https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 8 ஜூலை, 2021

அடையாளமாதல் * வளத்தின் மிச்சல் *

 


ஶ்ரீ:



பதிவு : 580  / 770 / தேதி 8 ஜூலை  2021


* வளத்தின் மிச்சல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 58.




ஒவ்வொரு காரிலும் தலைவர்கள் நிர்வாகிகள் வந்திறங்கிக் கொண்டே இருந்தனர் . திருவிழா ஒன்று உச்ச நிகழ்வை நோக்கி நேரம் நகர்ந்து கொண்டிருந்தது போலத் தோன்றியது , செஞ்சி சாலை வாய்க்கால் பாலமும் ரயில் நிலைய ரோடு சந்திப்பில் கட்சிகாரர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை ரோட்டை மறித்து தடுப்புகளை போட்டிருந்தனர் . கட்சி முக்கியஸ்தர்களின் வருகையின் போது மட்டும் சற்று நகர்த்தி கொடுக்க கார்கள் உள்ளே சென்று கொண்டிருந்தன. உணர்ச்சி பொங்கும் கூட்டம் ஆர்ப்பரிப்பபது ஒற்றை முழக்கமாக, இருபக்கமிருந்தும் ஒவ்வொரு காரும் நுழையும் போது உள்ளிருப்பவர்களை பார்க்க முயலும் கூட்டம் ஒன்று  காருக்கு முன்னால் மறித்து பிதுங்கி வந்து விழுந்துகொண்டிருந்தனர். காவலர் அவர்களை அள்ளி விலக்கி வழியமைத்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வந்த போது அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்கள் சிலர் மாலைகளை அணிவிக்க சிலர் சால்வைகளை போட்டபடி இருந்தனர் . அதற்கு மட்டும் அவர்கள் காரில் இருந்து இறங்கி அவற்றைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள் ஒவ்வொரு முறை அது நிகழும் போது நதியில் ஏற்படும் சுழல் போல அந்த காரை சுற்றி

அனைவரும் முயங்கும் ஒலி கார்வையாக கேட்டு அலை அடிப்பது போல உளமயக்கு கொடுத்தது. பார்க்கும் இடமெங்கும் கட்சிக்காரர்களின் மொட மொடக்கும் கதர் சட்டையும் வேட்டியுமாக திரளென நிரம்பி வழிந்தனர் . வியர்வை பெருக்கோட நின்றிருந்த அனைவரும் ஒருவர் மீது ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டு இருந்தனர் . உப்பு வியர்வை வீச்சம் அத்துடன் ஒருவருக்கு சொல்லிக் கொள்ளும் தகவல்களின் பெருக்கு . யார் அதை எங்கிருந்து யாருக்க சொல்லுகிறார் என புரிந்து கொள்ள இயலவில்லை . பெறப்படும்  தகவல்களுக்கு ஆமோதிப்பும் ஆவேசமான ஆட்சேபனையுமாக எதிர்வினை கேட்டுக் கொண்டே இருந்தது . முன் பின் பழக்கம் இல்லாதவர்களுடன் அங்கு நிலவிய கருத்தே அந்த முழு திரளையும் நட்பாக எதிராக கணம் தோரும் மாற்றியபடி இருந்தது . ஏறக்குறைய அங்கு நடக்க இருப்பதன் இறுதி முடிவு தனக்கு மட்டும் தெரியமென பிற அனைவரையும் போல நானும் அங்கு இருந்து கொண்டிருந்தேன் . அங்குள்ள அனைவரையையும் விட ஒரு தகவல் என்னிடம் மேலதிகமாக இருக்கிறது என்கிற பிரமையை என்னால் வெல்லவே முடியவில்லை . அங்கு இருந்த அனைவரும் அத்தகைய கருத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரு பெரும் கலவரம் இப்படிப்பட்ட உறுதி செய்யப்படாத முரண்  தகவல்களை பகிர்ந்து கொள்வதிலிருந்து கொள்ளத் துவங்குகிறது . அன்று வெடிப்பின் தருணத்தை நிமிட நிமிடமாக எதிர்பார்த்துக் கொண்டருந்தோம். ஒருகாலத்தில் ஒரே அமைப்பாக இருந்த இளைஞர் காங்கிரஸிற்கு தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சண்முகம் என்கிற தனி நபர் காழ்ப்பு தேவையானது . தங்களுக்கு மேலான ஒருவர் தங்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்றோ ரட்சிக்க வேண்டும் என்றோ நினைத்துக் கொண்டிருந்தது . அவ்வாறு ஒருவர் இல்லை என்றான பிறகு அது அவர்களுக்கான பாதையை உருவாக்கி இருந்தது . இன்று பிளவுபட்டு ஒரு முடிவிற்கு இருவேறு விழைவு கொண்டு எதிரெதிராக கோர்த்து நின்று கொண்டிருக்கிறது. ஒன்றாய் இருந்த காலத்தில் அது இத்தனை பலமுள்ளதாக யாருக்கும் தோன்றவில்லை . இன்றும் கூட அது இணைந்தால்  அரசியலை மாற்றி வேறு திசைகளுக்கு இட்டுச் செல்லலாம் . ஆனால் அது முடியாது . இனி ஒருவரை ஒருவர் நம்ப மாட்டார்கள் . ஒருவர் வீழ்ந்தால் மட்டுமே பிறிதொருவர் வாழமுடியும் என உறுதியாக நம்புகிறார்கள் . என்ன ஒரு பைத்தியகாரத்தனம். கண்ணன் வீழ்வதால் பாலன் தலைமையிலான இளைஞர் காங்கிரஸிற்கு எந்தப் பயனும் இல்லை அது பாலனின் காழ்ப்பும் ஆணவ நிறைவு மட்டுமே. அப்போதும் மரைக்காயரின் ஒரு அங்கமாக பாலனை உருவகித்திருந்தனர் . தனி அணியாகவே இயக்கமாகவோ் அவர் அடையாளப்படுத்த படவில்லை என்பது ஒரு பின்னடைவு


பாலன் பொறுப்பேற்ற பிறகு ஓரிரு ஆண்டுகள் இளைஞர் அமைப்பின் தலைமையை மாற்ற கண்ணன் முயற்சித்தார் அதை 1988 களில் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும் ,அதன் பிறகு அவர் தன்னை முழுவதுமாக வேறு ஒரு இடத்திற்கு தயார் செய்யத் துவங்கி இருந்தார். கண்ணன் முதல்வர் பதவியை குறித்து தனது கனவை விரித்தெடுத்தது அந்தக் காலகட்டதில் . காலம் அவரை அதன் அருகின் நிழலில் சில காலம் வைத்து அந்தக் கனவிற்கு படிகளை அமைத்துக் கொடுத்திருந்தது . அன்று முதல்வராக இருந்த மரைக்காயர் அரசுமுறை பயணமாக வெளிநாடு செல்ல நேர்ந்ததால் காபந்து முதல்வராக கண்ணன்  நியமிக்கப்பட்டார் . அதன் பின்னரே அவர் முழு அளவில் தனது கனவை நோக்கி நகரத் துவங்கினார். காபந்து முதல்வராக இருந்த போது சரச்சைக்குறிய பத்தமசுந்தரி கொலை வழக்கில் அவரது பெயர் அடிப்பட்டது தற்செயலானது இல்லை . அவரது முதல்வர் கனவை சிலகாலம் அது கலைத்தது . நீதிமன்றத்தில் குற்றமற்றவராக வெளிவந்தபின்பும் அதன் நிழல் அவர் மீது இருந்து கொண்டிருந்தது. கண்ணன் வீழ்ச்சியில் இருந்து பாலன் அடைய ஒன்றுமில்லை என்றாலும் அவர் வீழ்ந்து படுவதை அவர்  விரும்பினார்


முதல்வர் தேர்தல் துவங்குவதற்கு சில மணி நேரம் முன்பாக பாலனிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது .முதல்வர் தேர்தல் நடக்குமிடத்திற்கு என்னை நேராக செல்ல வேண்டாம் என்றும் தன்னை தன் வீட்டிலிருந்து அழைத்து செல்ல சொன்னார் . நான் அவரது இல்லத்திற்கு சென்ற போது அங்கு பாலனைத் தவிர வேறு யாரும் இல்லை . முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன். எங்கே மற்றவர்கள்? என்றதற்கு அனைவரும் மரைக்காயர் ஏற்பாடு செய்திருந்த உப்பளம் விருந்தினர் விடுதி அறைக்கு சென்று விட்டார்கள் என்றார் . என்னிடம் நாம் முதலில் மரைக்காயரை அவரது வீட்டில் சென்று சந்திக்க வேண்டும் என்றார் . முதலியார்பேட்டையில் இருந்து மரைக்காயர் வீட்டிற்கு உப்பளம் விடுதி வழியாக செல்ல வேண்டும் . ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வழி வேண்டாம் புஸ்ஸி வீதி வழியாக அவரது இல்லத்திற்கு செல்லலாம் என்றார் . நான் அவரை முதலியார்பேட்டை மில் வழியாக அண்ணா சிலை அடைந்து செஞ்சி சாலை வாய்க்கால் பாலத்தை அடைந்த போது அங்கிருந்து உப்பளம் செல்லும் வழி முழிவதுமாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது . வண்டிகள் செல்வதை தடை செய்திருந்தாலும் கட்சிகாரர்கள் செல்ல எந்த தடையுமில்லை  என்பதால் செஞ்சி சாலை புதுவை ரயில் நிலைய ரோடு சந்திப்பு பாலம் மற்றும்  தண்ணீர் தொட்டி இருந்த இடத்திலிருந்தே கூட்டம் பிதுங்கி வழியத் துவங்கியிருந்தது. அங்கிருந்து உப்பளம் விருந்தினர் விடுதி சுமார் முக்கால் கிலோமீட்டர் இருக்கும் . நான் அந்த கூட்டத்தை வேடிக்கைப் பார்த்தபடி மரைக்காயர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தேன் . அவர் வீடு அங்கிருந்து இரண்டு தெருத் தள்ளி இருந்தது .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...