https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வெண்முரசு நூல் 2- மழைப்பாடல், தலைப்பு:- தூரத்து சூரியன் , நீள்நதி.

ஶ்ரீ:




பதிவு : 489 / தேதி :- 27 ஏப்ரல்  2018


வெண்முரசு புதுவை கூடுகை 14

தேதி 26-02-2018
வெண்முரசு நூல் 2- மழைப்பாடல்
பகுதிகள் :- 6 மற்றும் 7
தலைப்பு:- தூரத்து சூரியன் , நீள்நதி.








நண்பர்களே, 


நல்ல சொற்கள் பரவசப்படுத்துபவை , சில நமது ஆழ்மனதை சென்று தொடுபவை , சில புதிய திறப்புக்களை கொடுப்பவை , இவை அனைத்துமாக மானுடத்தை நோக்கி ஏதோ ஒரு புதிய பார்வையை பாதையை காண்பிப்பவை . அந்த சொற்கள் புறவயமாகவும் சிலவற்றை திறக்க வல்லவைகளாக நமது மூதாதைகளால் நம்பப்பட்டு தலைமுறை தலைமுறைகளாக நமக்கு கையளிக்கப்பட்டு வந்திருக்கின்றன , அதிமனுஷமாக நம்பப்படும் இவை இன்றைய நவீன உலகில் எப்படி புரிந்துகொள்ளப்படும் என்பது குறித்து ஒரு சிறுவனுக்குள்ள ஆவல் எனக்கு எப்போதும் உண்டு , அதிமானுஷம் என்கிற சொல் இப்போது பலருக்கு ஒவ்வாமை கொடுத்தாலும் , அது இந்த உலகில் எங்கோ இருந்து கொண்டிருக்கிறது என என்னை எப்போதும் நம்பவைத்து . அதற்கு வலுவான ஒரு தேடல் ஆஸ்மனத்தில் எப்போதும் இருப்பது . அதற்கு கவித்துவமான ஒரு புரிதலை சொல்லுகிறது தூரத்து சூரியன் 


“முனிவர் வியந்து “அதை நீ எப்படிச் செய்தாய்? எப்படி அவளை குரலில்லாமல் அழைத்தாய்?” என்று கேட்டார். நான் “தவசீலரே, அது மிக எளிய ஒரு வித்தை. பெரும்பாலான ஆயர்கள் அறிவார்கள். நாங்கள் தனித்து விலகி காட்டுக்குள் நிற்கும் பசுவை அருகே அழைப்பதற்கு அதன் உடலைக் கூர்ந்து நோக்கி ‘பார், பார், பார்’ என அகத்துக்குள் சொல்லிக்கொள்வோம். நம் அகவல்லமையை முழுக்க அந்தச் சொல்லில் குவித்தால் நாம் பார்வையைக் குவித்திருக்கும் பசுவின் உடற்பகுதியின் தோல் சிலிர்த்து அசையும். பசு திரும்பி நம்மை நோக்கும். நாம் அதன் கண்களைப்பார்த்து அருகே வா என்றால் அருகே வரும்’ என்றேன். ‘சிறுவயதிலேயே இவ்வித்தையை நானும் என் தமையனும் கற்றோம். அதை நான் மானுடரிலும் விரிவாக்கிக் கொண்டேன்’ என்றேன்.”

-“முனிவர் வியப்புடன் “பெண்ணே, நான் இப்போது இச்சுவடியில் கற்றறிந்துகொண்டிருந்ததும் அதே வித்தையைத்தான். சூக்‌ஷ்மகதனம் என்று இதை முனிவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனம் இன்னொரு மனத்துடன் குரலில்லாமலேயே உரையாடமுடியும். அணுக்கள் பூச்சிகள் புழுக்கள் போன்ற சிற்றுயிர்கள் அவ்வாறு ஒன்றோடொன்று உரையாடிக்கொண்டிருக்கின்றன. உயிர்களின் அறிவும் மொழியும் விரிவடையும்தோறும் அத்திறன் இல்லாமலாகிறது. சித்தம் ஒருங்கமைந்த மனிதர்களிடம் அத்திறன் முற்றிலும் இல்லை” என்றார்.

“ஆனால் நம்மனைவருக்கும் உள்ளே நம் அறிவின் அலைகளுக்கு அடியில் அந்த முதற்பேராற்றல் உறைந்திருக்கிறது. குழந்தை அழுவதற்கு ஒருகணம் முன்னரே அன்னை அது அழப்போவதை உணர்ந்துகொள்கிறாள். காதல்கொண்ட மனங்கள் ஒன்றாகின்றன. தியானத்திலமரும் முனிவர்களின் உள்ளங்கள் ஒற்றைப்பெரும்படலமாக ஆகின்றன. சித்த அலைகளை அடக்கி அந்த ஆற்றலை உள்ளிருந்து துயிலெழுப்புவதையே சூக்‌ஷமகதனம் என்று சொல்கிறோம்” என்றார் முனிவர்.

நான் வியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். “அதன்மூலம் மனிதர்களின் உள்ளங்கள் ஒன்றாக முடியும். வேதங்கள் உங்கள் உள்ளங்கள் சுருதியால் ஒன்றாகட்டும் என அறைகூவுவது இதைப்பற்றித்தான். ஆயிரமாண்டுகாலமாக மானுடஞானம் மண்ணுக்கு அடியில் விரிந்திருக்கும் அந்தக் கடலைக் கண்டடைவதற்காகவே முயன்றுகொண்டிருக்கிறது. நான் தவம்செய்யப்போவதும் அந்த ஆலயவாயில் முன்புதான்” என்றார் துர்வாசர்”

“குருவே, உங்கள் ஆய்வை முடித்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். புன்னகையுடன் “ஆம், நான் மூன்று பெரும் சுவர்களை உடைத்திருக்கிறேன். மனிதர்களுக்கு நடுவே இருக்கும் சுவரை முதலில் உடைத்தேன். அடுத்ததாக மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இருக்கும் சுவரைத் தகர்த்தேன். மனிதர்களுக்கும் விண்ணகப் பேராற்றல்களுக்கும் நடுவே இருக்கும் சுவரை இறுதியாக விலக்கினேன்” என்றார்.”

“நான் துர்வாசர் கற்றுத்தந்த அந்த மந்திரத்தைச் சொன்னேன். அது பொருளற்ற ஓர் ஒலியாகவே இருந்தது. அதை மும்முறை சொன்னதுமே அதில் காலையின் முதல்கரிச்சானின் இசை இருப்பதை அறிந்துகொண்டேன். காலைப்பறவைகளின் குரல், முதல்கதிரொளியில் பறக்கும் சிறுபூச்சிகளின் மீட்டல், மலர்கள் மொக்கவிழும் வெடிப்பு, ஒளிர்ந்து சொட்டும் பனியின் தட்டல் என அனைத்தையும் தொகுத்து சுருக்கி ஒரு துளியாக்கியதாக இருந்தது அந்த மந்திரம்.”

“பிருதை சொன்னாள் "ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையை மாற்றும் தருணம் ஒன்று இளமையில் நிகழும். அவ்வண்ணம் இளமையில் நிகழாதவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்பார்கள். நிகழ்பவர்களோ பெருமழையை ஏற்கும் சிறுசெடிபோல அதன் அடியில் துடிக்கிறார்கள். வேர்கள் பறிந்து செல்லாமலிருக்க தவிக்கிறார்கள். என் வாழ்க்கையின் முதன்மைப்பெருநிகழ்வு அது என இப்போது ஐயமில்லாமல் உணர்கிறேன்.”

“விதி அதை ஒருபோதும் எவர் மடியிலும் கொண்டுசென்று போடுவதில்லை தாவினால் கையெட்டும் தொலைவிலேயே நிற்கச்செய்கிறது. தானிருக்கும் இடத்தில் இருந்து எழுந்து தாவாதவர்கள் அதை அடைவதேயில்லை" என்று ரிஷபர் பொதுவாகச் போலச் சொன்னார்.”

“சிலதருணங்களில் வரலாறு என்பது வெறும் வாய்ப்புகளின் விளையாட்டு. வெறும் வாய்ப்புகள். அதை அளிப்பவை மனிதர்களை பகடைகளாக ஆடவைக்கும் விண்கோள்கள்.”

“வசுதேவன் தன் கால்கள் தளர்வதை உணர்ந்தான். அவனுக்கு அந்த உள்ளுணர்வை அளித்தது எது என அப்போதுதான் புரிந்தது. அரண்மனை முகப்பில் சேற்றுப்பரப்பில் பெரிய வண்டி ஒன்று வந்து சென்ற சக்கரத்தடம் தெரிந்தது. அந்தத் தடம் மதுராபுரியில் இருந்தே பாதையில் இருந்துகொண்டிருந்தது.”

“அவள் அவ்வுணர்வுகளை தன் சிந்தையால் அளைந்தாள். அது அனைத்து அன்னையருக்கும் எழும் சாதாரணமான அச்சவுணர்வுதானா? அனைத்து அரசுசூழ் கல்வியையும் அரசபதவியையும் உதறி அவளுக்குள் இருந்து அன்னை என்னும் தூயமிருகம் வெளிவந்து நாசியையும் செவிகளையும் கண்களையும் மட்டும் தீட்டிக்கொள்கிறதா?”



கிருபாநிதி அரிகிருஷ்ணன்

வியாழன், 26 ஏப்ரல், 2018

புதுவை வெண்முரசுக்கூடுகை – 14 மயிலாடுதுறை பிரபு

ஸ்ரீ:


பதிவு : 488 / தேதி :- 26 ஏப்ரல்  2018





புதுவை வெண்முரசுக்கூடுகை  14 
(நாள்: 26.04.2018 / வியாழன்)







அனைவருக்குமென் வணக்கம்

யாங்கள் முன் நாள் ஈட்டிய தவமும் பின் நாள் முயற்சியும் இயைந்தது போல எனச் சொல்வதா அல்லது விதியே நல்கினது போல எனச் சொல்வதா என அறியேன் இக்கூடுகைகைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற அருமருந்தன்ன நண்பர்களை.  அவர்களுள் சமீபத்தியவர் தான் அஞ்சன வண்ணத்தவரும் எமது ஆருயிர் உள்ளத்தவரும் அன்பிற்கினிய எழுத்தாளருமான மயிலாடுதுறை பிரபு அவர்கள்.  ஒவ்வொரு மாதக்கூடுகைக்கும் நூறு கிலோமீட்டர் பயணித்து வந்து பங்குபெற்று நள்ளிரவில் வீடு திரும்பிச் செல்வதெல்லாம் நாடி நரம்பு ரத்தம் சதை அனைத்திலும் இலக்கிய ஆர்வம் ஊறியவர்களுக்கேயுரியது. அவருக்கான நன்றி எப்போதும் நினைப்பிலிருக்கும்.

இம்மாதக் கூடுகையில் மழைப்பாடலின் தூரத்துச் சூரியன் மற்றும் நீள் நதி பகுதிகளை வைத்து பிரபு மிக நேர்த்தியானதோர் உரை நிகழ்த்தினார்.  அதற்கு முன்பாக நண்பர் அரிகிருஷ்ணனது தாயாருக்கு யாவராலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
என்னளவில் நினைவில் நின்றவைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

மார்திகாவதியின் குந்திபோஜனால் துர்வாசரை வைத்து கௌந்தவனம் அமைக்கபெற்றதே ஒரு மாபெரும் அரசியல் முன் நகர்வு எனும் பார்வையில் கொண்டு சென்றார்.

குந்தி ஓர் மாபெரும் அரசு மதிசூழ்பவளாக திகழ அவளது பால்யமே களம் அமைத்து கொடுத்தது.  அதிலும் லவண குலத்தைச் சேர்ந்த அவளது அன்னை மரீஷை ஒடுக்கப்பட்டதிலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் எனும் கோணம்.

குழந்தையை கன்னித்தாயான குந்தி கைவிடுவது எந்நிலையிலும் விரும்பி  எடுத்த முடிவு   போல காட்சிப்படுத்தப்படவில்லை எனினும் அக்குழந்தை தேடியும் கிடைக்கப்பெறாத போது ஒரு அன்னையாக பெருமூச்சோடு கடந்து வருவதும் கூட அக்குழந்தையை காக்குமொருச் செயலே எனும் திறப்பு.
இம்முறை ஊடாடும் உரையாடற்காரர்களான திரு நாகராஜனும் துரைவேல் அவர்களும் வரவியலாத போதும் அப்பணியை மேற்கொண்டது அன்பர் பண்ருட்டி ராதாகிருஷ்ணன்.

வெண்முரசில் குதிரையோடு மட்டுமே ஒப்பிடப்பட்டு வந்த சூரியன் ராஜநாகத்தோடு ஒப்பிடப்பட்டிருக்கும் காரணம் பற்றி நண்பர் தாமரைக்கண்ணன் கேட்டதற்கு ராகுவும் கேதுவும் ஞாயிறையே தலைவனாக கொண்டுள்ளவை என்பது நமது புராண மரபிலேயே உள்ளது என்றும் மேலும் கர்ணனிடமிருந்து வாழ்நாள் முழுக்க வெளிப்படும் அவனது இருநிலையற்ற ஒற்றை சமநிலையும் நன்றியுணர்வும் விஸ்வாசமும் பைரவி அன்னை பால் குடித்ததால் பெறப்பட்டிருக்கும் எனும் நோக்கில் கடலூர் சீனு பேசிய போது சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார






தாமரைக்கண்ணனின் உரை.   

சென்ற பகுதியில் காந்தாரத்தில் இருந்து திருதிராஷ்டிரனுக்கு மகட்கொடை பெறுகிறது அஸ்தினபுரிஇந்தப்பகுதியில் யாதவப்பெண்ணான பிருதை அஸ்தினபுரிக்கு தேரப்படுகிறாள்பாலையின் வேட்டை சமூகத்தில்பெண் பெற்றபின், மேய்ச்சல் சமூகத்தில் பெண் கோருகிறது அஸ்தினபுரியயாதியின் சாபத்தால் பிரிந்து சென்ற துர்வசுவின் கொடிவழி காந்தாரம் யதியின் வழிவந்தவள் யாதவப்பெண்ணான பிருதைசென்றபகுதியின் தமக்கை தம்பிக்கிடையேயான (வசுமதி  சகுனி) புரிதலுணர்வைப் போல இப்பகுதியில் தமையன் தங்கைக்கிடையேயான (வசுதேவன்  பிருதை)  உளப்பரிமாற்றம் கூறப்படுகிறது .  இப்பகுதியின்தொடக்கம் பிருதையின் தோழியான அனகை ஒரு மருத்துவச்சியை (சுருதை) தேடிச்செல்வதாக துவங்குகிறது எப்போதோ சிறுமியாக இருந்தபோது கதவிடுக்கில் வழியே கண்ட அம்முதியவளைபெயர் மட்டுமேதெரிந்த ஊரில் தேடிச்செல்கிறாள் அனகை  
பிருதை முற்றும் தீர்க்கமான முடிவுகளை மட்டுமே எடுக்கிறாள்சிறந்த அரசியல் மதிசூழ்பவளாக திகழ்கிறாள்சிறுமியான அவள் எடுக்கும் கௌந்தவனத்துக்கு செல்லும் முதல் முடிவே சிறந்த அரசியல் முடிவு.அவளது ஒவ்வொரு அடியும் மிகுந்த தைரியத்தோடு வைக்கப்படுபவைமருத்துவச்சி  நான் உன் ரகசியத்தை அறிவேன் என்றவுடன் அதனாலேயே நீ ஆபத்திலுள்ளாய் என்ற மறுமொழியில் மூலம் ஒடுங்கச்செய்துவிடுகிறாள்கருக்கலைப்புக்கு எந்த மயக்க மருந்தும் தேவையில்லை என்று சொல்லிவிடுகிறாள்அம்முதியவள் இறந்த அடுத்த கணம் வசுதேவனுக்கு தகவல் அனுப்புகிறாள்இதையெல்லாம் அவள் முன்பேமுடிவெடுத்து வைத்திருக்கிறாள்.  கர்ணனை அவள் கைவிடுவதும் கூட முன்பே எடுக்கப்படும் முடிவுதான்.   



அன்புடன் 


_ மணிமாறன் 

புதன், 25 ஏப்ரல், 2018

சாட்சி மட்டுமே -1

ஶ்ரீ:



பதிவு : 487 / தேதி :- 25 ஏப்ரல்  2018



சாட்சி மட்டுமே -1





கடந்த சில ஆண்டுகள்  தொடர் நிலையழிதலின் காரணமாக  தூக்கம், மாத்திரைகளால் தூண்டப்படுவதால் காலை விழிப்பு சற்று நேரம் கழித்தே எனக்கு நிகழ்கிறது . அன்று காலை கனவுக்கும் நனவுக்கும் இடையிலான ஒன்று , என்னிடம் தன் காரியத்தை சாதிக்க நினைத்தால் அம்மா அந்த நேரத்தைத்தான் பயன்படுத்துவார்  . நான் கண் விழிக்கும் நேரத்தில் தனது உடல் பாரத்தை “மொத்தென” என் கட்டிலில்  உட்கார்ந்து கடத்தும்போது ஏற்படும் வழமையான ஒரு அதிர்வு உணர்வை பெற்றேன் . பாதி தூக்கத்தில் திரும்பாமலே அவருடன் பேச துவங்கினேன் . “என்ன கிளம்பியாச்சா? உனக்கு இதுவரை வார்த்தைகளில் சொன்னது   புரியாதது அனைத்தும்  , இப்போது புரியும். புறப்படு நானும் வெகு விரைவில் உனக்கு பின்னல் வருகிறேன்” என்றேன். அது கனவில்லை என்று எங்கோ உணர்ந்த கணத்தில் , மனைவி பதட்டத்துடன் விம்மியபடி “மாமி எழுப்பினால் எழுந்திருக்க மாட்டேன் என்கிறார்கள்” என்றதும் . அனைத்தும் களைந்து சட்டென கிழே இறங்கி ஓடினேன் . 

அம்மா முதல்நாள் இரவு 1:30 மணிக்கு பார்த்த அதே ஈஸி சேரில் படுத்தபடி , கைகள் இறுகி விடைத்திருக்க மெல்ல   மரணித்துக் கொண்டிருந்தார் . உடலின் சூடு முதலில் அவர் மயக்கமடைந்து விட்டதாக பிழை புரிதலை எனக்கு கொடுத்தது . மருத்துவர் வந்து அவர் மண்மறைந்ததை சொன்னார். அதன் பின்னர் நடந்த அனைத்திற்கும் ஒரு மௌன சாட்சியாக நின்று கொண்டிருந்தேன் . காலத்தால் அவற்றை கடந்து சென்று கொண்டே இருக்கிறேன் . அவரது இந்த நாளை நான் எங்கோ ஆழத்தில் உணர்ந்திருந்தேன். 

முதல்நாள் முழுவதுமாக அதை எப்படியோ அறிந்திருந்தேன் . கடந்த சில மாதங்களாக அதேபோல ஒன்றை எனது கட்டுப்பாடில்லாத ஒரு சிந்தனையின் இழை எப்போதும் இருந்து கொண்டிருந்தது . ஆனால் இன்று அப்படியல்ல என்றது அது. மாறுதல்கள் எப்போதும் உற்சாகத்தை தருவதில்லை, சில சமயம் வருத்தமளிப்பதாக கூட நிகழ்ந்துவிடுகிறது , அது வயதையும் அனுபவத்தையையும் அடிப்படையாக கொண்டவை போலும் , அம்மா மண்மறைந்த பிறகு என்னை சுற்றி தொடர்ந்து நிகழ்ந்து வரும் மாறுதல்களை அவதானித்தபடி இருக்கிறேன் . இது நான் இதுவரை வாழாத காலம்போல இருக்கிறது .  அது நாள்வரை அனைத்தும் அவரை மையப்படுத்தியே இருந்திருக்கிறது . 

அவருடன் எனக்கு முரண்பாடுகள் தோன்றிய பிறகு, அனைத்திலிருந்தும் உரையாடலுக்கு வழியில்லாது விலகி முற்றும் மூடிய சுவர்களுக்குள் தன்னை அடைத்துக்கொண்டார் . பின் எப்போதும் அவருடன் விவாதிக்க முடியமலானது. தாய் மகன் உறவை இந்த எல்லைக்கு கொண்டு வரப்பட்டதின் அழுத்தம் எனக்கு பெரும் நிலையழிதலை கொடுத்திருந்தது.

2010 களில் நான் அம்மாவுடன் முற்றாக முரண்பட்டு போனேன். காரணங்கள் என இரு தரப்பிலும் எதாவது ஒன்று இருந்துதான் ஆக வேண்டும் , அது இப்போது அவசியமில்லாத்து  . அது எனக்கு விதிக்கப்பட்டது . நடந்தேறியது . அதை எனக்கு செய்ய காலம் அம்மாவை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம் . அவரை இங்கு கொண்டுவந்த நிறுத்திய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக எனது நினைவிலிருந்து அழிந்து கொண்டே இருக்கிறது . அதற்கு காரணமானவர்களும் காணாமலாகி வருகிறார்கள்

“ஒவ்வொன்றும் எங்கோ நிகர் செய்யப்படுகின்றன. இன்பம் துன்பத்தை, துன்பம் இன்பத்தை, நன்மை தீமையை, தீமை நன்மையை நிகர்செய்கிறது. துயர்வரின் இன்பம் ஒருங்கிக்கொண்டிருக்கிறது என மகிழ்க. இரவு சூரியனை கரந்திருப்பதுபோல பகலில் இரவு நிழலென குடியிருப்பதுபோல. இன்பதுன்பங்களினூடாகச் சென்று நிறைவடையும் வாழ்க்கையின் ஒட்டுமொத்தமே அதன் பயன். துலாநிலைகொள்ளும் கணமே எடைகாட்டுவது.”

“இப்பெரும் களத்தில் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒரு துளி. அது பிறிதொரு வாழ்க்கையால் நிகர்செய்யப்பட்டிருக்கும். அவ்வண்ணம் முடிவிலா கோடி நிகர்களால் ஆனது இவ்வாழிச் சுழல். அதன் இலக்கை, விசையின் நெறியை, மையத்தை நாம் முழுதறியவியலாது. ஆனால் அறியும் ஒவ்வொன்றிலும் அதை உணரமுடியும். அந்நெறியை ஏற்று அவ்விசைக்கு தன்னை அளித்துக்கொள்க. அவ்வாறு முழுதளிக்கையில் அவ்விசையின் இலக்கும் பொருளுமே நம்முடையதுமென தெளிவோம். நாமென்று நாம் யாத்துள்ள எண்வகை பூண்களைக் களைந்து அவ்விசையே நாமென்று அறிந்து அமைவதே இறுதி. அதுவே முழுமை.” என்கிறது வெண்முரசின் இமைக்கணம் .


காலம் தன்னை  ஒவ்வொரு கணத்திலும் புதுப்பித்துக்கொள்வது போல வீடு .  ஒரு மனைதனைப்போல அது நான் பார்த்துக்கொண்டிருக்க தன்னை புதுப்பித்துக்கொண்டே வருவதை ஒரு சாட்சியாக  பார்த்தபடி இருக்கிறேன் .அன்று காலை பூஜையில் நம்மாழ்வாரின் பாசுரம் ஒலித்த அந்த கணம் மனம் நெகிழ்ந்து விழிநீர் பெருக்கினேன் . இனி ஆற்றுவதற்கு ஒன்றியலை என தோன்றியபோது , எனது சரணாகதியை வைத்தேன் , அது அங்கீகரிக்கப் பட்டதாக சூசனம் கிடைத்ததும் , நிறைவடைந்தேன் . இனி வாழவேண்டிய வாழ்வை நோக்கிய பார்வையுடன் வெளிவந்தேன் . இரண்டு வருடத்திற்கு மேல் இல்லை என நிவாஸிடம் சொன்னபோது எப்படி தெரியும் என என்னிடம் கோபித்துக் கொண்டான் . இப்போது அவனிடம் சொல்ல என்னிடம்  ஒன்றில்லை , எனது மனக்கணக்குகள் பொய்ப்பதில்லை , ஆகவே காரணங்களை நான் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 319 * நிழலின் உரிமை *


ஶ்ரீ:



பதிவு : 319 / 486 / தேதி :- 24 ஏப்ரல்  2018


* நிழலின்  உரிமை *




நெருக்கத்தின் விழைவு ” - 14
விபரீதக் கூட்டு -04





சென்னைக்கு ஒரு வேலை விஷயமாக செல்ல இருப்பதாய் ஆனந்த பாஸ்கரிடம் சொன்ன போதுதான் , நாளை அவரும்  சென்னை செல்ல இருப்பதை சொன்னார் . என்னை தன்னுடன் வருமாறு அழைத்தார் . சொன்னபடி மறுநாள் அதிகாலை அவர் எனது வீட்டிற்கு வந்தபோதுதான் வண்டியில் வைத்தியநாதன் அமைந்திருப்பதை பார்த்தேன் . அப்போதெல்லாம் அவருடனான எனது உறவு அகலாது அணுகாது தீக்காய்வாராக  இருந்தது . ஒரு நட்பார்ந்த  புன்னகையுடன் என்னை பார்த்ததும் நான் அவருக்கு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்

ஆனந்த பாஸ்கரன் எப்போதும் காருக்கு ஓட்டுநர் வைத்துக்கொள்வதில்லை . அவரே ஓட்டுவதுதான் தனக்கு உகந்தது என்பார் , அன்றும் அவரேதான் ஓட்டிவந்தார் . பயண துவக்கத்தில் வைத்தியநாதன் என்னிடம் சற்றும் முகம் கொடுக்காத போக்கே கையாண்டார், ஆனால் திண்டிவனம் தண்டுவதற்குள்ளாக  , அவர் அதுவரை அணிந்து கொண்டிருந்த முகமூடி கழன்று போனது . ஆனந்த பாஸ்கர் எப்போதும் வெளிப்படையான பேச்சை கொண்டிருப்பவர் . அது பெரும்பாலும் அரசியலில் ஒன்று நினைத்து ஒன்று செய்த காரியங்களும் ,அதன் பின்விளைவுகளும் ,நடந்தபின் அவற்றை நினைத்துப் பார்பது நகைச்சுவையின் உச்சம் . ஆனால் அதில் இளிவரள் தொணி ஒலிப்பது ஆபத்தை வலிந்து அழைப்பது.

வைத்தியநாதனை கலாய்த்து நகைச்சுவையும் பகடி பேச்சும் வெடி சிரிப்புமாக யாரை பற்றியும் கவலை கொள்ளாது பேசும் போக்குடையவர் ஆனந்த பாஸ்கர். எல்லோரிடமும் வைத்தியநாதன்  காட்டும் முகத்தை ஏனோ இங்கு அவரால்  காட்ட முடியவில்லை . ஒரு கட்டத்திற்கு மேல் ஆனந்த பாஸ்கரினின்  நகைசுவை பேச்சு உச்சகட்டத்தை அடைந்த போது , என்னால் அதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை நானும் அந்த சிரிப்பில்  கலந்து கொண்டேன் .

சென்னை வந்ததும் அவரவர் வேலை நிமித்தமாக பிரிந்து சென்று , அன்று இரவு சவேரா ஹோட்டலுக்கு நான் தனித்து வந்தபோதுவைத்தியநாதன் மட்டும் அங்கு அமர்ந்து  தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார் , ஆனந்த பாஸ்கரன் இன்னும் அறைக்கு திரும்பி இருக்கவில்லை. என்னை கண்டதும் மிகவும் நட்புடன் பேசத்துவங்கினர். அது காலை ஆனந்த பாஸ்கர் அவரை கலாய்த்ததற்கு தன் தரப்பு நியாயமாக  அவை இருந்தன . எனக்கும் ஆனந்த பாஸ்கருக்குமான நட்பு , அவரிடம் சில மாற்றத்தை கொண்டு வந்திருந்தன . அவர் என்னிடம் பேசிய முறையில் இருந்து ஆனந்த பாஸ்கருடன் அவர் முரண்பட முடியாத சிக்கலை ஏதோ இருப்பதாக நான் உணர்ந்தேன். அதன் பிறகு எனக்கும் அவருக்குமான உறவில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தான் நினைத்ததை நிகழ்த்த அவர் தயங்குவதல்லை என்பது இப்போது பார்த்தாகிவிட்டது.


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...