொருளாதரத்தை வைத்தே உறவுகளை வரையறை செய்வதும் புரிந்து கொள்ள முயல்வதும் அதனூடாக முரண்படும் போக்கும் எல்லா காலத்திற்குமானது. ஆனால் அதை முதன்மை அளவுகோளாக வைத்து எல்லாவற்றிலும் போட்டுப் பார்த்து இன்று அதன் புதிய கோட்பாடுகளை உருவாக்கிய இன்றைய நவீன உலகின் இளைஞர்கள் இறுதியில் சென்று சேரும் இருள் மிக கொடுமையானது. சமன்பாடு மூலம் அலைபாயலில்லாத மனத்தை உருவாக்கிக் கொள்ள அதற்குறிய கருவிகளை கொண்டு நிம்மதியடைகிறார்கள் அல்லது தங்களை கட்டும் அனைத்திலிருந்தும் விடுபட நினைக்கிறார்கள். இது ஒரு துவக்கம் மட்டுமே. விடுதலை உணர்வு மேலும் மேலும் அனைத்திலும் இதே அணுகுமுறையை கொண்டு வருகிறது. ஓரிரு சிக்கல்களுக்கு நல்ல தீர்வாக நம்பப்பட்டு இந்த முறை சில காலத்திற்குள் அனைத்திலும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது . அந்த கட்டத்தில் மிக நுண்மையான மாற்றம் நிகழ்கிறது. அன்றாடங்களினால் ஆன உலகில் முழுவதுமாக நுழைந்த பிறகு ஆழ்மனத்திற்கான வாசலை அது நிரந்தரமாக மூடிவிடுகிறது. பின்னர் அது செய்யும் மனம் மற்றும் உருக்குலைவு எவ்வளவு மோசமானது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை அதை ஒரு கோட்பாடாக மட்டுமே புரிந்திருந்த எனக்கு காலம் அதன் நிதர்சனப் பக்கங்களின் பயங்கரத்தின் ஆழத்தை மிக அணுக்கமாக பார்க்க வைத்தது


மனம் ஒரு விசித்திரமான உருவகம். ஆறு அறிவில் ஒன்றாக அது சொல்லப்பட்டாலும் நவீன கூறில் அது உருப்பாக ஏற்கப்படுவதில்லை என்பதால் மேலை உலகியலில் அதை ஒரு மையக் கருதுகோளாக கருதப்படுவதில்லை . மனதைமைன்ட்என்கிற மூளையாக கற்பித்துக் கொள்கிறது. ஆனால் நாம் மனதையே பல்வேறு செயல்பாடுகளின் விரிப்பாக புரிந்து வைத்திருக்கிறோம். அறவுணர்வோடு மிக அணுக்கமானதாக இந்திய மெய்யிலில் புரிந்து கொள்ளப்பட்ட அதை யார் மறுத்தாலும் அவர்களின்  தன்னிலை அழிகிறது. அழியும் ஒவ்வொரு கணமும் ஆழ்மனம் ஒருவித மிருக சீற்றலாக உருவெடுக்கிறது . எண்ணங்களின் வழியாக ஒருவரால் அவர்களே அறியாமல் அதை வளர்த்தெடுக்க இயல்கிறது. அதன் எரிபொருள் எதிர்மறை சிந்தனையில் இருந்து உருவாகிறது. ஒருவகை உளக் கொந்தளிப்பு. தன்னை ஏமாளியாக, ஏமாற்றப்பட்டதாக தேவையற்று தன் சக்திக்கு மீறி செலவழித்து விட்டதாக பிறர் தன்னை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிற எண்ணமே உள்ளத்தை கொந்தளிக்க செய்கிறது


உடல் பிராணனை முக்கிய கூறாக கொண்டு பல வித வாயுக்களால் இயங்குகிறது அது பலவித உஷ்ண நிலைகளை உருவாக்க கூடியது. ஜீரணம், காமம் மகிழ்வு மட்டுமின்றி சோகமும் வருத்தமும்  கூட ஒருவித உஷ்ண வெளிப்பாடு. இவற்றில் இருந்து முற்றும் மாறுபட்டு தியானத்தில் உருவாகும் சாத்வீக உஷ்ணம் வேறு வகையை சார்ந்தது. உடலில் ஒழுக்க நிலை குறைவுபட்டு தீவிர தியானத்தில் ஈடுபடும் ஒருவர் அடையும் உஷ்ணம் வேறு வகையானது. அது செய்திகளை கொண்டு செல்லும் நரம்பு மண்டலங்களை தகிக்கச் செய்வது. அதன் விளைவுகள் கணிக்க இயலாது. பல யோகிகளுக்கு அது மரணத்தை கொண்டு வந்திருக்கிறது. யோகிகளில் பலரை அது பித்தர்களாக்குகிறது . சுவாமி விவேகானந்தர் சமாதி பற்றி கூட அப்படி ஒரு செய்தி உண்டு. பாரம்பரிய குரு நிலைகளில் மட்டுமே அதற்கான மருந்தாக சூடான பாலில் பெருமளவு வெண்ணை கலந்து உட்கொள்ள சொல்கிறார்கள் . சாத்வீக உஷ்ணம் எதிர்மறையாக திரிபடைந்தால் இந்த முறை அதை போக்க இயல்வது. ராக ஆலாபனையில் சில குறிப்பிட்ட அக்னி சம்பந்தப்பட்ட ராகங்களை பாடும் வல்லமை உள்ளவர்கள் அந்த நிகழ்விற்கு முன் உடலை குளிர்விக்க இந்த முறையை பயன்படுத்தி இருப்தாக அறிந்தருக்கிறேன். அக்பர் சபையில் சில அபூர்வ ராகங்களை பாடும் முன்பு தான்சேன் இதை செய்ததாக சொல்லுவதுண்டு


அதற்கு இணையான அணையா பெரும் நெருப்பை தான் ஏமாந்ததாக ஏமாற்றப்பட்டதாக அல்லது கைவிடப்பட்டதாக குமுறும் ஒருவர் மிக விரைவில் தன் எண்ணங்களாலேயே அங்கு சென்று சேர்கிறார்கள்.மனம் என்கிற ஊஞ்சல் எப்போதும் எதிர்மறையாக ஒரு சார்பில் சென்று ஒட்டி நிற்பது அதன் இயல்பு . தனது நம்பிக்கை, விழுமியம் மற்றும் அறம் சார்ந்தவைகளின் பொருட்டு உருவாக்கி வைத்திருக்கும் கருவிகளால் மட்டுமே அந்த ஊஞ்சலை அதன் எதிர்மறையில் இருந்து வேர்விடாமல் கழற்றி நேர்மறை இடத்தில் சென்று தங்க வைக்க வைக்கிறது . அற நம்பிக்கையினால் மட்டுமே அதிலிருந்து தங்களுக்கான கருவிகளை கண்டடைகிறார்கள். அற உணர்வு ஒரு வித சாத்வீக எண்ணத்தில் இருந்து உருவாவதால் மெய்யிலுக்கு மிக அணுக்கமானது. மெய்யியலை பக்தியுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. இந்த புரிதல் நவீன உலகு முற்றும் இல்லை. அந்த குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் அந்த கருவிகளை உருவாக்கி நல்லூழின் பொருட்டு விடுபடுகிறார்கள். அதை உருவாக்கிக் கொள்ளாதவர்கள் அல்லது தவற விட்டவர்களின் வாழ்வில் நரகம் என ஒன்று தனித்து இல்லை


உடலின் தன்னியல்பான மனம் எதிர்மறை செயல்பாடுகளை கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. காமம் , கோபம், வஞ்சம் போன்றஅறம்மனித இயல்பில் இல்லை. இன்றுவரையில் அறத்தை வலியுறுத்தும் கோடிக்கணக்கான நூல்கள் மானுடத்தின் மீது எழுதி குவிக்கப்பட்டுள்ளது. மனம் எதிர்மறையாக செயலாற்றும் போது அதன் தீவிர இடையறாத கற்பனையில் இருந்து உருவாக்கும் அதீத வெப்பத்தை, உடல் தனது தோல்வழியாக அதை கடத்தி வெளியேற்ற முயல்கிறது. அகவயமான அலைக்கழிதலால் மனம் அன்றாடத்தில் உழன்று பிரபஞ்ச வெளியுடனான தனது தொடர்புறுத்தல் தோல்வியுறும் போது தோலின் நுண் துளைகள் மூடிக் கொள்கின்றன. அதன் உடனடி எதிர்விணை தூக்கமின்மை. தூக்கமின்மை அனைத்து நோயும் உருவாக்கும் கொடிய களம். அது சுழல் போல. மீள மீள துவக்க நிலைக்கு வரும் தோரும் முன்னிலும் வீரியம் பெற்று அதிர்வுகளை பெருக்கிக் கொண்டே செல்கிறது. அதற்கு எல்லையில்லை. அதீத விழிப்பு என்கிற தூக்கமின்மையை உருவாக்கி அதன் எண்ண அலைகளால் மேலும் மேலும் அதிர்வை பலமடங்கு பெருக்கி கொண்டே செல்வது. இது அதன் அடிப்படை விளைவு. ஒன்றை தொட்டு பிறிதொன்று என மீள மீள பிற அனைத்து நியாய தர்க்க நிலைபாடுகளை முற்றும் அழிக்க துவங்குகிறது


காந்தம் மட்டுமே நார்த் போல் சவுத் போல் என பிற பொருட்களின் உதவியின்றி ஒன்றை ஒன்று தனது வேறுபாடுகளால் ஒட்டி நிற்கின்றன. பிற அனைத்திற்கும் ஒட்டு பசை என மூன்றாவது பொருள் தேவையாகிறது


மனம் உடலின் அனைத்து நுண்மை கருதுகோளுடன் ஒன்றை ஒன்று தொடர்புறுத்துகிறது நம் நினைவின் கூறுகள் அவற்றை இணைக்கிறது. உடல் சார்ந்த தானியங்கி உறுப்புகள் முதல் உயிர் எனப்படும் கருதுகோளுடன் இணைகிறது. சிந்தனை சார்ந்த நிலைபாடுகளால் அது ஆன்மா என்கிற கருதுகோளை இணைக்கிறது. ஆன்மா என்கிற கருதுகோளை மதத்திற்கு அப்பால் ஒரு தத்துவம் குறியீடாக பார்க்க இயலுமானால் அதன் செயல்பாடுகள் எவ்வாறு நமது சிந்தனையை சார்ந்துள்ளது என்பதையும் அது நமது வாழ்வியலில் என்ன மாதிரியான நன்மை மற்றும் பாதிப்பை கொண்டு வருகிறது என்பதை புரிந்து கொள்ள இயலும்


சிந்தனை கற்பனைகளால் ஆனது அதனுடைய எதிர்மறை தீவிரம் உச்சம் தொடும்போது சிலருக்கு சட்டென உருவாகும் மனம் பிளவு போன்ற ஒன்று மிக விரைவில் மனப் பிறழ்வு நிலை நோக்கி நகர்த்திவிடுகிறது. உள சமன்பாடு குலையும் போது மிக தீவிர உள அச்சத்தை உருவாக்குவதுடன் அதன் அத்தனை கற்பனைகளையும் நம்ப துவங்குகிறது. உடலின் வெப்ப அதிகரிப்பால் நிகழும் உடல் நீரின் குறைபாடு மனம் உருவாக்கும் கற்பனை உருவெளிப்பாட்டை நிஜ வடிவத்தை பார்ப்பதாக நம்ப வைக்கிறது. இது மிக தீவிர மனப்பிறழ்வின் அடையாளம். நல்லூழின் காரணமாக அதிலிருந்து மீண்டாலும் அது உருவாக்கிய உணர்வுநிலை ஒரு தழும்பைப் போல தங்கிவிடுவதால் பின் ஒரு போதும் அவர்கள் பழைய நிலைக்கு முழுவதுமாக திரும்புவதில்லை என்பதுடன் புதிய இன்னும் தீவிர உணர்வு நிலைக்கு தள்ளப்படுவதுண்டு. கற்பனைக்கு இடம் கொடுக்காத தீவிர யதார்த்த புறவய சிக்கல் உருவானால் ஒருகால் அது அவர்களை மீட்கலாம்


பாரம்பரியம் என்பது புறவய யாதர்தங்களில் இருந்து மாறுபட்டு அக நம்பிக்கையில் பரிணமித்து பல்லாயிரம் ஆண்டு தொன்மை சார்ந்து உருவாகி வந்தது. பண்பாடு கலாச்சாரம் சம்பிரதாயம் என தனக்கான விழுமியங்களை மனித குலம் அதிலிருந்து உருவாக்கி எடுத்த ஒரு தொகை. நிரூபனவாத தர்க்க நியாயங்கள் கோருவதற்கு அப்பாற்பட்டு ஆழ்மனதால் மட்டுமே உணரப்படுவது. அது நவீன உலகம் கேட்டகும் எந்த யதார்த்த வாதம் என்கிறபுத்திசாலித்தனமானகேள்விகளுக்கு தனது ஆழந்த மௌனத்தை மட்டுமே முன்வைக்கிறது


பண்பாடு என்பது மொழி உருவாகி வராத மனிதன் பண்படாத காலம் முதல் அது அங்கு இருந்து கொண்டிருக்கிறது. ஆதிமனிதன் அதை தனது ஆழ்மனக் கனவில் இருந்து பெற்றிருக்கிறான் என்பதற்கான புறவயமான சாட்சியாக நடுகற்கற்கலும் குகை ஓவியங்களும் அதன் தெய்வமென இன்றும் வெளிப்படுகின்றன. இரண்டு வகையானவர்கள் அதை தங்கள் துறைகளால் வரையறை செய்ய முயல்கிறார்கள். ஆராச்சியாளர்கள் அதன் கால அளவை முன் வைத்து அதை பிரித்தறிய முயல்கிறார்கள். இலக்கியவாதிகள் அவற்றில் உறையும் கனவை சென்று தொடுகிறார்கள். அவர்களுக்கு படிபடுவது ஆராச்சியாளர்களுக்கு புரிவதில்லை . ஆழ்கனவுகளுடன் சென்று தொடும் ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளுக்கு அது முற்றும் வேறென ஒன்றை சொல்லுகிறது


ஆலமரத்தின் விதை ஆலமரத்தின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியது . அதனுள் ஆலமரத்தின் நுண்வடிவம் உள்ளது. அது போல கலாச்சாரம் பண்பாடு போன்றவை ஒரு விதையாக அனைவருக்கும் கையளிக்கப்படுகிறது. அற உணர்வினால் ஆழ்மதின் ஆழத்தில் அது நிலைநிறுத்தப்படுகிறது . அங்கு ஒரு மரமென விதையில் இருந்து உருவாகி ஒவ்வொருவரின் ஆளுமை அதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தங்களது கற்பனைக்கு அப்பாற்பட்ட நிஜ ஆளுமையை கண்டடைய அந்த கட்டமைப்பிற்குள் ஆழ்ந்து செல்பவர்கள் தங்களை அதில் அடையாளம் காணுகிறார்கள் . இலக்கியவாதிகள் மற்றும் சிறந்த ஆளுமையுள்ளவர்கள் சமூகத்தின் இன்றைய கட்டமைப்பையும் அது சென்று தொடவிருக்கும்  எல்லைகளையும் அதனூடாக கண்டடைகிறார்கள். இலக்கியவாதிகளின் புனைவு போல பலத்துறையை சேர்ந்த ஆளுமைகள் தங்கள் கனவுகளை அங்கிருந்து துவங்குகிறார்கள்


நவீன தலைமுறை தங்களை பாரம்பரிய உணர்வின் நீட்சியாக புரிந்திருப்பதும் அதில் காலம் தங்களுக்கு அளிப்பதாக நினைக்கும் புதிய கோட்பாடுகளை தயக்கமின்றி தங்களின் வாழ்கையில் இணைத்து பார்க்க முயல்வது பிழை புரிதல். பாரம்பரிய உணர்வுநிலை என்பது தொடர் மனப்பயிற்சி அதை சார்ந்த செயல்பாடுகளால் உருவாவது. அதற்கு தனி கவனம் தராமல சிந்தனை இல்லாதவர்களிடம் கூட அது தானாக வளர்வது என்றாலும் அதன் செழிப்பு தனிப்பட்ட ஒவ்வொருவரும் அதற்கு கொடுத்திருக்கும் இடம் அந்த செழிப்பை வரையறை செய்கிறது


புலம் பெயர்ந்து வாழ நேரும் போது மிகுந்த பதட்டமடைகிறார்கள். துவக்கத்தில் மேற்கத்திய உளவியலை ஏற்று அதன் ஒரு புள்ளியில் அதனுடனான முரணியக்கம் அவர்களுக்கு புதிய கோட்பாடகளை உருவாக்கி கொடுக்கிறது. அதன் வளர்சிதை மாற்றம் கோரும் நுண்மையான இடத்தை தங்களின் அன்றாடங்களுக்கு இரையாகி அதன் அடிப்படைகளை கேள்விக்கு உட்படுத்த நினைக்கிறார்கள்தங்களுக்கு கையளிக்கப்பட்ட அறக் கோட்பாடுகளை அந்த முற்றும் புதிய நவீன வாழ்வியலில் அடிப்படைகளுடன் பொருத்தி பார்த்து நம்பும் அசடர்கள் இந்த இருபதாண்டுகளில் மெல்ல உருவாகி இன்று எங்கும் நிறைந்துள்ளதை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் அஞ்சுவது அவர்களின் இந்த மனநிலையை


இன்று அவர்களுக்கு அடுத்து உருவாகி வந்து கொண்டிருக்கும் இன்னொரு தலைமுறை இதிலிருந்து விடுபடும் நிலையை கொண்டிருப்பதும்அறம்மற்றும்விழுமிய கோட்பாடுகள்மீது நம்பிக்கை கொள்ள இயல்வதும் நவீன மேற்கத்திய உளவியலுடன் தன்னை மிக இணக்கமாக வைத்துக் கொள்ளும் புதிய கோட்பாடுகளை புதிய நம்பிக்கைகளை நவீன உலகிற்கான புதிய விழுமியங்களை ஒருகால் அவர்கள் இனி வரும்காலத்தில் உருவாக்கலாம்


துவக்க நிலைகளில் தமது கோட்பாடுகளை உலகியல் நியாயத்தில் இருந்து எடுத்துக் கொள்கிற போது துரதிஷ்டவசமாக உலகியல் நியாயம் என்பது நுகர்தல் கலாச்சாரத்தின் நீட்சியாக உருமாற்றி புரிந்து கொள்ளப்படுகிறது என்பதால் ஒரு புள்ளிக்கு அப்பால் அதன் மீது உருவாகும் பிற கட்டுமானங்கள் குலைந்துவிடுகின்றன. ஆழ்மனத்தின் அடியில் இருந்து உருவாகும் அறச்சீற்றம் அந்த சமன்குலைவை உருவாக்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித நாகரீகம் அதன் மீதுதான் அமர்ந்திருக்கிறது. எளிய மனிதர்கள் அதற்கு இணையான அல்லது அதற்கு மாற்றான ஒன்றை ஒருபோதும் உருவாக்க இயலாது. மனதை நம்ப வைத்துவிட்ட உணர்வை அது நமக்கு அளிக்கலாம் ஆனால் அவை ஆழ்மனம் சென்று சேராதவை. அதன் கொந்தளிப்பை ஒருபோதும் போக்கிவிடுவதில்லை.


நவீன பொருளாதார கோட்பாடுகளை மேற்கத்திய நாடுகள் உருவாக்கி அளிப்பவை. ஐரோப்பிய நாடுகளில் நாம் பேணும் பல அறங்கள் வெவ்வேறு வடிவங்களில் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டு கால போரும் அதற்கு சிந்திய ரத்தமும் நவீன கோட்பாடுகளை நோக்கி அவர்களை கொண்டு சேர்த்திருக்கிறது . உலகியலை எண்ணி அஞ்ச வைப்பதில் இருந்து அது உருவாகி வந்திருக்கலாம். இன்று பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்று அவற்றுடன் உரையாடி இந்தியர்கள் ஆழ்மனத்திற்கு மூடி போன்று புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் இந்திய மனமும் அதன் அறக் கோட்பாடுகளும் அதற்கு முற்றிலும் எதிரானவை


இன்று இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கும் குடும்ப அமைப்புகளில் இந்த போக்கு உருவாகி ஆழமாக வேறூன்றி நின்று சில தாசாப்பதங்களாகிறது. ஒரு கட்டத்தில் பிள்ளைகள் தங்கள் பிழைப்பு கருதி பெற்றோரை கைவிடுதல் அல்லது நிராகரித்தல் சமூக ஏற்படையதாக உருவெடுத்தது அந்த நவீன உலகியல் நியாயத்தின் அடிப்படையில். அனைவருக்குமான விடை தெரியாத கேள்விகள் பலர் வாழ்வில் நிகழும் போது அரசியல் சரிநிலைகளை போன்ற ஒன்று எழுந்து அனைவரும் அதை நோக்கி செல்கின்றனர். எல்லோரும் செய்வதால் அது குற்றமல்ல என்கிற இடம் நவீன உலகியலை துவக்கி வைக்கிறது. அறம் என்கிற ஒன்றை கைவிடுதல் இங்கிருந்து துவங்குகிறது


புதிய பதிவுகள்

மணிவிழா - 73. * அறப் பிழையும் மனப் பிறழ்வும்-3 *

  ஶ்ரீ : மணிவிழா - 73 03.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -3 * ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப...