ஶ்ரீ:
பதிவு : 569 / 759 / தேதி 29 மார்ச் 2021
* சாத்தியக்குறுகள் *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 47.
அரசியல்வெளி இன்று வேறொரு தலைமுறைக்கானதாக மாறியிருப்பதை பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது . ஒவ்வொரு பத்தாண்டுகளில் அது தீவிர மாறுபாட்டை அடைந்து கொண்டே இருக்கிறது . உற்று நோக்குபவர் அன்றி பிற அனைவரும் அதை நோக்கி குறை சொல்லும் இடத்திலேயே இருக்கிறார்கள் என்பது வேடிக்கையானது . இது எப்போதும் உள்ளதுதான் அவை கால மாற்றத்திற்கு ஏற்ப தீவிரமடைந்தபடி இருப்பவை . என்னுடைய பார்வையில் இருந்து இன்று நிலவும் இந்த அரசியல் நகர்வு சிக்கல் மிக தற்செயலான ஒன்றிலிருந்து துவங்கியது . அரசியல் பயனாளிகள், தவிற்க இயலாதவர்கள் மற்றும் கொந்தளிப்பானவர்கள் என அவர்கள் மூன்று அடுக்குகளில் உள்ளவர்கள். அரசியலில் திறமையற்ற தலைமை வந்து அமரும் போதும் அல்லது அவர்களின் தவறாக முடிவுகளினாலும் கசந்து சிலர் வெளியேற , பலர் ஒதுங்கிக் கொள்கிறார்கள் . அப்போது உருவாகும் பெரும் வெற்றிடத்தை நிரப்ப மூன்றாம் அடுக்கு மனிதர்கள் உள்நுழைகிறார்கள் தங்களது மிதப்பான செயல்கள் மூலம் பிறரின் வெளியேற்றத்தை மேலும் துரிதப்படுத்துகிறார்கள். சுயலாபத்தை வெளிப்படையாக முன்வைப்பது பற்றிய கூச்சம்மில்லாதவர்களாக எப்போதும் எதிலும் கொந்தளிப்பவர்களாக இருப்பவர்கள். முதல் இரண்டு நிலைத் தலைவர்களின் உதவிகளை அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இருக்கும் வரை அவர்களுக்கு எதிரில் தங்களின் குறைகளை முனுமுனுப்பாக தயக்கத்துடன் ஒரு காலத்தில் முன் வைத்தவர்கள் பிற மூத்த தலைவர்களை கண்டதும் அடக்கி வாசிப்பவர்கள் . அத்தகையவர்களை கொண்டு கட்சியின் அனைத்து இடத்தையும் நிரப்புகின்ற போது அரசியலின் அடிப்படை கோட்பாடுகள் விபரீத உச்சத்தை அடைகின்றன . உச்சக்கட்டக் குறுங்குழு மனநிலை தவறில்லை என்கிற பார்வையை அது ஒரு புள்ளியில் நியாயப்படுத்திவிடுகிறது . பின் யாரும் யாருடனும் இணங்கிச் செல்வதே கூட குற்றமெனப் பார்க்கப்படுவது தொடங்கி, முரண்படுவதை செயல்பாடுகள் என நினைத்துக் கொள்வதில் முடிகிறது . ஆகவே அவர்கள் தங்கள் எண்ணங்களை ஓங்கிச் சொல்கிறார்கள் . எல்லா இடத்திலும் முட்டி மோதுகிறார்கள் . அனைத்து ஒளியின் கீழும் சென்று தயக்கமில்லாமல் நிற்கிறார்கள் . சர்சைக்குரிய, நியாயமற்ற கருத்துக்களை கூச்சமில்லாமல் ஆக்ரோஷத்துடன் முன்வைக்கிறார்கள் . அவர்களின் செய்கைகளால் எஞ்சி இருக்கும் மிச்ச மிதவாதிகளும் கசப்படைபவர்களும் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள் . அகில இந்திய காங்கிரஸின் இன்றைய நிலை அதற்கு சிறந்த உதாரணம்.
ஒரு பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் செயல்பாடு கூட்டு நனவிலியில் நிகழ்வது . இந்தியா முழுவதையும் காற்றென இணைப்பது . சிறு சிறு மாறுபாடுகளுடன் நாட்டின் ஒட்டு மொத்தமாக அனைவரையும் ஒற்றை மனம் என்கிற கருதுகோளில் இணைப்பது . அதன் துவக்கத்தை 2001 களில் பார்த்திருக்கிறேன் ஆனால் வெகு சீக்கிரத்தில் அது தனது உச்ச இடத்தை அடையக்கூடும் என அவதானிக்க தவறினேன் . எனது இந்த கூற்று பொதுவாக வெளியேவர்கள் சொல்லும் குறையா என்றால் , இல்லை . எனக்கு எதன் மீதும் எந்த வருத்தமும் காழ்ப்பும் இல்லை அனைத்திலிருந்தும் எனக்கான புரிதலை நோக்கிய பார்வையினூடாக இவற்றை இங்கிருந்து தொகுத்துக் கொள்ள முயல்கிறேன் . 1995 களில் நின்று கொண்டு எதிர்வரும் 2005 களில் எங்களுக்கான இடம் எப்படி எப்படி உருவாகி வரும் என்பது பற்றிய எனது மதிப்பீடுகள் ஏறக்குறைய சரியாக இருந்தது ஆச்சர்யமில்லை . நிகழும் போது அதை ஒட்டி எழுவிருக்கும் முரண்பாடுகள் அதனூடாக எழும் விலகல்கள் மற்றும் துரோகங்கள் குறித்து நான் ஊகித்திருந்த காலத்தைப் பற்றிய கணிப்புதான் தவறாகிப்போனது . 2010 களில் நடக்கக் கூடியது என நினைத்திருந்தது பத்து வருடங்களுக்கு முன்னராக அதாவது 2001 களில் துவங்கி 2005 களில் வேறொன்றாக மாறி முடிவுற்று நின்றதால் அந்தக் கனவு கலைந்து போனது . இளம் தலைவர்கள் என நான் உருவாக்கியவர்கள் எல்லோருக்குமான கதவு திறக்கும் காலத்திற்கு சிறிது காத்திருப்பார்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் காத்திருக்க பழகாத ஒரு தலைமுறை உருவாகி இருந்ததை இன்று இங்கிருந்து பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. அன்று நினைத்ததை நோக்கிய மிகச் சரியாக நகர்விற்கு எனக்கு தேவை சிறிது அவகாசம் . அது கிடைக்காமல் போன வருத்தம் மட்டுமே அன்று எஞ்சி இருந்தது. சில காலம் அது குறித்து வருத்தமாக இருந்தாலும், அந்த அரசியல் முன்னெடுப்புகளும் திட்டங்களும் தனிப்பட்ட “உனக்கானது இல்லை” என்று நம்பினால் “மௌனமாக வெளியேறு” என எனக்கு நான் சொல்லிக் கொண்டே அனைத்திலிருந்தும் வெளியேறினேன் . அது மீள மீள எனக்கு நானே சொல்லிக் கொண்ட “மெய்மை சொல்லை” போல அது எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்தது.
1997 களில் 2010 பற்றி எனக்கு ஒரு அரசியல் கனவு இருந்தது . அது கட்சி மூத்த பொதுச் செயலாளர் காந்திராஜுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அது சட்டென உருவாகி வந்தது . இன்றளவும் அந்த கருதுகோள் சரி என்றே உணர்கிறேன் . காந்திராஜ் புதுவையின் புகழ்பெற்ற குற்றவியல் சட்ட நிபுணர் . சிறந்த அரசியல் ஊகவியளாலர் சிந்தனையாளர். 1996 தேர்தல் களத்தில் மிக எளிதில் தோற்கடிக்கபட்டு அமைச்சர் பதவியை இழந்தார். காங்கிரஸ் ஆட்சி அமைக்க கூடுதலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேவை என்கிற நெருக்கடியில் பல ஜாம்பவான்கள் தோற்றுப்போனார்கள் . கட்சியின் கள செயல்பாட்டாளர்கள் தேர்தலில் வெல்லும் மற்றும் தோற்பவர் குறித்த பட்டியலில், தோற்பவர்கள் நிரையில் காந்திராஜ் பெயர் முன்னிலையில் இருந்தது . அவர் தோல்வியுற இருப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் . காந்திராஜ் கூர்மதியாளர் அரசியல் கணிப்பாளர் என்றாலும் அவரின் தன்னுடை களம் குறித்து கொண்டிருந்த நம்பிக்கை சற்று வினோதமானது . தனது ஊகங்களை ஏன் அவர் தனக்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை அல்லது அவரில் அது ஏன் எடுபடவில்லை என நினைப்பதுண்டு . ஒருவேளை தலைவர்களையும் காலத்தையும் கணிக்க இயல்வது போல மக்களை புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல போல . அவருடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த ஊகத்திற்கு சட்டென வந்து சேர்ந்தேன். அன்று புதுவை அரசியலில் கடும் தேக்க நிலையும் எப்பக்கமும் நகர முடியாத சூழலால் முதன்மை அரசியல் தலைவர்கள் மெல்ல தங்களது செல்வாக்கை இழந்து கொண்டிருந்தார்கள் . அது ஒரு மெல்லிய புகை மூட்டம் போல எல்லா கட்சியையும் சூழ்ந்து தலைவர் தொண்டர் என்னும் மேல் கீழ் அடுக்குகளை காலாவதியாகிக் கொண்டிருந்து . எதிர் காலத்தைக் குறித்து நம்பிக்கை கொள்ள ஏதும் இல்லை என்கிற திகைப்புடன் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் ”குழந்தை பிறக்க போகிறது இன்றைய அரசியலின் ரணத்திற்கு அதுதான் காரணம்” என்றார். அவர் அதைக் கவித்துவமாக சொன்னாலும் என்னை சொடுக்கிய விசை அது . அவர் சுட்டும் வெற்றிடத்தையும் அதில் உள்ள பிரகாசமான வாய்ப்புகளையும் என் ஆழ்மனம் முன்பே ஊகித்திருந்தது . அவர் சொல்லி முடித்ததும் அனைத்து காய்களும் அதனுள் சட்டென நுழைந்து அமர்ந்து கொண்டன . அடுத்த வழிநடத்த போவது யார் என்கிற கேள்வி அர்த்தமற்ற தன்மையும் இனி அது போல நிகழப்போவதில்லை , நீ எதிர் நோக்கும் ஆளுமை அல்லது தருணம் எழுந்து வருவது எப்போதைக்குமாக இல்லை . நீ உனக்கான பாதையை உருவாக்கி கொள் உடன் பயணிக்க இருப்பவர்களை தேர்ந்தெடு இனி வழிநடத்துபவர் இல்லை எதிர்பார்பது நிகழப்போவதில்லை , தெளிவான திட்டமிடலே அனைத்தையும் வழிநடத்தும் என்கிற குரல் உள்ளிருந்து எழுந்தவுடன் அது ஒரு முதிரா சிறுவனின் சாகசக் கனவு போல அது தொடர்ந்து விரிந்து கொண்டே இருந்தது நிகழ்கால சவால்களை எதிர்க்கத் துணிந்தேன் பிறர் எதிர்க்க அஞ்சுபவரை உறுதியுடன் எதிர்த்து நின்றது போன்றவை இன்று மெல்லிய புன்னகையை கொடுத்தாலும் அன்று அவை ஆவேசமான நாட்கள் , புரிதல்கள் உச்சகட்ட கற்றல்கள் என எங்கும் பரபரவென்றிருந்தேன் .