ஶ்ரீ:
பதிவு : 568 / 758 / தேதி 12 மார்ச் 2021
* அமைப்பின் நிலை *
“ ஆழுள்ளம் ” - 03
மெய்மை- 46.
இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் கட்சியின் மூத்த தலைவர்களின் அனைத்து தரப்பில் இருந்தும்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் . ஆகவே அங்கு சமநிலையை உருவாக்கவே முடியாதபடி ஒருவருக்கு ஒருவர் எதிர் திசையில் வைக்கப்பட்டு இருந்தனர் . பல கருத்துக்களில் விலகி இருந்தாலும் என்னை முற்றாக புறக்கணிப்பதில் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர் . இளைஞர் அமைப்பின் சண்முகம் அணியிலேயே கூட எனக்கு எதிர்பான நிர்வாகிகள் இருந்தனர் . நான் முற்றும் விலகிய மனப்பான்மை கொண்டிருந்ததால் உள்பூசலில் எந்த ஆர்வமும் இல்லாதிருந்தேன் . ஆனால் தில்லியில் இருந்த போது நிகழ்ந்தது அனைத்துக் கோணத்திலும் இருந்தும் ஒரு பாதை சுட்டப்படுவதை உணர்ந்தேன் . வழக்கம் போல அது எனது இலக்கானது .மனதிற்கு மிக அனுக்கமான ஒன்று . அமைப்பை ஒருங்கு திரட்ட எனக்கிருந்த வாய்ப்பை சரியாக செய்வதில் இருந்தே எனக்கான இடம்.தில்லியில் உள்ள புதுவை விருந்தினர் இல்லத்தில் நான் நடப்பதை கவணித்துக் கொண்டிருந்தேன் .சில மணிநேரம் அது நடந்து முடிந்தது . வல்சராஜ் வெறுப்பின் உச்சத்திலிருந்தார் . அது குறித்து எவரிடமும் பேச விரும்பவில்லை என தெரிந்தது . நான் கமலக்கண்ணனை பத்து வருடங்களுக்கு மேலாக அறிவேன் . மிக எளிதில் உணர்ச்சி வசப்படுபவராக , முன்கோபம் உடையவராக , சட்டென முடிவு எடுத்து செயல்படுபவராக இருந்தார் . அவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது தாமோதரன் . அவர் எதிர்பாரது மரணித்தது கமலக்கண்ணனுக்கு பெரிய இழப்பு . ஆரம்பம் முதலே கமலக்கண்ணன் எனக்கு எதிரான மனநிலை கொண்டவராக இருந்தார் . பாலன் என்னை அவருக்கு எதிராக வளர்த்தெடுப்பதாக அவர் நினைத்தது அந்த கசப்பிற்கு காரணம். அந்த மனக்கசப்புக்களை கலைய தாமோதரன் என்னுடன் நடத்திய உரையாடல்கள் கணக்கில்லாதவை . ஒவ்வொரு முறையும் தாமோதரன் முன்வைத்த அனைத்திற்கும் நான் உடன்பட வேண்டி இருந்தது . எனக்கும் கமலக்கண்ணன் என்னை பற்றி கொண்டிருந்த கசப்புக்களை களைய விரும்பினேன் . கடைசிவரை அது நிகழவேயில்லை .தாமோதரன் இல்லாத சூழலில் சொந்த முடிவுகளை எடுக்கத் தொடங்கியிருந்தார் .முறையான வழிகாட்டுதல் இல்லாதது அவரை தடுமாறச் செய்திருந்தது . வல்சராஜ் அந்த சந்தர்ப்பத்திற்கு பிறகு நிர்வாகிகளை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார் .
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவிற்கு நரசிம்மராவின் வெளிப்படையான ஆதரவிருந்தது.1996 களில் நரசிம்மராவ் வீழ்ந்த போது அவரும் வீழ்ச்சியடைந்தார் . நீண்டநாட்கள் காத்திருந்த மூத்த தலைவர்களின் தலையீட்டால் அமைப்பு சிதையத் துவங்கியது. வாரிசுகளும் தலைவர்களின் ஆதரவாளர்களும் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டு இயல்பான தலைவர்கள் உருவாவது தடுக்கப்பட்டது. இது பல காலம் நடந்து வந்ததுதான் என்றாலும் இம்முறை கட்டுப்பாடில்லாமால் ஆனது . அகில இந்திய காங்கிரஸ் அமைப்பிற்கு இளைஞர் காங்கிரஸ் நாற்றங்கால் போல .தலைவர்கள் தொண்டர்கள் சமூகத்தில் இருந்து உழைப்பினால் முளைப்பவர்கள் . அந்த இரண்டாம் நிலை தலைவர்கள் இயல்பாக உருவாகி வரும் வழிகள் தூர்க்கப்பட்டது .அந்த இடங்களை கட்சியை அறியாத எந்த அடிப்படையும் இல்லாத மேல்தட்டு நியமன இளைஞர்கள் வேலை வாய்ப்பை போல நிரப்பினர் . காங்கிரஸின் இன்றைய இழிநிலைக்கு அதுவும் ஒரு காரணம் . அரசியல் புறவெளியில் நிகழ்வதற்கு முன்னர் மனதில் நிகழ்வது. இருப்பும் , எதிர்காலமும் கனவுகளால் ஆனவை .இங்கு கனவுகள் எப்பொழுதும் கனவுகள் மட்டுமே . எந்த உயர்பதவியை அடைந்தவர்களும் அதற்கு விலக்கல்ல . அரசியலில் மனநிறைவடைந்தவர்கள் என எவரும் இல்லை என்பது அந்த ஆடலின் வனோத ஊழ் . செய்ய நினைத்ததை செய்மால் போனவர்கள் அதிகம் . தனக்கான இடம் கொடுக்கப்படவில்லை என மனப் புழுக்கத்தை வழியாக கனியும் வாய்ப்பை அடைந்த இளைஞர்கள் பின்னர் “ தலைவர் ” களாயினர் , பிறர் மனம்குறுகி சராசரிக்கு கீழே எதையும் செய்பவர்களாக திரிபடைந்து விடுகிறார்கள் . அரசியலில் அவமானப்படாதோர் இருக்க முடியாது . அந்த அனுபவத்தில் இருந்து வெளியேறக் கற்காதவர்கள் சொந்த நரகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் . அவமானங்களினால் குமுறி தங்களை அதில் தள்ளிக் கொள்பவர்களே அதிகம் . அதில் தங்களை கண்டடைபவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள் .
இளைஞர் அமைப்பு அரசியல் பயிற்சி அளிக்கிறது , சமூக அமைப்பை வரலாற்றறை புரிந்து கொள்ளவும் , அதனுடன் அரசியல் எப்படி முயங்கிச் செயல்படுகிறது என்பதையும்தனக்கான இடம் வரும்வரை காத்திருக்கவும் கற்றுத்தருகிறது . கட்சியின் வரலாற்றை அறிமுகம் செய்து வைத்து , அங்கிருந்து தங்களுக்கான கருத்தியலை கண்டு கொள்ளவும் , தலைமைபண்பு உருவாகவும் காரணமாகிறது . அரசியல் பொருத்திருப்பதே அதன் கலை எனப்படுகிறது. 1980 முதல் புதுவை இளைஞர் காங்கிரஸின் முரண் செயல்பாட்டினால் அவர்கள் இயல்பாக நுழையக்கூடிய வாயில்கள் அனைத்தும் சண்முகத்தால் அடைக்கப்பட்டு , கட்சியில் எந்த அரவணைப்பும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டது . இளைஞர் காங்கிரஸ் என்பது “கெடு சொல்” என புரிந்து கொள்ளப்பட்டு , அதன் மீது ஒரு தீச்சொல் நீண்ட காலம் அங்கிருந்து கொண்டிருந்தது . அதிலிருந்து மீட்பில்லை என்பதே யதார்த்தம் .மாநில் காங்கிரஸ் தலைவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தில் தலையிடுவது நடவாத காரியம் .இளைஞர் அமைப்பு அப்படி உருவாக்கப்பட்டிருந்தது. பாலன் கட்சியில் இருந்து வெளியேறிதும் , முன்முறையாக புதிய தலைவர் நியமனம் சண்முகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வல்சராஜ் தலவரானார் . அவர் தலைவராக நியமிக்கப்பட்டதே கூட அமைப்பை உறைநிலைக்கு கொண்டு செல்வதற்காக .
1997 களின் தொடக்கத்தில் தலைவர் சண்முகத்துனுடான எனது இடம் வலுப்பெறத் துவங்கியது , எனக்கான அங்கீகாரத்தை அவர் தருகிறார் என உணரத்தொடங்கிய நேரம் . ஒரு போராட்ட வாய்ப்பின் மூலமாக உருவாகிவந்தது , போராட்டத்தை சரியாக ஒருங்கிணைத்தது , புதுவை மாநிலம் முழுவதிலிருந்து வந்து இளைஞர் அமைப்பினர் கலந்து கொண்டது போன்றவை என் மீதான பார்வையை மாற்றியிருந்தது . என்னுடன் பங்கு கொண்ட அவர்கள் அனைவரையும் அதற்கு முன்பு எதிர்நிலையில் மட்டுமே அவர் கண்டிருந்தார் .
சண்முகத்தை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தனிப்பட்ட ஆளுமைகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பல ஆண்டுகளாக இருப்பவர்கள் . பல ஆட்சியை கண்டவர்கள் அனைவரும் அரசியல் சூழ்ச்சிகளில் தேர்ந்தவர்கள் , சமூக , பொருளியில் மற்றும் பழங்கால நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டவர்கள் என பெருங் கூட்டம் இருந்தது . அவர்களு உள்ள ஒரே குறைபாடு கட்சியனரை ஒருங்கு திரட்டும் சக்தியில்லாமை . தலைவர்கள் உருவாவது மூன்றின் அடிப்படையில் . பொருளியல் பலம் , அரசியல் சூழ்ச்சியாளர் மற்றும் தொண்டர் திரளை ஒருங்கிணைப்பவர்.இதில் தொண்டர்களை ஒருங்கி திரட்டும் சக்தி உள்ளவர் முதன்மை நிலை பெறுகிறார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக