ஶ்ரீ:
அடையாளமாதல் - 525
பதிவு : 525 / 716 / தேதி 03 மார்ச் 2020
*அமைப்பு நிர்வாகம் *
“ ஆழுள்ளம் ” - 03
உளப்புரிதல் - 39 .
1975 தொடங்கி இருபது ஆண்டுகளுக்கு மேலாக இளைஞர் காங்கிரஸின் அடுத்தடுத்து வந்த இரண்டு தலைமைகளும் தனது தாய் அமைப்புடன் கொண்ட எதிர்மறை அரசியல் அனுகுமுறையால் தாய் அமைப்பிற்கு இளைய தலைமை என்னும் சொல் கெட்டவார்தையாகி போனது .அதன் பிறகு இளைஞர் காங்கிரஸின் பாதைகளை அடைக்க அதன் தலைவர் சண்முகம் ஒரு போதும் தயங்கவில்லை . புதுவையில் அதன் பாதை ஒரு கட்டத்தில் முற்றாக தூர்ந்து போனது . ஏறக்குறைய இந்தியா முழுவதுமே இதுதான் நிலைமை என்றாலும் பிற மாநிலங்களில் குறைந்த பட்ச ஒருங்கிணைப்பு இருந்தது , அங்கு அவ்வப்போது புதிய தலைமைகள் உருவாகி வந்தன ஆனால் புதுவையில் அது இறுதிவரை நடக்கவில்லை ,சண்முகத்தால் அதை எதிரி அமைப்பாகவே பார்த்தார் .
.
தொடர்பறந்த அமைப்பு மீளவும் புதிய அணியாக செயல்பட வைக்கும் எனது முயற்சி ஆரம்பத்தில் சண்முகத்தின் அதிருப்தியைத் தான் பெற்றுத் தந்தது . முதல் முறையாக பழைய நிர்வாகிகளை ஒருங்கிணைக்க முயன்ற போது சண்முகம் அதை வேண்டாத வேலையாக பார்த்தார் .அதற்கு அனுமதி வழங்க விரும்பவில்லை . எடுத்த முடிவில் நான் உறுதியாக இருந்ததால் அந்த கூட்டத்தை அனுமதித்தார் ஆனால் அதே சமயம் அதை புறக்கணிபதன் வழியாக தனது எதிர்பை பதிவு செய்ய நினைத்தார் .அதன் பிண்ணியில் சிலர் இருந்தனர் என்பதை அறிந்திருந்தேன் .
திட்டமிட்டபடி கூட்டம் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பெரிய அளவில் கூடிய போது அங்கு நிகழவதை சண்முகம் அறிய வேண்டும் என்பதில் சூர்யநாராயணன்தான் உறுதியாக இருந்தார் சண்முகத்தை தொடர்பு கொண்டு பேசி அந்த கூட்டத்தின் மத்தியில் அவரை பங்கேற்க வைத்தார் .அது ஒரு புதிய உச்சத்தை தொட்ட நிமிடம் ( இதை பற்றி முன்பே விரிவாக பதிவு செய்திருக்கிறேன் .) எனக்கு ஆதரவாக சிறிய குழு உருவானது அப்போதுதான் . எதிர்ப்பு பெரிதாக வளர்ந்ததற்கும் அந்த கூட்டம்தான் அடிபடையாக இருந்தது .பின்னர் மிகவும் சுறுசுறுப்பாக இளைஞர் காங்கிரஸ் கமிட்டி உருவாகம் போதும் , என்னை முடக்கும் போதும் செயல்பட்டு வென்றது.
இளைஞர் காங்கிரஸின் முதல் நிர்வாக கூட்டத்தை தொடர்ந்து எனது செயல்பாடுகள் முடக்கப்பட்ட போது எனக்கு ஆதரவாக உருவாகி வந்த சிறிய கூட்டம் என்மீது நம்பிக்கை இழந்து விலகியது . தலைமையின் ஆதரவு எதிர்ப்பு என்பிற ஒற்றைப் புரிதலுக்கு பழகிய நண்பர்கள் அவர்கள் , அரசியலின் அழகியலில் உள்ள உள் அடுக்குகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று சொல்லுவதைவிட , குறுகிய அமைப்பாக செயல்பட்ட அவர்களுக்கு அதன் விரிவான பிறிதொரு எல்லைக்கு அவர்கள் பழகியிருக்கவில்லை என்பதே நிதர்சணம் .
நிபந்தனையற்ற ஆதரவு என்பது தந்தை மகனுக்கு மட்டுமே கொடுப்பது, பிற அனைத்தும் ஏதாவதொரு லாபத்தை பற்றி அதன் அடிப்படையில் உருவாகி இயங்குவது என்பது உலகியல் உண்மை .பலவித தலைவர்கள் புழங்கும் புதுவையில் மைய அரசியல் சண்முகத்தை மையப்படுத்தியது . அங்கு யாருக்கும் , எதற்கும் நிரந்தர ஆதரவு என்கிற ஒன்றில்லை , அவரின் ஆதரவும் எதிர்ப்பும் சூழல் மற்றும் நிர்பந்தத்தின் அடிப்படையில் உருவாகி வருவது , சண்முகம் தனது தலைமையை எதிர்ப்பின் மத்தியில் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டு வளர்ந்தவர் என்பதால் எதற்கும் காத்திருக்க கற்றவர் என்பது அவரின் வெற்றிக்கு அடைப்படை என்பதால் அனைவரையும் அரவணைத்து செல்லும் அரசியலுக்கு பழகியவர், அங்கு அவரை சார்ந்து ஒரு அமைப்பு இயங்க வேண்டிய நிர்பந்தமில்லை .
பரந்து விரிந்திருக்கும் அரசியல் களம் பல நூறு முகங்களும் அவர்களின் ஆளுமைகளையும் முயங்கி வெளிவரும் ஒரு உலகு அங்கு நமக்கான ஒன்றை உருவாக்கி எடுக்க முடியும் என்கிற கருத்தியலை எனது நண்பர்களுக்கு புரியவைக்க என்னால் இயலவில்லை என்பதை எனது தோல்வியாக புரிந்து கொண்டேன் .அதே சமயம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குபவர்களை சண்முகத்தை ஒத்துக் கொள்ள வேண்டிய அவசிமில்லை. காரணம் சண்முகம் உள்பட அனைவரையும் அங்கீகரிக்க வேண்டிய தலைமை தில்லியில் இருக்கிறது என்கிற அதன் பிறிதொரு முணை உருவான கருத்தியல் அதன் நம்பகத்தன்மையை சிலர் குலைக்கவே பயன்பட்டது .
1996 ல் வல்சராஜ் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைமை பொறுப்பிற்கு வந்த போது பாலனுடன் பனியாற்றிய அரசியலின் நுட்பத்தை புரிந்து கொண்டிருந்த சிலரும் அரசியலில் நீடிக்க விரும்பி வெவ்வேறு தலைவர்களின் பின்னால் சென்று விட்டனர் .அது பாலன் வெளியேறிய போதே நிகழ்ந்தது. அவர்களையும் அவர்களது நிலைப்பாட்டால் பொதுவான ஒரு கருத்தியிலால் பின்னர் எனக்கு பின்னால் ஒருங்கிணைக்க முடியாமலானது .
வெண்முரசின் களிற்றுயானை நிரை” வாசித்த போது இப்படி ஒரு வரி வருகிறது “இன்று இங்கு வந்து பெருகியிருக்கும் திரள் இறந்தகாலம் அற்றது. அதன் நினைவுகள் அனைத்தும். நிகழ்காலத்திலிருந்து பின்னகர்ந்து கதைகளை நோக்கி படர்கின்றன. அக்கதைகளில் சூதர்கள் அவரைப்பற்றி என்ன சொல்லவிருக்கிறார்கள் என்பதை இப்போது உணர முடியாது. இன்று எல்லாவற்றையும் சொல்கிறார்கள். இவற்றில் எது நிலைகொள்ளும் என காலத்தை ஆளும் தெய்வங்களே முடிவு செய்யமுடியும்”.எண்ணி எண்ணி ஆழ்ந்து போகும் மிக ஆழமாக உணரவைத்த அந்த வரிகளின் வழியாக நடந்து முடிந்த நிகழ்வினை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.