ஶ்ரீ:
பதிவு : 678 / 867 / தேதி 02 மே 2023
* ஊழின் கணக்கு *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 76.
புதுவை இளைஞர் காங்கிரஸ் அரசியல் களம் சண்முகம் மற்றும் கண்ணனுடைய தனிப்பட்ட மோதல்களால் சிதைந்து கிடந்த போது என் போன்றவர்களின் அரசியல் நுழைவு நிகழ்ந்தது. இரு தரப்பும் ஒன்றை ஒன்று தீவிரமாக மறுத்து அதற்கான காரணங்களை முன் வைத்துக் கொண்டிருந்தது. அதன் உண்மைத் தண்மையை அறிந்து கொள்ள முடியாதபடி தொடர் செயல்பாடுகளால் அவை மறக்கப்பட்டன. எனக்கு பாலனுடனான முரணில் சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து பின் சண்முகத்தை ஏற்று அவருடன் இணைந்து பயணித்த போது அங்கு ஒன்றை ஒன்று மறுத்த அனைத்திற்கும் வேறொரு பிரமாணம் கிடைத்தது . ஆனால் உண்மை இரண்டிற்குமான இடைவெளியில் நிலை கொண்டிருந்தது. அதை பிரித்து அறிந்து கொள்ள மிக கவனமாக அவதானித்துக் கொண்டிருந்தேன்.
கண்ணன் மற்றும் பாலனுடைய அன்றைய இளைஞர் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரசிகர் மன்றம் போல கூடி கலைந்து சென்று கொண்டிருக்க அதற்கான அதன் எல்லா அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்டு அதனூடாக மேலேறி வரும் அனைத்து பாதைகள் சண்முகத்தால் தூர்க்கப்பட்டிருந்தன. இளைஞர் காஙகிரஸ் அரசியல் நடவடிக்கை என்பது புதுவையில் துவங்கி எழும் முன்பே காணாமலாகி அவர்கள் செய்யும் எந்த அரசியல் நிகழ்வுகளும் பதிவாகாமல் நின்று விடுவதால் தில்லி அதற்கு எட்டாக் கணி. அதனாலேயே இளைஞர் காங்கிரஸ் கட்சியில் பலர் தில்லிக்கு அறிமுகமில்லாதவர்கள் ஒரு வகை கட்சி அனாதைகள். தன்னை காப்பாற்றிக் கொள்ள மேலதிகமாக சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்களை தான் கண்ணன் நம்பி இருந்தார் . கண்ணன் தன்னை மூப்பானாருக்கு அணுக்கனாக வெளிப்படுத்தியது அவருக்கு அடையாளத்தை கொடுத்திருந்தாலும் அவரது இலக்கு நோக்கிய
நீண்டகால அரசியலில் அது பிழை நகர்வு என்றே நினைக்கிறேன். கண்ணனால் மூப்பனாரை கடந்து தனக்கான அகில இந்திய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.
கோஷ்டி அரசியலுக்கென சில கொடூர முகங்கள் உண்டு. மூப்பனாரை சாந்திருந்தது புதுவை அரசியலில் சண்முகத்திற்கு நிர்பந்தங்களை உருவாக்கவும் தமிழக அரசியலில் அவரது செல்வக்கை குறைக்கவும் மூப்பனாருக்கான வெட்டுக் காயாக மட்டுமே கண்ணன் நிலை கொண்டார் என நினைக்கிறேன் . அதற்கு அப்பால் கண்ணன் மூப்பனாரை வைத்து உருவாக்கிக் கொண்ட நிழல் இடங்களை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. மூப்பனார் கண்ணனுக்கென எதையும் தனிப்பட்டு உருவாக்கி கொடுத்தாக கணக்கிட முடியவில்லை. கண்ணன் பற்றிய அவரின் அவநம்பிக்கை காரணமாக இருந்தால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை. அவர் யாரின் நம்பிக்கைக்கும் இடம் கொடுத்ததில்லை. இந்திரா காந்தியிடம் சண்முகத்திற்கு இருந்த செல்வாக்கு மூப்பனாருக்கு தமிழகத்தில் அரசியல் தடையை அன்று உருவாக்கி இருந்தது. அதை நிர்வாகப் படுத்த சண்முகத்திடம் நல்ல நட்புறவை மூப்பனார் பேண வேண்டியிருந்தது. சண்முகம் நல்ல உரையாடல்காரர் அவரை நோக்கி நீளும் எந்த உரையாடலையும் அவர் மறுப்பதில்லை. அதே சமயம் தன் இருப்பை மிகச் சரியாக வைத்துக் கொண்டது அவரது அரசியல் .
நீண்ட காலம் மூப்பனார் ,கண்ணன் மற்றும் சண்முகம் முக்கோண அரசியல் உறவு நிலைபாடு அதிலிருந்த சாதக பாதகங்களை மனம் அசைபோட்டபடி இருந்ததால் கட்சி தலைவர் சண்முகத்திடம் எனக்கான வாய்ப்பு கிடைத்த போது அரசியலில் இருந்து நான் கற்றவைகளைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் அமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிவு செய்தேன். அதற்கு உள்ள தடைகளை கடந்து செல்ல துவங்கினேன் . அங்கிருந்து எனக்கான புதிய தளங்களை உருவாக்கிக் கொள்ள முயன்றேன். அதில் பல புதிய முயற்சிகளை துவங்க முடிவு செய்ய வேண்டி இருந்தது . கண்ணன் மற்றும் பாலன் இருவரும் தங்கள் அரசியலில் முன்பின் முரணான முடிவுகளால் தங்களை மையப்படுத்தி முன்னெடுத்ததால் மாநில அரசியலில் எழுந்த எதிர்ப்பைக் கடந்து தில்லி சென்று தனி பாதை அவர்களால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. நான் அதிலிருந்து விலகி எனக்கென தில்லியில் ஆதரவு தளங்களை மாநில தலைவர் ஒத்துழைப்புடன் புதிதாக உருவாக்க துவங்கினேன். அதற்கு முன் மாதிரிகள் இல்லை.
எங்களுக்கான அரசியல் களத்தை உருவாக்க நினைத்து துவங்கியது தான் அனைத்து கட்சி இளைஞர் கூட்டமைப்பு. அது உருவாகும் ஏற்ற தருணத்திற்கு காத்திருந்தேன். அரசியல் காத்திருப்பவர்களின் உலகம் என்று நம்புகிறேன். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அது தேவையாவதில்லை என்பது ஒருவித மதிப்பீடு . அது முற்றும் தவறு என நினைக்கிறேன். கையில் இருப்பதை கொண்டு எதையும் அறுதியிட்டுவிட முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த புள்ளியில் நிகழ்த்தும் பிழைகள் அவர்களை மட்டுமின்றி வளர வேண்டிய புதிய இலக்குகளையும் சரிந்து விடுகின்றன். எனக்கு காலம் எடுத்துக் கொடுத்த வாய்ப்பு மத்திய அரசின் சமச்சீர் வரி விதிப்பு அதற்கான திறப்பை கொண்டு வந்தது.
என்னுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த முருகன் இளைஞர் பெருமன்றம் கம்யூனிச இளைஞர் அமைப்பின் மாநில செயலாளர். அவரைத் தான் முதலில் தொடர்பு கொண்டேன். இணைந்து ஏதாவது செய்யலாம் என்பது மையப் பொருள். பொதுவாக காங்கிரஸ் இளைஞர்கள் ஒருவகை மேல்மட்ட சமூகத்தில் இருந்து அரசியல் பொருட்டு லாபமடைய வந்தவர்கள் அதற்கு வெளியே எந்த சமூக பிரக்ஞை அல்லது பொறுப்பு அற்றவர்களாக புரிந்து கொள்ளப் பட்டிருந்தார்கள். அதனால் ஆணவம் மிக்கவர்களாக அறியப்பட்டார்கள். அது ஒரு சில சதவிகிதம் வரை சரி. ஆனால் அவர்கள் அமைப்பின் வழியாக அரசியலுக்குள் நுழையும் போது அந்த சிக்கல்கள் கலையப்பட்டு விடும் என உறுதியாக நினைத்தேன்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பு கண்ணன் மற்றும் பாலனின் ரசிகர் மன்றம் போல பார்க்கப்படுவதை மாற்றியாக வேண்டும் என்பது முதல் இலக்கு. இரண்டு அதன் இளம் தலைவர்கள் தங்களுக்கான அரசியல் புதுக் கணக்குகள் அவர்கள் பெயர்களில் துவங்கப்பட வேண்டும் என நினைத்தேன். அதற்கு தேவையான கட்சி அரசியல் அங்கீகாரம். அதை மாநிலத்தின் பிற இளைஞர் அமைப்பிற்கு இணையாக செயல்பட்டு அவற்றின் கவனம் படவேண்டும் என கணக்கிட்டிருந்தேன். என்னுடன் பயணப்பட்ட பலமும் பலவீனமுமாக இருந்த இளம் தலைவர்களை களத்தில் முன் வைக்க ஆரம்பித்தேன். என் பலம் அவர்கள் என் ஆதரவாளர்கள் அல்லர் என்பதால் உட்கட்சி ஜனநாயக அமைப்பாக அது உருவெடுத்தது. அதே சமயம் அவர்களை முழுமையாக கட்டுப்படுத்தும் கருவிகள் என்னிடம் இல்லை. செயல்களுக்கு நடுவே புரிதலின் வழியாக அந்த கருவியை உருவாக்கிக் கொள்ள முடியும் என நினைத்தேன். அவர்களை முன்னிறுத்தியது என் மீது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்மறை விமர்சனங்களை அது தடுத்தது. அதே சமயம் பலவீனம் அவர்கள் அவர்களின் சொந்த தொகுதி மற்றும் தங்களின் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப செயல்படும் சுதந்திரம் உள்ளவர்களாக இருந்தனர். அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கருத்தியலின் அடிப்படையில் அவர்கள் என் தலைமையில் ஒருங்கு திரண்டிருந்தனர். சண்முகத்தின் தலைமையின் கீழ் செயல்பட்ட என்னை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது அரசியல் நிரபந்தம் என்பதால் எனக்கு முற்றும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். அவர்களின் அரசியல் அனுபவமின்மை அதன் விளையாட்டு சதுரங்கத்தில் அவர்களை திகைப்புறச் செய்து மிக எளிதில் பிழை நகர்வுகளை செய்ய வைத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக