ஶ்ரீ:
மணிவிழா - 68
20.12.2025
* மீள மீள நிகழ்வது *
“இலக்கியம் அன்றாடயதார்த்தத்தில் இருந்தே உருவாகிறது. ஆனால் அதன் பேசுபொருள் அன்றாடம் அல்ல. அன்றாடம் கடந்த ஓர் அர்த்தம் உண்டா என்று அது தேடிச்செல்கிறது. நாம் இங்கே வாழும் வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று தொடர்பற்ற நிகழ்வுகளாலான ஒரு பெரும் பெருக்கு. அதில் உயிர்கள் ஒன்றையொன்று வென்றும் கொன்றும் தாங்கள் வாழவும், தங்கள் வாரிசுவரிசை பெருகவும் போட்டியிடுகின்றன. இதற்கப்பால் இங்கே உள்ள வாழ்வுக்கு ஏதேனும் பொருள் உண்டா? இந்த கண்கூடான பரப்புக்கு அடியில் இந்நிகழ்வுகள் ஏதேனும் வகையில் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளனவா? இந்த உதிரிப்புள்ளிகளுக்கு அர்த்தமளிக்கும் ஒரு அடித்தள நெசவுப்பரப்பு உண்டா?
இலக்கியத்தின் தேடல் எப்போதும் அதுதான்”.
“அப்படிச் ஓர் இணைப்புவலை இருந்தது என்றால் அது நம் எளிய அறிவுக்கு முழுமையாக அறியக்கூடுவதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி பல இணைப்புவலைகள் உண்டு என்றும், அவற்றின் ஒத்திசைவில் பெருந்திட்டங்கள் வெளிப்படுகின்றன என்றும் அறிவியல் காட்டியிருக்கிறது. இங்குள்ள உயிர்களெல்லாமே உயிர்களின ஒத்திசைவு என்னும் பெருந்திட்டத்திற்குள் தான் உள்ளன. டி.என்.ஏ என்னும் மாபெரும் திட்டம் உயிர்வலைக்கு அடியிலுள்ள அறியாப் பெருந்திட்டம். பிரபஞ்சத்தின் கால-வெளி இணைவு ஒரு பெருந்திட்டம். நுண்துகள்களின் மின்னேற்பும் விலக்கமும் உருவாக்கும் இன்னொரு மாபெரும் திட்டம். அதைப்போல இங்கே நிகழும் மானுடத்தின் செயல்கள் மற்றும் விளைவுகளாலான ஒரு நுண்ணிய பெருந்திட்டம் உண்டா? இங்குள்ள மானுடத்துயர்களுக்கான காரணம் என ஏதேனும் உண்டா?” என்கிறார் ஜெயமோகன்.
“விலகல்” என்கிற ஒன்றை வாழ்கையில் சந்தித்து கொண்டே இருக்கிறேன். அது ஏன் நான் மிக விழைந்து ஈடுபட்ட எல்லா துறைகளிலும் எனக்கு தொடர்ந்து நிகழ்கிறது . ஒன்று போல எல்லாவற்றின் உச்ச வெற்றிக்கு பின் விலகும் முடிவை ஏன் அடைகிறேன். அம்முடிவை எங்கிருந்து பெறுகிறேன் . என பல முறை என்னை கேட்டுக் கொண்டதுண்டு. அது பலவீனமா அல்லது தொடரமுடியாமை என்பது அகத்தடையா என்ன?
ஏன் அந்த துறைகளில் தொடர்ந்து நீடிக்க இயலவில்லை என்பதை அங்கு நிலவிய சமரசங்களை ஏற்காதது என ஒற்றை வரியில் பதிலை அடைந்து விடலாம் ஆனால் அது அத்தனை எளிதாக எனக்குள் நிகழவில்லை. ஒவ்வொன்றும் ஒரு மரணத்திற்கு இணையானது.
ஏதோ ஒரு தருணத்தில் அதனுடன் தொடர்ந்து பயணிக்க என் ஆழ்மனம் என்னை அனுமதிக்கவில்லை. அதற்கான காரணம் நான் அங்கு என்னை முன்வைக்கும் அனுகுமுறையாக இருக்கும் வாயப்புகளே அதிகம்.
எல்லாவற்றிலும் எனக்கான அடையாளமாக நான் உருவகிக்கும் ஒன்று என்னை மீறி எனது செயல்கள் வழியாக எப்போதும் நிகழ்ந்து விடுகிறது . அதுவே எனது கருத்தியலாக முன்வைக்கப்படுகிறது . ஒரு செயலில் நான் ஏற்கும் ஏற்காதவைகள் என்னென்ன என்பதை உடன் பயணிக்கவிரும்புவர்களிடம் தெளிவாக துவக்கத்தில் சொல்லிவிடுகிறேன். அவர்கள் என்னை பொருட்படுத்தும் அளவிற்கு நான் சொல்வதற்கான அர்த்தங்களை சென்று தொடுவதில்லை. ஆரம்பத்தில் என்னுடன் பயணிக்க அவர்கள் கொள்ளும் விழைவு அதற்கு காரணமாக இருந்திருக்கிறது.
நான் எவ்வகையாவது உள் நுழைய வேண்டும் என்கிற அவர்களுது விருப்பத்தால் நான் சொல்லும் அனைத்தையும் ஏற்கிறார்கள். பின்னர் நான் ஊகித்து சொன்ன எனது அகத்தடைகளாக அவை நிகழும் போது அவர்கள் மட்டுமல்ல நானும் அதிர்கிறேன். முதல் சந்திப்பின் போது எது எனது நிலைபாடாக இருக்கும் என முன் வைப்பதின் எதிர் சிக்கல் பற்றிய அவர்களுக்கு புரிதல் இல்லாமையால் நிகழ்கிறது. ஆகவே எனது நிபந்தனைகளை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த சிக்கலான இடத்தை அடையும் போது நான் சொல்லிய எதுவும் நினைவில் அவர்களின் நினைவில் நின்றிருக்காததால் அங்கு சமரசம் செய்து கொள்ள வேண்டியவனாக என்னை அவர்கள் எதிர்பார்க்கும் போது அவர்களின் எண்ணத்தை என்னால் எதிர் கொள்ள இயலாது என்பதை தெரிவிக்கிறேன் . அதற்கு அதிர்ந்து அவர்கள் மிக சாதாரணமாக அன்றாட உலகியல் காரணங்களை முன்வைக்கும் போது நான் எதிர்பார்க்கும் அவர்களில் இருந்து பிறிதொருவர் எழுந்து வருகிறார். நான் அவர்களை எக்காரணத்திற்காகவும் ஏற்பதில்லை முரணபட்டு அல்லது அவர்களுக்கு புரிய வைப்பது என் வேலையல்ல காரணம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆழத்தில் உணர்ந்திருக்கிறார்கள் என்பதால் அங்கிருந்து விலகுவதை தவிர எனக்கு வழிகள் இல்லை.
ஒரு செயலை துவங்கும் முன்பு அதன் வழியாக உருவாகும் எதிர்கால நன்மையை பார்க்கும் அதே கணம் அதிலிருந்து உருவாகும் எதிர்மறை அம்சத்தையும் பார்க்க முயல்கிறேன். அதற்கு என்ன தீர்வு அது குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விலக்கி வைப்பதற்கு பதிலாக அது நிகழம் நேரத்திற்கு அதை எதிர் கொள்ள வேண்டிய உறுதியை எதிர் பார்த்து திட்டமிட்டு துவங்குகிறேன். இது எனது பாணி
நான் அதை என் இளமை பருவத்தில் “துக்ளக் சோ” விடம் இருந்து பெற்றேன். பொதுவாக எல்லா கேள்விக்கும் பிறருக்கு அன்னியமான கோணத்தில் இருந்து தன்நிலை மாற்றமில்லாத மிக தெளிவான பதிலை அவர் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவரிடம் அந்த கேள்வி கேட்காமலாகும் போதும் கூட அது குறித்த அவரது நிலைப்பாடு அதுவாகத்தான் இருந்திருக்கும். அவர் அறுதியிட்ட பல விஷயங்களை பற்றி பிறர் கேட்காது போனாலும் அது பற்றி அவரது ஆழ்ந்து சிந்தித்து வைத்த நிலை எப்போதும் இருந்து கொண்டிருக்கும். காங்கிரஸ் கட்சி தலைவரிடம் சண்முகத்திடமும் அதற்கு பல படிகள் உயர்ந்து அதே பார்வை நிலைப்பாடுகளை நான் “ஜெ” விடம் பார்த்திருக்கிறேன். என்னை அவர்களுடன் மிக அணுக்கமாக ஆக்கிய ஒன்றாக இருக்கலாம்
என் நிலைப்பாடு இது என் அரசியல் இது என யாரும் கேட்க்காத போதும் அவர்கள் அது குறித்த தங்களின் நிலைப்பாட்டை முன்வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்களுடன் மட்டுமே மிக நெருக்கமாக என்னால் பயணிக்க இயல்கிறது. அவர்களிடம் இருந்து ஒரு சிறு துளியாவது நான் பெற்றிருக்கிறேன்.
எனது கனவு என் எண்ணம் செயல் திட்டம் இலக்கு என என் அரசியலை வெளிப்படுத்துகிறேன்.அவற்றின் ஆழத்தில் இருப்பது எனது தன்னறமாக விழுமியங்களை முன் வைத்தது என புரிந்து கொள்கிறேன் . ஒரு கணத்தில் என்னுடன் பயணிப்பவர்கள் உலகியல் காரணங்களை நடைமுறைகளை முன் வைத்து அவற்றை மாற்ற முயற்சிக்கும் போதோ அல்லது எனது பயணம் இலக்கை அடையாது என்று உணரும் போது நான் அதுவரை முன்வைத்த அரசியலால் சமரசம் செய்து கொள்ள இயலாமல் அந்த விலகல் நிகழ்கிறது.
அரசியல் என்பது கட்சிகளை தாண்டிய தனிமனிதனின் அறத்தோடு இணைந்து புரிந்து கொள்ளப்படுவது . சமூகத்துடன் தன்னை தொடர்புபடுத்தி கொள்ளும் எதுவும் அரசியலாக மட்டுமே நிகழ முடியும். நான் புழங்கும் எல்லா இடங்களில் என் அரசியலை நிலைப்பாட்டின் வழியாக என் தன்னறத்தின் வழியாக முன் வைக்க விழைகிறது. அவற்றை என் ஆழ்மனத்தில் இருந்து பெறுகிறேன் என நினைக்கிறேன் . ஆழ்மனம் தொன்மையான அல்லது கடந்த கால வாழ்வில் இருந்து உருவாக்கிக் கொண்டதாக இருக்கலாம். மனம் விருப்பு வெறுப்பு வேறுபாடுகளை ஆழ் மனதில் இருந்தே பெறுகிறது. நட்பும் விலகலும் அதன் அடிப்படையில் நிகழ்கிறது. வெளிப்படையாக உருவாகும் அது மிக நுண்மையான உணர்வுகளின் திரட்சி. அதை அப்படியே வெளிக்காட்டாமல் தர்க்க ரீதியில் உணரும் போது அரசியலாக வெளிப்படுகிறது. தன்னறத்தை எப்படி உருவாக்கிக் கொள்கிறேன் என்றால் அது இப்படி தன்னிச்சையான மன செயல்பாடுகள் வழியாக நாமறியாத சரடை பற்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. என்பது என்னில் இருந்து துவங்கி நான் பிறருடன் தொடர்புறுத்துவது எதை? என்ன? ஏன்? எதற்காக? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? என்கிற கேள்வி எழுந்து மோதிக் கொண்டே இருந்த போது அனைத்தும் என் கைமீறி இருந்தது . எனது அடையாளமாக நான் எதை உருவாக்கிக் கொள்கிறேன் என்பதற்கு பினனால் ஏதோ ஒன்றை நிராகரித்து அது நிகழ்கிறது.
தாத்தாவின் பெயரே இன்றளவும் எங்கள் குடும்பத்தின் சமூக அடையாளமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை கடந்து இடம் பொருள் உணராது நினைத்ததை பேசும் அம்மாவின் மீதுள்ள பிறரின் வெறுப்பை இளிவரலாக முதுகிற்கு பின்னால் எப்போதும் உணர்ந்து கொண்டு இருக்கிறேன். அது மிகுந்த மன
உளைச்சலை கொடுப்பது. அத்தகைய வெறுப்பிற்கு நான் எவ்வகையிலும் தகுதியானவனல்ல . நான் என்னை தொகுத்துக் கொள்ள துவங்கியது இங்கிருந்து என நினைகிறேன். அம்மா பற்றிய நிரந்தரமான வருத்தம் என்னை அவரிடம் ஆழ்ந்து நெருங்க அனுமதிக்கவில்லை. அங்கிருந்து பிரிந்து நான் என்னை அப்பாவின் குண இயல்புகளை கொண்டவனாக அறிந்திருக்கிறன். அவர் யாரிடமும் அதிர்ந்து பேசாதவர் நான் அங்கிருந்து எனது அடையாளத்தை பெற்றுக் கொண்டேன். அவர் என்னவாக ஆவது என கனவு கொண்டிருந்தாரோ ஒருவேலை நான் இன்றிருக்கும் இடமே அதாக இருக்கும். ஏனெனில் தந்தை மகனில் கூர் கொள்கிறார் என்கிறார்கள்.இந்த எண்ணம் எனக்குள் சிறு வயது முதல் விதையாக விழுந்திருக்க வேண்டும் என இப்போது உணர்கிறேன்.
அடையாளமென்பது நாம் நமக்குள் நம்மை உருவகித்துக் கொள்வதில் இருந்து துவங்குகிறது . பிறர் மீது நமக்கிருக்கும் மரியாதை அவர்களின் சுயமரியாதைக்கு எந்த வகையிலும் குறை வைக்கும் செயல் அல்லது சொல் என எவையும் எனக்குள் இருக்கலாகாது என நினைப்பவன். அதே போல என்னையும் பிறர் நடத்த வேண்டும் என விழைபவன். நாம் நம் அடையாளமென பிறர் முன் வைப்பதை பிறர் ஏற்றால் அன்றி அவை நமக்கானதாக இல்லாமலாகிறதா? என்றால் அதற்கு ஆம் மற்றும் இல்லை என்கிற இரண்டு பதில்களை கொண்டது. ஆம் அவர்கள் அதை மறுக்கும் ஒவ்வொரு கணமும் அதை மீறி நம்மை முன்வைக்க விளக்கு முயன்று கொண்டே இருக்கிறோம்.
பிறர் மீது தொடர்ந்து நாம் முன்வைக்கும் நம்பிக்கை அவர்களிடத்தில் இருந்து உருவாகாது போனாலும் நாம் நாமாக நம்மை தொடர்ந்து முன் வைத்தபடி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இடத்தில் இருந்து நமக்கானது உருவாகி வரலாம். ஒரு நாள் அது நமக்கானதாக பிறரால் ஏற்கப்படலாம். அல்லது ஏற்கப்படாமல் போகலாம் அது என்னை இல்லை என செய்யாது.
நான் இருக்கும் எல்லா இடத்திலும் எனக்கான விழுமியங்களை கண்டடைகிறேன். அது கேட்டுக்கும் அனைத்தையும் எனக்குள் உருவாக்கிக் கொள்கிறேன். பின் அதுவாக இருக்க முயல்கிறேன். அதன் உச்ச இடங்களை கண்டடைய ,உருவாக்க தயங்குவதில்லை. எனக்கான இடம் அந்த பயணத்தின் போது உருவாகிறது அது தொழில் அரசியல், இலக்கியம் மற்றும் ஆன்மிகம் என்ன வித்தியாசம் இல்லாமல் எனக்கு அவை ஒன்றை மீள மீள சொல்லிக் கொண்டிருந்ததை அறிகிறேன்.
எனது தடைகளாக நான் உணர்வது பிறர் என்னை கேட்பதற்கு முன்பாக என்னை முன் வைத்து இது நான் என அறுதியிட முயல்கிறேன். எல்லாவற்றையும் பற்றி எனக்கான கருத்து நிலை உருவாக்கிக் கொள்கிறேன். அவற்றை என்னுடையவை என சொல்கிறேன் அதை நம்ப அல்லது ஏற்க மறுப்பவர்களிடம் இருந்து தயங்காமல் விலகி விடுகிறேன். யாருடனும் என் அடையாளத்தை பகிர்ந்து கொள்ள விரும்பாத சூழல் வந்த போது நான் என் தனிப்பட்ட அடையாளங்களுக்காக அறியப் பட வேண்டும் என விழைந்தேன். அரசியல் நுழைவின் அடிப்படை பின்புலம் என் ஆழ்மனத்தில் இருந்து பெற்றமாக இருக்கலாம்.
2001ல் அரசியலில் இருந்து விலகுவது பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். தலைவர் சண்முகம் முதல்வர் சண்முகமாக தோல்வியை சந்தித்திருந்தார். யாரை முன் வைத்து யாருக்காக நான் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை உருவாக்கி இருந்தேனோ அதற்கான தேவை சட்டென ஒரு புள்ளியில் அர்த்தமிழந்து போனது. காரணம் அதுவரை இலக்குகளை முன்வைத்தே எனது அரசியல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதற்கான பெரிய திட்டங்களை செயல்படுத்தும் ஒரு சூழலின் மீது அந்த அர்த்தமின்மை வந்து கவிழ்ந்த போது அரசியலில் இருந்து மனதளவில் விலகினேன். நாராயணசாமியின் வாக்குறுதி பெற்று என்னிடம் இருந்து விலகி சென்றவர்கள் அவற்றை புரிந்து ஒருநாள் திரும்புவார்கள் என எங்கோ ஒரு முனையில் அந்த நம்பிக்கை. ஆகையால் சில காலம் பொருத்திருக்க நினைத்தேன்.
அதற்கென காத்திருந்தது போல எனது வியாபாரம் என்னை 2001ல் முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டது. இன்றும் திகைப்பைத் தருவது அதன் துவக்கம். என்னை மீறி நிகழ்ந்தது என சொன்னால் பிறர் புரிந்து கொள்வது கடினம் . 2000 முதல்வர் அறைக்கு வெளியே காத்திருந்த எனது பள்ளி நண்பன் மேத்யூஸை சந்தித்தது போது அதற்கான விதை விழுந்திருக்க வேண்டும். அவன் ஒரு தொழிற்சாலையில் மனிதவள மேலான்மை துறையில் வேலை செய்கிறான். அந்த தொழிற்சாலை உள்ளூர் அரசியலாளர்கள் சிலர் தூண்டுதலில் முடிவில்லாத வேலை நிறுத்தும் தொழிலாளர் பிரச்சனை என அல்லாடிக் கொண்டிருந்தான். முதல்வர் வரை அதற்கான சமாதான தூது நடந்து கொண்டிருந்தது. அந்த சூழலில் அவனை சந்தித்தேன். அவனுக்கு உதவ எண்ணினேன். அவன் சிக்கலை இரண்டொரு நாளில் தீர்த்த பிறகு அவனை சந்திக்கவில்லை. அரசியலில் இருந்து விலகுவது பற்றிய சிந்தனையில் இருந்த போது ஒருநாள் வீட்டிற்கு வந்தான். தொழிலாளர் சிக்கல் தீர்ந்தபாடில்லை நிர்வாகம் தற்காலிகமாக தொழிற்சாலையை மூடிவிட்டார்கள். அவன் நல்ல பொருளியல் பின்புலம் கொண்டவன் என்பதால் இது அவனை பாதிக்காது என்றாலும் வேறு தொழிற்சாலையை நாடலாமே. நான் ஏதாவது உதவ முடியுமா என பார்க்கிறேன் என்றேன். அவன் அதை உறுதியாக மறுத்து. முதல்வர் அறைக்கு வெளியே நான் அவனிடம் என்னைப் பற்றி பேசியதை நினைவுறுத்தினான். நான் விட்ட அந்த பழைய வியாபாரத்தை மீண்டும் துவங்கினால் என்ன என்றான். முதலில் எனக்கு திகைப்பாக இருந்தாலும். நான் மனதளவில் உருவகித்திருக்கும் இடம் அந்த தொழிலுக்கு தேவையான மனிதவள துறை. அது பற்றிய தீவிர எண்ணம் அதன் அருகில் செல்ல விடாமற் செய்தது. இப்போது அதல் சிறப்பான ஒருவர் என் அருகில். இதுதான் நான் எதிர்பார்த்த அந்த கணமா என தெரியவில்லை ஆனால் இதில் உள்ள நடைமுறை சிக்கலை மிக தெளிவாக அறிந்துள்ளதால் அதில் இருந்து விலகி நிற்கவே வரும்பினேன். நான் அவனுக்கு சாதகமாக பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் சிக்கலை மட்டும் சற்று தெளிவாக சொன்னேன். முதலில் நிறுவனம் துவங்க வேண்டிய அடிப்படைகளை சொல்லி அவற்றை செய்ய இயலாது எனது நிலையை அவனுக்கு சொல்லி அனுப்பிவைத்தேன்.
இரண்டு நாள் கழிந்து ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் அவனிடம் இருந்து எனக்கு அலைபேசி அழைப்பு வந்தது அதில் நிறுவனம் துவங்க வேண்டிய அனைத்து பூர்வாங்க வேலைகளை அவன் செய்து முடித்து விட்டதையும் மறுநாள் காலை அனைத்து தரவுகளுடன் என்னை வந்து சந்திப்பதாக சொன்னான். ஒரு கணம் திகைப்பை கொடுத்தாலும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. காலம் என் முன் மற்றொரு சவாலை கொண்டு வந்து வைத்திருக்கிறது. ஒன்று அதை நிராகரிப்பது அல்லது அதை ஏற்பது. நான் எனது இயல்பை தேர்ந்தெடுத்தேன். அந்த சவாலை எதிர் கொள்ள முடிவு செய்தேன்.
1996 களில் முடிவிற்கு கொண்டு வந்த அந்த தொழிலை நான் மீண்டும் ஒருபோதும் துவங்குவதாக இல்லை என உறுதி கொண்டிருந்தேன். என்றாலும் அது பிழை முடிவு என்பதை அதன் பெரும் வெற்றிக்கு பிறகு உணர முடிந்தது . வாழ்வின் பிற்பகுதிகளுக்கு எனக்கு உகந்து என்னைச் சுற்றிய புற வெளிகளை எப்படி வடிவமைத்துக் கொள்ள வேண்டும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய திட்டமிடலுக்கான காலமாக அது இருந்தது. வியாபாரத்தின் உச்சம் பலவற்றை கண்டறிதல் நிகழ்ந்தது. பள்ளி பால்யகால நண்பன் மேத்யூஸ் அந்த வியாபாரத்தை என் பொருட்டு ஆனால் என் அனுமதியின்றி மீண்டும் துவங்கினான். பின்னர் ஒரு புள்ளியில் அவனுடன் இணைவது தவிர வேறு வழியில்லை. 12 வருடம் மிக நீண்ட பயணம். அந்த கால கட்டத்தில் அதன் உச்சத்தை தொட்டதுடன் அங்கு பிறிதொரு உண்மையையும் தெரிந்து கொண்டேன். வியாபாரத்தில் அனைத்தையும் ஒருமுறை என எது எதை முயற்சிக்க வேண்டும் என கனவில் இருந்தேனோ அதை அத்தனையும் முயற்சித்து வென்றிருந்தேன். அது பெரும் வெற்றியை எனக்கு அளித்திருந்தது . கோடிக்காணக்கான ரூபாய் விற்றுமுதல். அதுவரை நான் சென்று சென்று தொடாத உச்சங்கள் என அனைத்தையும் உணரும் வாய்ப்புகள்.
எந்த துறையாக இருந்தாலும் அதில் முழுமையுடன் இருப்பது எனது வழமையாக இருந்திருக்கிறது. அந்த துறையின் உச்ச முடிவுகளை எடுக்கும் இடத்தில் வைத்துக் கொள்வது இங்கும் தொடர்ந்தது. அது ஒரு முழுமையான ஆட்சி போல பிறர் அதுனுள் அடங்குபவர்கள். அது எப்போதும் நான் திட்டமிட்டு உருவாக்குபவை அல்ல செயல் நுண்மைகள் வழியாக திரண்டு வருபவை. அந்த களத்தில் பிறரால் எதுவும் செய்ய இயலாது என்பது ஒரு வரம் போல எனக்கு வழங்கப்பட்டாலும் அதில் உள்ள சிக்கல் பிற நிறுவனத்தை சேர்ந்த அனைவரின் பொருமலுக்கு இலக்காகி இருப்பது.
மிக குறுகிய காலத்தில் பெங்களூர் துவங்கி நாகர்கோவில் வரையிலும் புதுவை சென்னை துவங்கி கோயம்புத்தூர் வரையிலுமான நிலப்பரப்பின் ஆர்டர்களில் 30 முதல் 40 சதவிகிதம் வரை பெரும் நிறுவனமாக வளர்த்தெடுத்திருந்தோம். எனது கடந்த கால அனுபவம் அதற்கு துணை நின்றதால் வெற்றிக்கான நேரம் மிக குறுகிய கால அளவு போதுமானதாக இருந்தது. நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக அது வளர்ந்து கொண்டே இருந்தது. புதிய தளங்களில் அதை விரிவாக்கிக் கொண்டே இருந்தோம். முதல் நிலை இரண்டாம் கட்ட ஊழியர்கள் மிக சிறப்பானவர்களாக இருந்தனர். அவர்களை உள்ளே கொண்டு வருவதில் மனிதவள மேம்பாட்டாளனாக மேத்யூ செய்த முடிவுகள் மிக அற்புதமானவை. எனக்கிருக்கும் அதே ஆக்ரஹம் அவனிடமும் இருந்தது சமரசம் என்கிற ஒன்றை நான் எப்போதும் ஏற்பதில்லை. அது நான் எனக்குள் வலிந்து உருவாக்கிக் கொண்டதில்லை. என் இயல்பே அது என மிக ஆழமாக உணர்ந்திருந்தேன். எனக்கு எங்கும் எப்போதும் நிகழும் ஒன்று என் நண்பன் மேத்யூவுடனும் நிகழ்ந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக